search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உ.பி. எம்.பி. தொகுதி இடைத்தேர்தல்- அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் முன்னிலை
    X

    உ.பி. எம்.பி. தொகுதி இடைத்தேர்தல்- அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் முன்னிலை

    • ராஜஸ்தான் மாநிலம் சர்தர்ஷாகர் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. அந்த கட்சி வேட்பாளர் அனில்குமார் சர்மா 24,404 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளது.
    • ராஷ்டிரிய லோக்தந்தரிக் கட்சி வேட்பாளர் லால்சந்த் 15,713 ஓட்டுகளும் பா.ஜனதா வேட்பாளர் அசோக்குமார் 15,495 ஓட்டுகளும் பெற்று அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

    புதுடெல்லி:

    சமாஜ்வாடி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம் சிங் கடந்த அக்டோபர் 10-ந்தேதி மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அவரது எம்.பி. தொகுதியான மெய்ன்பூரி கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது.

    மெய்ன்பூரி எம்.பி. தொகுதியில் மறைந்த முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டார். பா.ஜனதா சார்பில் ரகுராஜ் சிங் நிறுத்தப்பட்டார்.

    இந்த எம்.பி. தொகுதி இடைத்தேர்தலுடன் 5 மாநிலங்களில் உள்ள 6 சட்டசபை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடந்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் ராம்பூர், கதவுலி, ஒடிஷாவில் உள்ள பதம்பூர், ராஜஸ்தானில் உள்ள சர்தர்ஷாகர், பீகாரில் குர்ஹானி மற்றும் பானு பிரதாப்பூர் (சத்தீஸ்கர்) ஆகிய சட்டசபை தொகுதிக்கும் 5-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.

    தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    மெய்ன்பூரி தொகுதியில் தொடக்கத்தில் இருந்தே அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் முன்னிலையில் இருந்தார். அவர் பா.ஜனதா வேட்பாளரை விட 1,400 வாக்குகள் கூடுதல் பெற்று இருந்தார்.

    நேரம் செல்ல செல்ல அவர் அதிகமான ஓட்டுகளை பெற்றார். பா.ஜனதா வேட்பாளர் நெருங்க முடியாத அளவு முன்னிலை பெற்றார்.

    12.30 மணி நிலவரப்படி டிம்பிள் யாதவ் 1.40 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அவர் 2 லட்சத்து 50, 744 வாக்குகள் பெற்று இருந்தார். பா.ஜனதா வேட்பாளர் ரகுராஜ் சிங் 1,05,014 ஓட்டுகள் பெற்று இருந்தார்.

    இதனால் இந்த தொகுதியில் டிம்பிள் யாதவ் வெற்றி பெறுகிறார். இதன் மூலம் மெய்ன்பூரி தொகுதியை சமாஜ்வாடி தக்க வைத்துக் கொள்கிறது. 1996-ம் ஆண்டு இருந்து சமாஜ்வாடி அந்த தொகுதியில் தோற்கவில்லை.

    உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த 2 சட்டசபை இடைத்தேர்தலிலும் சமாஜ்வாடி கட்சியே முன்னிலையில் இருக்கிறது.

    ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளரும், ஆசம்கானுக்கு நெருக்கமானவருமான அசிம் ராஜா 13,080 ஓட்டுகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜனதா வேட்பாளர் சக்சேனா 6,903 ஓட்டுகள் பெற்று பின்தங்கி இருந்தார்.

    உத்தரபிரதேசத்தில் உள்ள மற்றொரு தொகுதியான கதவுலியில் சமாஜ்வாடியின் கூட்டணியான ராஷ்டிரிய லோக்தளம் கட்சி முன்னிலையில் உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் சர்தர்ஷாகர் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. அந்த கட்சி வேட்பாளர் அனில்குமார் சர்மா 24,404 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளது. ராஷ்டிரிய லோக்தந்தரிக் கட்சி வேட்பாளர் லால்சந்த் 15,713 ஓட்டுகளும் பா.ஜனதா வேட்பாளர் அசோக்குமார் 15,495 ஓட்டுகளும் பெற்று அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

    பீகார் மாநிலம் குர்ஹானி தொகுதியில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி வேட்பாளர் மனோஜ்சிங் குஷ்வாகா 49,435 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜனதா வேட்பாளர் குப்தா 47,810 ஓட்டுகள் பெற்று உள்ளார்.

    ஒடிசா மாநிலம் பதம் பூரில் ஆளும் பா.ஜனதா தளம் முன்னிலையில் இருக்கிறது. அந்த கட்சி 10 சுற்று முடிவில் 54,173 ஓட்டுகள் பெற்று இருந்தது. பா.ஜனதாவுக்கு 34,748 வாக்குகள் பெற்று பின்தங்கி இருந்தது.

    சத்தீஷ்கர் மாநிலம் பானு பிரதாப்பூரில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது.

    மொத்தம் உள்ள 6 சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ்-2, சமாஜ் வாடி-1, ஐக்கிய ஜனதாதளம்-1, பிஜூ ஜனதா தளம்-1, ராஷ்டிரிய லோக்தளம்-1 ஆகியவை முன்னிலையில் உள்ளன.

    பா.ஜனதா ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை. அந்த கட்சிக்கு இடைத்தேர்தல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×