search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியருக்காக பள்ளி மாறிய 133 மாணவர்கள்- நெகிழ்ச்சி சம்பவம்
    X

    இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியருக்காக பள்ளி மாறிய 133 மாணவர்கள்- நெகிழ்ச்சி சம்பவம்

    • ஆசிரியர் சீனிவாஸ் தனது அன்பால் ஒவ்வொரு மாணவரையும் ஆசிரியர் சீனிவாஸ் கட்டிப்போட்டார்.
    • கண்டிப்பும், கனிவும் அவரது தனிச்சிறப்பாக இருந்தது.

    ஆசிரியப்பணி அறப்பணி... அவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்கள், நாளைய இந்தியாவை உருவாக்கும் சிற்பிகள்.

    ஒரு மாணவனோ, மாணவியோ தங்களது பெற்றோர்களைவிட அதிக நேரம் ஆசிரியரின் கண்காணிப்பிலேயே அதிகம் உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.

    பல ஆசிரியர்கள் தங்கள் பணியை மாணவர்களுக்காக அர்ப்பணித்து, மாணவர்களிடம் மட்டுமல்ல அந்த பகுதி மக்களிடமும் நன்மதிப்பை பெற்று விடுகிறார்கள்.

    குறிப்பாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் சில ஆசிரியர்கள், வகுப்பறையில் பாடம் கற்றுக்கொடுப்பதையும் தாண்டி, ஒவ்வொரு மாணவர்களின் உயர்வுக்கும் தனிப்பட்ட முறையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.

    இதனால் அவர்கள் அந்த பள்ளியில் இருந்து மாறுதலாகி செல்லும்போதோ, பணி ஓய்வு பெற்று செல்லும்போதோ மாணவர்கள் அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழும் நெகிழ்ச்சி சம்பவங்கள் பல முறை நடந்து உள்ளது.

    அதுபோன்ற நெகிழ்ச்சி சம்பவம் தெலுங்கானா மாநிலத்திலும் நடந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டம் பொனகல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியவர் ஜே.சீனிவாஸ் (வயது53).

    இவர் அந்த பள்ளியில் 12 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியுள்ளார். அந்த பள்ளியின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலனில் அதிக கவனம் எடுத்து பணியாற்றினார். அவர் பணியில் சேர்ந்தபோது அந்த பள்ளியில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் இருந்தனர்.

    தனது முயற்சியால் அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் சென்று கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறி அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தார்.

    தனது அன்பால் ஒவ்வொரு மாணவரையும் ஆசிரியர் சீனிவாஸ் கட்டிப்போட்டார். மாணவர்களும் அவரை தங்களின் பாசத்துக்குரியவராகவே பார்த்தனர். ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட அக்கறை எடுத்தார். கண்டிப்பும், கனிவும் அவரது தனிச்சிறப்பாக இருந்தது.

    இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆசிரியர் சீனிவாஸ் அக்கபெல்லிகுடாவில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

    இதனால் பொனகல் அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வந்த அந்த பிஞ்சு மாணவர்கள் மிகவும் தவித்துபோய்விட்டனர்.

    அவரை பிரிய மனமில்லாமல் அழுதனர். மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியரின் பணியிட மாறுதலை திரும்ப பெற அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    அதற்கெல்லாம் வழியில்லை. இடமாறுதல் உத்தரவை திரும்ப பெற வாய்ப்பு இல்லை என்று கல்வித்துறை அதிகாரிகளும் தெரிவித்தனர்.

    ஆசிரியர் சீனிவாசின் பிரிவால் ஏங்கிய மாணவர்களை தேற்ற முடியாமல் இருந்த பெற்றோர்கள் ஒரு முடிவு செய்தனர்.

    ஆம்... அந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வந்த 250 மாணவர்களில் 133 பேர், அந்த பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்றுக்கொண்டு, 3 கி.மீ. தொலைவில் அக்கபெல்லிகுடாவில் உள்ள பள்ளியில் சேர்ந்துவிட்டனர்.

    இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட தெலுங்கானா மாநில மக்களில் பலர், இப்படியும் ஒரு ஆசிரியரா... நமக்கு கிடைக்கவில்லையே என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

    Next Story
    ×