search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    துணை சபாநாயகர் பதவியை பா.ஜ.க. விட்டுக்கொடுக்க மறுப்பு
    X

    துணை சபாநாயகர் பதவியை பா.ஜ.க. விட்டுக்கொடுக்க மறுப்பு

    • பாராளுமன்றம் வருகிற 24-ந்தேதி கூடுகிறது.
    • தற்காலிக தலைவராக (சபாநாயகர்) தேர்வு செய்யப்பட உள்ளார்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமை யில் பாஜ.க. கூட்டணி அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில் பாராளுமன்றம் வருகிற 24-ந்தேதி கூடுகிறது.

    இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    24 மற்றும் 25-ந்தேதிகளில் 2 நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பார்கள். பாராளுமன்ற மரபுபடி சபையின் மூத்த உறுப்பினரை தற்காலிக தலைவராக தேர்வு செய்வார்கள். அந்த வகையில் தற்போது கேரள மாநில மேவலிக்கரா தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கும் காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் தற்காலிக தலைவராக (சபாநாயகர்) தேர்வு செய்யப்பட உள்ளார்.

    அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதன் பிறகு சுரேஷ் எம்.பி. தற்காலிக சபாநாயகராக இருந்து புதிய எம்.பி.க்கள் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

    எம்.பி.க்கள் அனைவரும் பதவி ஏற்று முடித்ததும் பாராளுமன்றத்துக்கு புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சி கேட்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் சபாநாயகர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் விரும்பவில்லை.

    எனவே சபாநாயகர் பதவியை பாரதீய ஜனதா தக்கவைத்துக்கொள்ளும் என்று உறுதியாகி இருக்கிறது. ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான புரந்தேஸ்வரி 6 தடவை எம்.பி.யான ராதா மோகன்சிங், முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா ஆகிய 3 பேரில் ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

    ஓம்பிர்லா மீண்டும் சபாநாயகராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன. தெலுங்கு தேசம் வலியுறுத்தும் பட்சத்தில் ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். யாருக்கு சபாநாயகர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் என்பது 25-ந்தேதி தெரிந்து விடும்.

    அன்று பிரதமர் மோடி சபாநாயகர் பெயரை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. 26-ந்தேதி சபாநாயகர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இதற்கிடையே துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதை பா.ஜ.க. ஏற்க மறுத்துள்ளது.

    துணை சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்க பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது. இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை பா.ஜ.க. மேலிடம் நியமனம் செய்துள்ளது.

    ராஜ்நாத்சிங் கூட்டணி கட்சிகளுடன் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஓரிரு நாட்களில் இதில் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×