என் மலர்
இந்தியா
சம்பல் விவகாரம்: போலீசை பாராட்டிய மனைவியை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்த கணவர்
- மசூதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
- நிடாவின் புகார் தொடர்பாக மொராதாபாத் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சாஹி பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு நடந்தது. மேலும் மசூதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் மெராதாபாத்தை சேர்ந்த நிடா என்ற பெண், சம்பாலில் நடைபெற்ற சம்பவத்தில் போலீசாரின் செயலை பாராட்டியதற்காக அவரது கணவர் முத்தலாக் (விவாகரத்து) கொடுத்ததாக பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிடா தனது கணவர் எஜாசுல் மீது அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் ஒரு திருமணத்திற்காக சம்பல் பகுதிக்கு செல்ல வேண்டியது இருந்தது. மேலும் எனக்கு அங்கு சில தனிப்பட்ட வேலைகளும் இருந்தன. இதனால் நான் அங்கு செல்வது பாதுகாப்பானதா என்று சம்பல் சம்பவம் தொடர்பான வீடியோவை பார்த்து கொண்டிருந்தேன்.
அப்போது எனது கணவர் ஏன் வீடியோவை பார்க்கிறாய் என கேட்டார். மேலும் இதை தவறு என கூறிய அவர் நீங்கள் போலீசாரின் செயலை ஆதரிக்கிறீர்கள் எனக்கூறி என்னிடம் தவறாக நடந்து கொள்ள தொடங்கினார். மேலும் இனி உன்னை வைத்திருக்க மாட்டேன் என கூறியோடு முத்தலாக் (விவாகரத்து) என தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிடாவின் புகார் தொடர்பாக மொராதாபாத் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.