search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒப்பந்தம் பெற ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார்.. அதானி குழுமம் விளக்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஒப்பந்தம் பெற ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார்.. அதானி குழுமம் விளக்கம்

    • இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கவுதம் அதானி மீது குற்றச்சாட்டு
    • அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    சூரிய மின்சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதன் காரணமாக, கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    இந்த குற்றச்சாட்டினால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் அதானி குழும நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ₹2 லட்சம் கோடி வரை சரிவை சந்தித்துள்ளது.

    அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து அதானி குழுமம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், அதானி கிரீன் நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கிறோம்.

    அமெரிக்க நீதித்துறை கூறியது போலவே, "குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்றே அழைக்கப்படுவார்கள்." சாத்தியமான அனைத்து சட்ட வழிகளும் நாடப்படும்.

    அதானி குழுமம் எப்பொழுதும் அதன் செயல்பாடுகளின் அனைத்து அதிகார வரம்புகளிலும் மிக உயர்ந்த தரமான நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை பராமரிப்பதில் உறுதியாக உள்ளது.

    நாங்கள் சட்டத்தை மதிக்கும் அமைப்பு மற்றும் அனைத்து சட்டங்களுக்கும் முழுமையாக இணங்குகிறோம் என்பதை எங்கள் பங்குதாரர்கள், பார்ட்னர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்.

    Next Story
    ×