search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு- வனத்துறைக்கு எதிராக மக்கள் விடிய விடிய போராட்டம்
    X

    யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு- வனத்துறைக்கு எதிராக மக்கள் விடிய விடிய போராட்டம்

    • யானை விரட்டிச் சென்று எல்தோசை பிடித்து தாக்கியது.
    • இன்று அதிகாலை 2 மணி வரை போராட்டம் நீடித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வனப்பகுதி அருகே ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது வன விலங்குகள் தாக்குதலை சந்தித்து வருகின்றனர். இதில் சில நேரம் உயிர்ப்பலியும் நடந்து வருகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சூரை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி ஆன்மேரி, தனது ஆண் நண்பருடன் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது யானைகள் கூட்டமாக வந்துள்ளன. அவர்கள் வேகமாக சென்றபோது, யானை முட்டித் தள்ளிய மரம் சாய்ந்து விழுந்தபோது ஆன்மேரி அடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சோகம் மறைவதற்குள் அதே பகுதியில் யானை தாக்கி தொழிலாளி ஒருவர் இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொத்தமங்கலம் அருகே உள்ள கொடியாட்டு பகுதி யை சேர்ந்தவர் எல்தோஸ் (வயது 45), தொழிலாளி. இவர் வேலை முடிந்து தனது நண்பருடன் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார். வீட்டிற்கு சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, காட்டுயானை வழிமறித்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். ஆனால் அந்த யானை விரட்டிச் சென்று எல்தோசை பிடித்து தாக்கியது. இதில் உடல் பாகங்கள் சிதறிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.

    அவர்கள் வனத்துறையை கண்டித்து போராட்டத்தில் இறங்கினர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் எல்தோஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் பொதுமக்கள் உடலை எடுக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வருகிறோம். இது பற்றி பலமுறை புகார் கூறியும் வனத்துறை அலட்சியமாக உள்ளது என குற்றம்சாட்டினர். இன்று அதிகாலை 2 மணி வரை போராட்டம் நீடித்தது. அந்த பகுதியில் அகழிகள், வேலிகள் அமைப்பது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வருகிற 27-ந் தேதி எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    அதன்பிறகு போலீசார், பலியான எல்தோஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் எல்தோஸ் குடும்பத்தினரிடம் இன்று காலை அரசின் ரூ.10 லட்சம் இழப்பீடுக்கான காசோலையை வழங்கினார்.

    Next Story
    ×