search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அவசியம் என்றால் எடியூரப்பா கைது செய்யப்படுவார்: கர்நாடக மாநில மந்திரி சொல்கிறார்
    X

    அவசியம் என்றால் எடியூரப்பா கைது செய்யப்படுவார்: கர்நாடக மாநில மந்திரி சொல்கிறார்

    • 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் புகார்.
    • கர்நாடகா மாநில போலீசார் இந்த வழக்கை சிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

    பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அந்த பெண் புகார் அளித்திருந்தார்.

    அதன்அடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கர்நாடக மாநில டிஜிபி அலோக் மோகன் இது தொடர்பான வழக்கை சிஐடி-க்கு மாற்றினார்.

    சிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் எடியூரப்பா கைது செய்யப்படுவாரா? என கேட்கப்பட்ட கேள்விக்கு கர்நாடக மாநில உள்துறை மந்திரி ஜி. பரமேஷ்வரா பதில் அளித்தார்.

    இது தொடர்பாக ஜி. பரமேஷ்வரா கூறியதாவது:-

    நடைமுறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை ஜூன் 15-ந்தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். சிஐடி போலீசார் அதற்கு முன்னதாகவே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விடுவார்கள். அதன்பின் அவர்கள் நடைமுறையை பின்பற்றுவார்கள்.

    எடியூரப்பாவின் வாக்குமூலத்தை பெறுவார்கள். அவசியம் என்றால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார். அது அவசியமா என்று என்னால் சொல்ல முடியாது. சிஐடி அதிகாரிகள் சொல்வார்கள். அவர்கள் அவசியம் என்று உணர்ந்தால், அதை செய்வார்கள்.

    இவ்வாறு ஜி. பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    எடியூரப்பா பாஜக கட்சியின் பாராளுமன்ற குழு உறுப்பினராக உள்ளார். தற்போது அவர் டெல்லியில் உள்ளார். கர்நாடகா திரும்பிய பிறகு சிஐடி விசாரணைக்கு செல்வார் என, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    எடியூரப்பாக மீது புகார் அளித்த 54 வயதான பெண், கடந்த மாதம் தனியார் மருத்துவமனையில் நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

    81 வயதான எடியூரப்பா பெண்ணின் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த நிலையில், சட்டப்பூர்வமாக இந்த வழக்கை எதிர்கொள்வேன் எனத் தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் சிஐடி அதிகாரிகள் எடியூரப்பாவின் குரல் மாதிரியை சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×