search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இளைஞர் காங்கிரஸ் பேரணியில் வன்முறை: பெண்களின் உடை-தலைமுடியை பிடித்து இழுத்ததால் பரபரப்பு
    X

    இளைஞர் காங்கிரஸ் பேரணியில் வன்முறை: பெண்களின் உடை-தலைமுடியை பிடித்து இழுத்ததால் பரபரப்பு

    • மாநில தலைமைச் செயலகம் மற்றும் 564 போலீஸ் நிலையங்களை நோக்கி பேரணியும் நடத்தப்பட்டது.
    • காங்கிரஸ் மாநில துணை தலைவர் அரிதாபாபு உள்ளிட்ட பெண் தலைவர்களின் உடைகள் மற்றும் தலைமுடியை பிடித்து இழுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் மக்களை சந்தித்து குறைகளை கேட்கும் நவகேரள சதஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போது முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக சில இடங்களில் இளைஞர் காங்கிரசார் மற்றும் கேரள மாணவர் சங்கத்தினர் கருப்புக் கொடி காட்டினர்.

    அப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. மாநில தலைமைச் செயலகம் மற்றும் 564 போலீஸ் நிலையங்களை நோக்கி பேரணியும் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தலைமை செயலகம் நோக்கி சென்ற பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. போலீசாரை நோக்கி கற்கள் மற்றும் செருப்புகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பேரணியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பேரணியில் சென்றவர்கள் தடையை மீறி முன்னேறி செல்ல முயன்றனர்.


    இதனால் போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். கூட்டத்தை கலைக்க பேரணியில் பங்கேற்றவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. இதனால் பேரணியில் பங்கேற்றவர்கள் சிதறி ஓடினர். அந்த பகுதி கலவர பகுதி போல் காணப்பட பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி பேரணியில் பங்கேற்றவர்கள் கூறுகையில், போலீசார் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். காங்கிரஸ் மாநில துணை தலைவர் அரிதாபாபு உள்ளிட்ட பெண் தலைவர்களின் உடைகள் மற்றும் தலைமுடியை பிடித்து இழுத்தனர். இதனால் தான் அங்கு பிரச்சினை உருவானது என்றனர். மேலும் போலீசாரின் தாக்குதலால், கட்சியினர் சிலர் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து இளைஞர் காங்கிரசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் அமைப்பினர் சிலரை போலீசார் பிடித்து வைத்துள்ளதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.

    தொடர்ந்து கட்சியினரிடையே பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் சதீசன், நவகேரள சதஸ் நிகழ்ச்சியின் போது மாவட்டம் தோறும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்றார்.


    அவரது பேச்சுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுக்கும், அதன் வெளிப்படை திட்டத்துக்கும் எதிராக சதீசன், வன்முறையை தூண்டி விட்டு அமைதியை குலைக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

    இந்த நிலையில் பேரணியின் போது, போலீசாரை தாக்கியதற்காகவும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காகவும் சதீசன் மீது, ஜாமீனில் வெளிவர முடியாக சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள சதீசன், தன் மீதான குற்றச்சாட்டுகளால் பயந்து விட்டேன் என முதல்-மந்திரியிடம் சொல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×