search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் பயங்கரம்: பிரபல தாதாவின் மகன் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை
    X

    புதுச்சேரியில் பயங்கரம்: பிரபல தாதாவின் மகன் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை

    • பாழடைந்த வீட்டில் இன்று காலை 2 பேர் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தனர்.
    • வெட்டுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர் மீட்பு.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்குத் தெருவில் பாழடைந்த வீடு ஒன்று உள்ளது. இந்த வீடு அமைந்துள்ள பகுதி டி.வி. நகரையொட்டியும் மற்றும் தாங்கூர் தோட்டம் பகுதிக்கும் செல்லும் வழியாகும்.


    இந்த பாழடைந்த வீட்டில் இன்று காலை 2 பேர் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். அந்த வழியாக சென்ற பொது மக்கள் வாலிபர்களின் பிணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பெரிய கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பாழடைந்த வீட்டின் காம்பவுண்டு சுவரையொட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் 2 பேர் இறந்து கிடந்தனர். மற்றொருவர் வெட்டுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். காயத்துடன் கிடந்த வாலிபரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.


    கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வாலிபரும் பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து கொலை செய்யப்பட்டவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கொலையான ஒருவர் ரிஷி என்பதும் மற்ற 2 பேர் அவனுடைய கூட்டாளிகளான திடீர் நகரை சேர்ந்த பன்னீர் தேவா, ஜெ.ஜெ. நகரை சேர்ந்த ஆதி என்பதும் தெரிய வந்தது.

    ரிஷி உழவர்கரையை சேர்ந்த பிரபல தாதா தெஸ்தான் மகன் என்பது தெரியவந்தது. கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் டி.ஐ.ஜி. சத்யசுந்தரம் நேரில் வந்து பார்வையிட்டார். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தனர்.


    மோப்ப நாய் ரோஜர் வரவழைக்கப்பட்டது. அது கொலையான இடத்தில் இருந்து டி.வி. நகர் செல்லும் சந்து வழியாக சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    தாதா தெஸ்தான் கடந்த 2008-ம் ஆண்டு உழவர்கரை ஜெ.ஜெ. நகர் வீட்டில் வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். இவரது மகன் ரிஷி மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இதனால் இவர்களது நடமாட்டத்தை கண்காணித்த எதிர்தரப்பினர் நள்ளிரவில் ரிஷி நண்பர்களுடன் மது குடித்து கொண்டிருந்த போது திடீரென புகுந்து ரிஷி மற்றும் அவனது கூட்டாளிகளை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து பெரிய கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவை நகர பகுதியில் தாதாவின் மகன் உள்பட 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×