search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    12 ராசிக்கும் சுக்கிர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்
    X

    12 ராசிக்கும் சுக்கிர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

    • ஒரு மனிதன் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க சுக்கிரனின் தயவு தேவை.
    • சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் எல்லா நிலைகளிலும் கெடாமல் வலுப்பெற்று இருக்க வேண்டும்.

    மனித வாழ்க்கையில், காதல், காமம், அன்பு, எதிர்பாலின ஈர்ப்பு, உறவுகள், உறவுகளால் ஏற்படும் மகிழ்ச்சி, புற அழகியல் சார்ந்த விஷயங்கள், உலகியல் இன்பங்கள், சொகுசான வாழ்விற்கு தேவையான விஷயங்கள், ஆடம்பரமான வீடு, வாகனங்கள், அணிகலன்கள், போன்றவற்றிற்கு காரக கிரகம் சுக்கிரன். ஒரு மனிதன் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க சுக்கிரனின் தயவு தேவை. அதனால் சுக போகத்தின் அதிபதி, சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் எல்லா நிலைகளிலும் கெடாமல் வலுப்பெற்று இருக்க வேண்டும்.

    அன்பான மனைவி, அழகான வீடு, ஆடம்பரமான கார், சொகுசான இன்பமயமான வாழ்க்கை இத்தனை யையும் ஒருவருக்கு குறைவின்றி கொடுக்கும் கிரகம் சுக்கிரன் பாவக, ஆதிபத்திய ரீதியாக வலுப்பெற்றால் பெரிய பொருளாதாரம் ஈட்டுதல், சுக்ரனின் காரகங்க ளான நவீனம், வாசனைப் பொருட்கள், உயர்ரக வாகனம், வீடு, இசை, கவிதை ஆர்வம், அலங்காரம், ஒப்பனை, நளினம் போன்றவற்றில் ஆர்வம் கூடும்.

    கோடிக்க ணக்கில் கொட்டி கொடுத்து பெரிய உயரமும் தொட வைக்கும். காரக, பாவக ஆதிபத்திய ரீதியாக சுக்ரன் பலம் குறைந்தால் வறுமை, தரித்திரம் போன்ற பாதிப்பு இருக்கும். சம்பாத்தியம், ஆடம்பரம் என்ற எண்ணமே வராமல் செய்யும். அதே போல் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் இரு பாவகத்திற்கு உள்ள பலன்களை நடத்தியே தீரும்.இனி பனிரென்டு ராசிக்கும் சுக்ர தோஷம் நீக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

    மேஷம்

    மேஷ ராசிக்கு சுக்ரன் 2, 7-ம் அதிபதி. தன ஸ்தான அதிபதி. களத்திர ஸ்தான அதிபதி. சுக்ரன் பலம் பெற்றால் பொருளாதார வெற்றி, வீடு மனை வாகனம் போன்றவை கிடைக்கும்.சுக்ரனின் தன்மை கொண்ட வாழ்க்கை துணை அமையும் அழகு ,காதல் உணர்வு , நல்ல புரிந்துணர்வு ,தாம்பத்யம் சுகம் போன்றவை கிடைக்கும். மனதிற்கினிய வாழ்க்கை துணையாக அழகு அந்தஸ்து உடையவராக இருப்பார்.

    திருமணத்திற்கு பிறகு அதிர்ஷ்டம் திருப்புமுனை உண்டாகும். இவர்களுக்கு சுக்ரன் நல்ல நிலையில் இருந்தால் சிறப்பான திருமண வாழ்க்கை உண்டு. சுக்ரன் பாதிக்கப்பட்டால் பொருளாதாரத்தில் தன்னிறைவு இருக்காது. வறுமை, கடன் போன்ற வற்றால் தம்பதிகளிடம் நெருக்கம் குறையும்.வாழ்க்கைத் துணையால் மன நிம்மதி போகும். சிலருக்கு திருமணமே நடக்காது.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

    ரிஷபம்

    ரிஷப ராசிக்கு சுக்ரன் லக்னாதிபதி மற்றும் ஆறாம் அதிபதி. இவர்களுக்கு சுக்ரன் வலுப்பெற்றால் ஆடம்பரத்திற்காக கடன் பெறுவார்கள். ஜாதகரின் கடன் பிரச்சினைக்கு ஜாதகரின் நடவடிக்கைகளே காரணமாக இருக்கும். ஜாத கரின் சகிப்புத் தன்மையற்ற நட வடிக்கைகள் எதிரியை அதிகப்படுத்தும். தீய பழக்க வழக்கங்களால் நோய் ஏற்படும்.

    நோய்க்கு வைத்தியம் செய்ய கடன் பெறுவார்கள். கடனுக்கு பயந்து நோய் கூடிக் கொண்டே போகும். அதே போல் சுக்ரன் பலம் குறைந்தாலும் தசா புத்தி காலங்களில் கடன், நோய் பாதிப்பு எதிரி தொல்லை இல்லா மல் போகாது. இவர்க ளுக்கு சுக்ர தசை, புத்தி காலங்களில் பாதிப்பு அதிகமா கவும் பிற நேரங்களில் பாதிப்பு குறைவாகவும் இருக்கும்.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் லஷ்மி நரசிம்மரை வழிபட வேண்டும்.

    மிதுனம்

    மிதுன ராசிக்கு சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. விரயாதிபதி. சுய ஜாதகத்தில் சுக்ரன் பலம் பெற்றால் குல கவுரவம் நிரம்பியவர்கள். பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள்.

    தலைமைப் பதவி தேடி வரும். நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். பதவி, புகழ் அந்தஸ்து எளிதாக தேடி வரும். நன்மக்கட்பேறு உண்டாகும். புத்திரர்களால் இவர்களுக்கும் இவர்களால் புத்திரர்களுக்கும் பயன் உண்டு. அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள். தொட்டது துலங்கும். சுக்ரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்றாலும் அசுப கிரக சம்பந்தம் இருந்தாலும் பூர்வீகத்தில் வாழ முடியாது. பூர்வீகச் சொத்தில் சர்ச்சை உண்டு. பிள்ளைகளால் மன வேதனை மிகும். குல தெய்வ அருள் கிடைக்காது.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை சர்க்கரை பொங்கல் படைத்து குல தெய்வத்தை வழிபட வேண்டும்.

    கடகம்

    கடக ராசிக்கு சுக்ரன் 4,11-ம் அதிபதி. சுகாதிபதி மற்றும் லாப ஸ்தானாதிபதி. கடக ராசிக்கு சுக்ரன் பாதகாதிபதி. துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்ற சுக்ரனும் மீனத்தில் உச்சம் பெற்ற சுக்ரனும் நிறைவான சொத்து சுகத்தையும் நிறைந்த லாபத்தையும் தாய் வழி உறவுகளின் அனுசரணையும், வழக்குகளில் வெற்றியையும் முன்னோர்களின் நல்லாசியையும் வழங்கும். நன்றாக படிப்பார்கள்.

    கற்ற கல்வியால் பயன் உண்டு.ஆசிரியர், ஜோதிடர், வங்கிப் பணிகளில் தனித்திறமையுடன் மிளிர்வார்கள்.அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்கக் பலர் விரும்புவார்கள். ரிஷபத்தில் ஆட்சி பலம் பெற்ற சுக்ரன் பாதகத்தை மிகைப்படுத்துவார். சனி பலம் குறைந்தால் மறு திருமணத்தை நடத்துவார். அசுப வலிமை படைத்த சுக்ரன் காதல், காமத்தால் வம்பு, வழக்கைத் தருவார்.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை சந்திர ஓரையில் சிவ சக்தியை வழிபடவும்.

    சிம்மம்

    சிம்ம ராசிக்கு சுக்ரன் சகாய ஸ்தான அதிபதி தொழில் ஸ்தான அதிபதி. 3,10-ம் அதிபதி. சுய ஜாதகத்தில் சுக்ரன் பலம் பெற்றால் புதிய தொழில் முயற்சியால் சுய வருமானத்தில் செல்வம் சேரும். சுய தொழில் ஆர்வம் மிகும்.கவர்ச்சியான விளம்ப ரத்தால் தொழிலில் உச்சத்தை அடைவார்கள். உடன் பிறந்தவர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்வார்கள். பெரிய அந்தஸ்து, அதிகாரம் நிறைந்த பதவியில் இருப்பார்கள்.

    8ல் உச்சம் பெற்ற சுக்ரனால் சிலருக்கு தொழிலில் பெரும் இழப்பு, நட்டம், அவமானம், வம்பு, வழக்கு ஏற்படு கிறது. சுக்ரன் பலம் குறைந்தால் தகுதி, திறமைக்கு தகுந்த நிரந்தர, தொழில் உத்தி யோகம் அமையாது. சிலர் உடன் பிறப்பிற்காக, குடும் பத்திற்காக மாடாக உழைத்தும் கெட்ட பெயர் எடுப்பார்கள். பிழைக்க தெரியாத ஏமாளியாக இருப்பார்கள்.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் சிவ வழிபாடு செய்யவும்.

    கன்னி

    கன்னி ராசிக்கு சுக்ரன் தனாதிபதி மற்றும் பாக்கியாதிபதி. 2,9-ம் அதிபதி. சுக்ரன் பலம் பெற்றால் நிர்வாகத் திறமை உண்டு. தனது புத்தி சாதுர்ய பேச்சால் பிறரை நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். உற்றார் உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். பலவிதமான யுக்திகளால் பொருளை ஈட்ட வல்லவர். பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில் வல்லவர்கள்.

    பிற நாட்டு தொடர்பாலும் அரசு மூலமாகவும் செல்வம் சேரும். தர்ம காரியங்களின் மூலம் புகழ் பெறுவார். அரச பதவி, அரசு உத்தியோகம் அந்தஸ்து உண்டு. இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் அல்லது சுக்ரன் பலம் குறைந்தால் நிலையான பொருள் வரவு இருக்காது. குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவு குறையும். மீனத்தில் உச்சம் பெற்ற சுக்ரன் சிலருக்கு மாரகத்தை மிகைப்படுத்தும்.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கவும்.

    துலாம்

    துலாம் ராசிக்கு சுக்ரன் லக்னாதிபதி, அஷ்டமா திபதி. சுக்ரன் எந்த நிலையில் இருந்தாலும் தசை, புத்தி காலங்களில் அவமானம் / கடன், வம்பு, வழக்கு உண்டு. தசை ஆரம்பத்தில் சில யோகத்தைச் செய்தால் தசை முடியும் போது அவயோகம் உண்டு. துலாம் ராசிக்கு சுக்ர தசை வராமல் இருப்பது நல்லது.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் லஷ்மி குபேர பூஜை நடத்த வேண்டும்.

    விருச்சிகம்

    விருச்சிகத்திற்கு சுக்ரன் 7, 12-ம் அதிபதி. களத்திர ஸ்தான அதிபதி விரயாதிபதி. 5,7-ல் பலம் பெற்ற சுக்ரன் காதல் திருமணத்தை தருகிறது. குலதெய்வ அருள் கிடைக்கும், அயன சயன போகம் சிறந்த நிலையில் இருக்கும்.

    ஜாதகர் அழகு, ஆடம்பரத்திற்கு அதிகம் செலவு செய்யக்கூடிய தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். 12-ல் ஆட்சி பலம் பெற்ற சுக்ரன் எளிதில் திருமண வாழ்க்கையை அமைத்து தராது. பலருக்கு தவறான உறவை மிகைப்படுத்துகிறது. வயோதிகத்தில் சுக்ர தசை மாரகத்தை தருகிறது.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் கால பைரவரை வழிபட வேண்டும்.

    தனுசு

    தனுசு ராசிக்கு சுக்ரன் 6,11-ம் அதிபதி. ருண, ரோக சத்ரு ஸ்தான அதிபதி. லாபாதிபதி. சுக்ரன் வலுத்த தனுசு லக்னத்தினர் சித்தப்பா மற்றும் மூத்த சகோதரத்தால் கடன்ப டுவார்கள். தாய்மாமன் வாழ்நாள் முழுவதும் மதி மந்திரியாக இருப்பார்.

    அனுபவ ரீதியாக கேது தசையில் கடன் பட்ட தனுசு லக்னத்தினர் சுக்ர தசையில் கடன் நிவர்த்தி பெறுகின்றனர். கேது தசையில் கடன் படாத தனுசு லக்னத்தினர் சுக்ர தசை முழுவதும் கடனால் அவதிப்படு கிறார்கள். கேது குறுகிய கால தசை. சுக்ரன் நீண்ட கால தசை. சுய ஜாதகத்தில் சுக்ரனும் கேதுவும் நின்ற நிலைக்கு ஏற்ப பலன் மாறுபடும்.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபட வேண்டும்.

    மகரம்

    மகர ராசிக்கு சுக்ரன் ஐந்து, பத்தாம் அதிபதி. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதி. சுய ஜாதகத்தில் சுக்ரன் வலுத்த மகர லக்னத்தினர் அதிர்ஷ்டசாலிகள். ஒரு கேந்தி ரத்திற்கும் திரிகோணத்திற்கும் அதிபதிகள்பெயர் சொல்லக் கூடிய குடும்பம். அரசு உத்தியோகம், கவுரவ பதவி உண்டு.

    சிலர் குலத்தொழில் செய்ப வர்கள். சமுதாய அங்கீகாரம் நிறைந்த வர்கள். நல்ல பண்பான, பணிவான புத்திரர்கள் பிறப்பார்கள். குலதெய்வ கோவிலில் அதிக தானம், தர்மம் செய்பவர்கள். சுக்ரன் வலு குறைந்தால் நிலையான பதவி, புகழ் இருக்காது. ஆன்மீக நாட்டம் குறையும். பிள்ளை களால் மனக் கஷ்டம் மிகும்.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை குல தெய்வத்திற்கு அபிசேக ஆராதனை செய்து வழிபடவும்.

    கும்பம்

    கும்ப ராசிக்கு சுக்ரன் 4, 9-ம் அதிபதி. சுகாதிபதி மற்றும் பாக்கியாதிபதி. கும்பத்திற்கு 9-ல் அமர்ந்த சுக்ரன் நிச்சயம் பாதகத்தை தசை புத்தி காலங்களில் செய்வார். சுக்ரனும், சனியும் நட்பு கிரகங்கள் என்பதால் பாதகத்தை செய்ய மாட்டார் என பலர் கூறினாலும் வினையை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் வலியின் வேதனை புரியும்.

    சுக்ரன் சுய ஜாதகத்தில் சுப வலு பெற்றவர்கள் பூமியினாலும், பயிர்களினாலும், தன்முயற்சியினாலும் பொருளீட்டிப் பல நற்காரியங்களுக்கு பயன் படுத்துவார். கடமையே கண்ணாக உள்ளவர்கள். தெய்வ காரியங்களிலும் ஈடுபாடு கொண்டவர்கள்.தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மீது பற்றும் பாசமும் உண்டு சுய ஜாதகத்தில் சுக்ரன் பலம் குறைந்தால் தசை, புத்தி காலங்களில் பாதகம் குறையும்.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை குளிகை நேரத்தில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    மீனம்

    மீன ராசிக்கு சுக்ரன் முயற்சி ஸ்தான அதிபதி. அஷ்டமாதிபதி. 3, 8-ம் அதிபதி. உடன் பிறந்த சகோதரர்களால் இன்னல்கள் வம்பு வழக்கு,நஷ்டம் மிகுதியாகும். அவர்களுடன் ஒற்றுமையாக இருக்க முடியாது.முக்கிய சொத்துக்கள், பாகப் பிரிவினை போன்ற எதற்கும் முறையான ஆவணம் இருக்காது.

    சொத்துதகராறு, பாகப்பிரிவினை போன்றவற்றால் மன சஞ்சலமும் உண்டாகும். சிலருக்கு மதம் மாறும் சிந்தனை மேலோங்கும். தெய்வ நம்பிக்கை குறையும். சிலருக்கு அடிக்கடி தேவையற்ற அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அடிக்கடி வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும்.

    சொல் புத்தியும் இருக்காது. சுய புத்தியும் கிடையாது. பய உணர்வு மிகுதியாக இருக்கும். தைரியம், வீரியம் குறைவுபடும். கற்பனையில் வாழ்வார்கள். செவித்திறன் குறைவுபடலாம். கீழ்படியாத வேலை யாட்கள் கிடைப்பார்கள். திட்டமிட்டு செயல்படுத்த முடியாமல் தோல்வியை சந்திப்பார்கள்.விலை உயர்ந்த ஆபரணங்களை அடிக்கடி கைமறதியாக வைப்பார்கள் அல்லது அடகு வைப்பார்கள். மீன லக்னத்திற்கு சுக்கிர தசை வரவே கூடாது.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை, காளியை வழிபட வேண்டும். மேலே சொன்ன பலன்கள் அவரவர்கள் ஜாதகத்தில் சுக்ரனோடு இணைந்த பார்த்த மற்ற கிரகம் பொருத்து பலனில் சிறு மாற்றத்தை தரும்.


    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    Next Story
    ×