search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    7-9-2024 விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்!
    X

    7-9-2024 விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்!

    • விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மை அடையும்.
    • விநாயகரை ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் வழிபடுவது உத்தமம்.

    ஐந்து கரத்தனை யானை முகத்தனை

    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

    நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

    புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே!

    நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மன நிம்மதி கிடைக்கவும், வாழ்வில் 16 வகை செல்வங்களும் பெற்று வாழ இறைவனை நினைத்து இருப்பது விரதம். ஒரு விசேஷ நாளில் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நினைத்து ஐம்புலனை அடக்கி, உண்ணாமல் இருக்கும் நிலை விரதமாகும்.

    விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மை அடையும். விரதங்களை கடைபிடிப்பதால் ஆன்மிக ரீதியான பயன்களுடன் அறிவியல் ரீதியாக உடலும், உள்ளமும் நலம் பெறும்.

    பிரார்த்தனைகளை நிறைவேற்றும் விரத நாட்களை திதி மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் கடைபிடிப்பது இந்துக்களின் வழக்கம்.

    திதிகளின் தேவதைகளுக்கு சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் சக்தி உள்ளதால் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களை வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.

    திதியால் ஏற்படும் கிரக தோஷம் நீங்க அதற்குரிய திதிதேவதைகளை வழிபட்டால் எத்தகைய கடுமையான பாதிப்புகளில் இருந்தும் விடுபடலாம்.

    திதிகளின் அதி தேவதைகளை வழிபாடு செய்தால் அது அவர்களுக்கு காவல் தெய்வங்களாக இருந்து வறுமை பிணி, பீடை, கஷ்டம் என அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி சுபிட்சமான வாழ்வு கிடைக்கச் செய்யும்.

    பொதுவாக அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, பஞ்சமி,சஷ்டி, ஏகாதசி, திரயோதசி போன்ற ஒரு சில குறிப்பிட்ட திதிகள் காலத்தால் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் வலிமை பெற்றவை.

    அந்த வகையில் வளர்பிறை சதுர்த்தி திதியின் அதி தேவதை விநாயகரை ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் வழிபடுவது மிகவும் உன்னதமானது.

    இந்துக்களின் வழிபாட்டு தெய்வங்களில் முதன்மை யானது விநாயகர் வழிபாடு.கணபதியை வழிபட்டுத் துவங்கும் அனைத்தும் சித்தியாகுவதுடன் நற்காரி யமாக மாறும் என்பது நம்பிக்கை. தன்னை வழிபடும் பக்தர்களின் வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றுவது விநாயகரின் தனிச்சிறப்பு.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகர் சதுர்த்தி விரதம் குரோதி வருடம் ஆவணி மாதம் 22-ம் நாள் சனிக்கிழமை 7.9.2024 அன்று சித்திரை நட்சத்திரத்தில் வருகிறது. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் விரதம் இருந்து விநாயகரை வழிபட ஜனன கால ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் அகலும்.


    விநாயகரின் சிறப்புகள்

    இந்திய மக்கள் அனைவராலும் விரும்பி வழிபாடு செய்யப்படுபவர் விநாயகர். விநாயகர் எளிமையான கடவுள். களிமண், சாணம், மஞ்சள் என எதைப் பிடித்து வைத்தாலும் பிள்ளையார் ஆகிவிடுவார். எளிதில் கிடைக்கும் அருகம்புல், எருக்கு போன்ற பூக்களால் அர்ச்சனை செய்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்.

    ஆற்றங்கரை, குளத்தங்கரை, அரசமரத்தடி, தெருமுக்கு என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் விநாயகர்.

    ஓங்கார நாயகனாக திகழும் விநாயகரின் உடலில் நவக்கிரகங்களும் இருப்பதாக ஐதீகம்.அவரது நெற்றியில் சூரியனும், நாபி (தொப்புள்)யில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாய் எனப்படும் அங்காரகனும், வலது கீழ் கையில் புதனும் ,வலது மேல் கையில் சனி பகவானும், சிரசில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்கிர பகவானும், இடது மேல் கையில் ராகு பகவானும், இடது தொடையில் கேது பகவானும் இருப்பதால் நவக்கிரகங்களால் ஏற்படும் தீமைகளை கட்டுப்படுத்தும் சக்தி விநாயகருக்கு உண்டு.

    விநாயகர் சதுர்த்தி விரதத்தால் விலகும் தோஷங்கள்


    சனி தோஷம்

    கர்ம வினைப்படி ஒரு மனிதன் வாழ்வில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்ப துன்பங்களையும் வழங்குபவர் சனி பகவான். அதாவது பூர்வ ஜென்ம கணக்குப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை நிர்ணயம் செய்பவர் சனி பகவான். அதனால் தான் நியாயத்தராசை ராசிச் சின்னமாகக் கொண்ட துலாம் ராசியில் உச்சம் அடைகிறார்.

    சனி சுப வலுப்பெற்றால் மட்டுமே பிறப்பு முதல் இறப்பு வரை வசதியான வாழ்க்கை, நிறைந்த தொழில், நீண்ட ஆயுள் இவற்றை ஒரு மனிதன் பெற முடியும். சனி ஒளியற்ற இருளைச்சுட்டிக் காட்டக் கூடிய கிரகம்.

    வாழ்வில் நடக்கும் மங்கலம் இல்லாத விஷயங்களை சுட்டிக் காட்டும் கிரகம். சனி தூய்மையின்மை, அழுக்கு, தடை, தாமதம், சோம்பல், ஊனம் போன்றவற்றிற்கு காரக கிரகம். சுய ஜாதகத்தில் சனி பலம் குறைந்தவர்கள் சனிக்கிழமை பிறந்தவர்கள் 8,17, 26ம் தேதி பிறந்தவர்கள்.

    சனிக்கிழமை பிறந்தவர்கள், சனிதசா, சனி புத்தி நடப்பில் இருப்பவர்கள், தீராத நோய் கடன், ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பாதிப்பு இருப்பவர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் வறுமை, கடன், நிலையில்லாத தொழில், கஷ்ட ஜீவனம், தடை, தாமதம், ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் போன்றவைகள் விலகும்.


    நாகதோஷ நிவர்த்தி

    சர்ப்ப தோஷம் மற்றும் காலசர்ப்ப தோஷம் இருப்பவர்கள் 4,13,22,31ம் தேதியில் பிறந்தவர்கள், ராகு, கேது தசை நடப்பவர்கள், ஜனன கால ஜாதகத்தில் அதிக கிரகங்கள் ராகு/கேது சாரம் பெற்றவர்கள் வாசுகி , ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், தட்சகன், சங்கபாலன்,பதுமன், மகாபதுமன் எனும் ஒன்பது தெய்வத்தன்மை மிகுந்த நாகங்களை மனதில் நிறுத்தி ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் மற்றும் நாகர்சிலைக்கு பால் மற்றும் மஞ்சள் அபிஷேகம் செய்தால் ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான சர்ப்ப தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

    திருமணத்தடை நீங்கும்,தீர்க்க சுமங்கலி பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.அத்துடன் கண்திருஷ்டி, செய்வினை பயம், ஏதாவது ஒரு ரூபத்தில் அடுக்கடுக்காக வந்து கொண்டே இருக்கும் பிரச்சினைகள், முன்னேற்றமின்மை போன்றவை நீங்கும். சம்பள உயர்வு . வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பி வரும்.


    மாங்கல்ய தோஷம்

    ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அதிதேவதையாகும். ஜனன கால ஜாதகத்தில் எட்டாமிட கேது , செவ்வாய் மற்றும் சனியினால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம்,

    செவ்வாய் தோஷம் நீங்கி திருமணத் தடைகள் அகன்று மங்கல வாழ்வு அமையவும். சனி பகவானின் தோஷம் நீங்கி, ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கவும். விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து விநாயகரை தரிசித்து, சூரைத்தேங்காய் உடைத்து வழிபட அனைத்து தடை தாமதங்களும் விலகி சுப பலன் தேடி வரும்.


    கேது தோஷம்

    ஜாதகத்தில் கேது திசை மற்றும் கேது புத்தி நடப்பில் இருப்பவர்களுக்கு நிச்சயம் விநாயகர் வழிபாடே சிறந்த பரிகார மாகும். இப்படியாக நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் எல்லா வகையான இன்னல்க ளுக்கும் விநாயகரை வழிபடுவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் உண்டாகும்.

    ஜனன ஜாதகத்தில் கேது சந்திரன் சாரம், சந்திரன் கேது சாரம், சந்திரன் வீட்டில் கேது,சந்திரன் கேது சேர்க்கை, சந்திரனுக்கு அடுத்த வீட்டில் கேது, திரிகோணம் மற்றும் கோட்சார கேது, சந்திரன் தொடர்பால் பிரச்சினைகளை சந்திப்பவர்களுக்கும் மீள முடியாத கோர்ட்,கேஸ் பிரச்சினை உள்ளவர்களும் விநாயகர் சதுர்த்தி அன்று செய்யும் விநாயகர் வழிபாடு அதிக நன்மை தரும்.


    செவ்வாய் தோஷம்

    செவ்வாய் பூமிக் காரகன், ரத்த காரகன் மற்றும் யுத்த காரகன். தைரிய வீரியத்திற்குரிய கிரகம். மேலும் உடன் பிறந்த சகோதரம் மற்றும் பெண்கள் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும் கிரகமாகும். இந்த செவ்வாய் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்பது பொது விதி. ஆனால் தனித்த செவ்வாய் திருமணத்திற்கு திருமண வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்ப டுத்தாது.

    செவ்வாய், சனி ராகு/ கேது சம்பந்தம் திரு மணத்திற்கு முன், பின் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அல்லது கடன், நோய் பகை போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி சனிக்கிழமையும் செவ்வாயின் நட்சத்திரமான சித்திரையிலும் வருவதால் அன்று விரதம் இருந்து ருண விமோசன கணபதி மந்திரம் சொல்லி வணங்க, தீராத கடன் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நோய், பகை தீரும்.

    "ஓம் கணேசாய ருணம்

    சிந்தி வரேண்யம்

    ஹூம் நம்; பட்ஸ்வாஹா"

    கிழக்கு முகமாக அமர்ந்து குத்துவிளக்கு ஏற்றி 108 தடவை இந்த மந்திரத்தை ஜெபித்து விளக்கின் பாதத்தில் குங்குமம் இட்டு அந்தக் குங்குமத்தை அணிந்து வர விரைவில் மந்திர சித்தியாகும்.

    விநாயகர் சதுர்த்தி அன்று ஆரம்பித்து 90 நாட்களுக்கு குறைந்தது 108 தடவை ஜெபித்து வரவும்.

    90 நாட்கள் கழித்து கணபதி ஹோமம் செய்து கொள்ளவும்.அஷ்டம சனி, ஏழரை சனி, சனி தசையால் பாதிப்படைபவர்கள் விநாயகரின் ஜாதகத்தை ஒரு அட்டையில் எழுதி விநாயகர் சதுர்த்தி அன்று பூஜையில் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் தேடி வரும்.

    விருட்சமும் விநாயகரும்

    அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும். வன்னி மரத்தடி விநாயகர், கிரக தோஷங்கள் விலக்குவார். ஆலமரத்தடி விநாயகரை வழிபடுவதால் சூனியங்கள் அகலும். வேப்பமர விநாயகர் அருளால் தீராத, நாட்பட்ட நோய்கள் மறையும். நாவல் மரத்தடி விநாயகரை வழிபடுவதால் பிள்ளைகளுக்கு அறிவு வளரும்.

    விநாயகர் சதுர்த்தி விரத முறைகள்

    அதிகாலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி இரண்டு வாழைக் கன்றுகளையும் கட்டவேண்டும்.

    பூஜையறையை சுத்தம் செய்து ஒரு மணையை வைத்து கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் விநாயகரை வைக்க வேண்டும்.

    விநாயகருக்கு கொழுக்கட்டையுடன் எள்ளுருண்டை, பாயாசம், வடை பால், தேன், வெல்லம், முந்திரி, அவல், பொரி, சோளம், விளாம்பழம், நாவல்பழம், வடை, சுண்டல், வெற்றிலை, பாக்கு ,வாழைப்பழம், ஆப்பிள், கரும்பு என அவரவர் வசதிக்கேற்ப நைவேத்யம் செய்யலாம்.

    நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் வைக்கலாம்.பூஜையின் போது மண் அகலில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி பூக்களால் அலங்காரம் செய்து 21 வகை இலைகள் மற்றும் அறுகம்புல்லி னால் 108 முறை அவரின் திருநாமத்தைச் சொல்லியும், அஷ்டோத்திரம் படித்து அர்ச்சனை செய்யலாம்.

    விநாயகர் அகவல், காரிய சித்திமாலை,விநாயகர் கவசம் படிப்பது விசேஷமான சுப பலன்களைத்தரும். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம். இயன்ற உணவுகளை தான தர்மங்களை செய்ய பலன் இரட்டிப்பாகும்.

    சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரித்து பவுர்ணமிக்குப் பிறகு வரும் சங்கட ஹர சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்தால் நினைத்தது நிறைவேறும்.

    Next Story
    ×