search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆன்மிகத்தில் ஆடை!
    X

    ஆன்மிகத்தில் ஆடை!

    • உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றும் மனிதர்களின் அடிப்படைத் தேவைகள்.
    • வஸ்திர தானமும் சிறப்பானதாகப் போற்றப் படுகிறது.

    உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றும் மனிதர்களின் அடிப்படைத் தேவைகள். நமது இலக்கியங்களும் புராணங்களும் உடை பற்றி நிறையப் பேசுகின்றன.

    பட்டாடை அணிந்த ராஜகுடும்பத்தைச் சேர்ந்த ராமனும், சீதையும், லட்சுமணனும் வனவாசம் செல்லும்போது மரவுரியையே ஆடையாகத் தரித்துச் சென்றார்கள். மரத்திலிருந்து உரித்து எடுக்கப்படும் மெல்லிய பட்டையே மரவுரி எனப்பட்டது.

    மரவுரியை எப்படிக் கட்டிக்கொள்வது எனத் தெரியாது சீதை தவித்தாளாம். அப்போது, தான் கட்டிக்கொண்ட மனைவிக்கு மரவுரி கட்டிக்கொள்ளக் கற்றுத் தந்தவன் ராமன்தான் என்கிறது ஓர் அபூர்வ ராமாயணக் கதை.

    பாஞ்சாலிக்கு கண்ணன் ஆடை கொடுத்து மானத்தைக் காத்ததை நாம் அறிவோம். கண்ணனின் இளமைக் காலத்தில் அவன் விரலில் ஒரு காயம் பட்டு ரத்தம் சொட்டியதாம். அதைப் பார்த்துப் பதறினாளாம் பாஞ்சாலி.

    தான் கட்டியிருந்தது விலையுயர்ந்த பட்டுத் துணி என்றும் பாராமல் பட்டென்று அதைக் கிழித்து கண்ணனின் காயத்தின்மேல் அவசர அவசரமாகக் கட்டி மேலும் குருதி பெருகாமல் தடுத்தாளாம்.


    அந்த அன்பில் நெகிழ்ந்த கண்ணன் அதற்குப் பிரதிபலனாகத்தான் கவுரவர் சபையில் அவளது ஆடையை வளரச் செய்து அவள் மானத்தைக் காத்தான் என்று ஒரு கதை சொல்கிறது.

    துச்சாதனன் துகிலுரியத் தொடங்கியபோது பாஞ்சாலி உள்ளம் உருகிக் கண்ணனைத் துதித்ததையும் துகில் வளர்ந்ததையும் பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் உணர்ச்சி பொங்க எழுதுகிறார்:

    `வையகம் காத்திடுவாய் -

    கண்ணா

    மணிவண்ணா என்றன்

    மனச்சுடரே!

    ஐய நின் பதமலரே - சரண்

    ஹரி ஹரி ஹரி என்றாள்!

    பொய்யர்தம் துயரினைப்

    போல் - நல்ல

    புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்

    தையலர் கருணையைப் போல் - கடல்

    சலசலத்தெறிந்திடும் அலைகளைப் போல்

    பெண்ணொளி வாழ்த்திடுவார் - அந்தப்

    பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல்போல்

    கண்ணபிரான் அருளால் - தம்பி

    கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்

    வண்ணப் பொற் சேலைகளாம் - அவை

    வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே!

    எண்ணத்தி லடங்காவே - அவை

    எத்தனை எத்தனை நிறத்தனவோ!

    பொன்னிழை பட்டிழையும் - பல

    புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்

    சென்னியிற் கைகுவித்தாள் - அவள்

    செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே

    முன்னிய ஹரிநாமம் - தன்னில்

    மூளுநற் பயனுல கறிந்திடவே

    துன்னிய துகில் கூட்டம் - கண்டு

    தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான்!`

    முப்பெருந் தேவியரில், கலைமகள் வெள்ளை ஆடை உடுத்திக் காட்சி தருபவள்.

    `வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப்

    பணிபூண்டு

    வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் -

    வெள்ளை

    அரியா சனத்தில் அரசரோ டென்னைச்

    சரியாசனம் வைத்த தாய்.'

    என்று பாடுகிறார் காளமேகப் புலவர். கலை என்பது உடைக்கான பழந்தமிழ்ச் சொல். சரஸ்வதி வெள்ளை ஆடை புனைபவள் என்பதையே `வெள்ளைக் கலை உடுத்து` என்ற சொற்களால் குறிக்கிறார் அவர்.

    சிவபெருமான் புலித்தோலை அணிபவர்.

    `பொன்னார் மேனியனே! புலித்தோலை

    அரைக்கசைத்து

    மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை

    அணிந்தவனே!'

    என்று சிவபெருமானைப் பாடிப் பரவுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். புலித்தோல் அணிந்த தந்தையின் இளைய மகனான முருகன் வெறும் கோவணத்தை மட்டுமே அணிந்த ஆண்டியாகப் பழனியில் காட்சி தருகிறான்.

    புகழேந்திப் புலவர் நளவெண்பாவில் நளனுக்கு கார்க்கோடகன் என்ற பாம்பு ஆடை கொடுத்ததைப் பற்றி எழுதுகிறார்.

    நளன் பகைவர்கள் அறியாதவாறு மறைந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டதால் கார்க்கோடகப் பாம்பு அவனைக் கடித்து விஷத்தால் அவன் நிறத்தையும் வடிவத்தையும் மாற்றுகிறது. முற்றிலும் தன் உரு மாறிவிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நளனிடம், தான் அவனுக்கு உபகாரமே செய்திருப்பதாக விளக்குகிறது அது.

    இனிப் பகைவர்கள் அவனை அடையாளம் காண இயலாது என்று சொல்லி தன் ஆடை ஒன்றையும் அது நளனுக்குக் கொடுக்கிறது. தோலுரிக்கும் பழக்கமுள்ள பாம்பின் தோலாடையாகத் தான் அது இருக்க வேண்டும்.

    பின்னாளில் நளனுக்கு அவனது பழைய உருவம் தேவைப்படும்போது அந்த ஆடையை அணிந்தால் அவன் மீண்டும் பழையபடி மாறுவான் என அது தெரிவித்து ஊர்ந்துசென்று மறைகிறது.

    கண்பார்வையற்ற கவிஞரான சூர்தாஸ் துவாரகைக் கண்ணன் கோவிலில் ஆஸ்தான பாடகராக நியமிக்கப் பட்டிருந்தார்.

    ஒவ்வொரு நாளும் கிருஷ்ண விக்கிரகத்திற்கு ஆடை மாற்றுவார்கள். அன்றன்று சூர்தாஸ் பாடும் கீர்த்தனைகளில் அந்த ஆடையின் நிறம் எதுவென்று தன் அகக்கண்ணால் தானே கண்டு கீர்த்தனையிலும் ஆடையின் வண்ணத்தைக் குறிப்பிட்டுப் பாடுவாராம்.

    சகோதரி நிவேதிதை தம் குருநாதரான விவேகானந்தர்மேல் அளவற்ற பக்தி செலுத்தியவர். விவேகானந்தர் காலமானபோது துயரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

    விவேகானந்தரின் சடலம் எரிகிறபோது தள்ளி அமர்ந்து கண்ணீர் வழியப் பார்த்துக் கொண்டிருந்த நிவேதிதையின் உள்ளத்தில் ஓர் எண்ணம்.

    `குருநாதரே! இதுவரை நான் வெள்ளை உடைதானே அணிகிறேன். எனக்கு நீங்கள் ஏன் காவி உடை வழங்கவில்லை? நான் துறவின் அடையாளமாக காவி உடை தரிக்கும் அளவு மனப்பக்குவம் பெறவில்லை என்று கருதினீர்களா?` என அவர் எண்ணினார். அடுத்த கணம் விந்தையான ஒரு நிகழ்வு நடந்தது.

    எரிந்து கொண்டிருந்த விவேகானந்தரின் காவி உடையிலிருந்து ஒரு துண்டுக் காவித்துணி காற்றில் பறந்து நிவேதிதையின் மடியில் வந்து விழுந்தது!

    தன் துறவு மனநிலையை விவேகானந்தர் அங்கீகரித்ததற்கான அடையாளம் அது எனக் கருதிய நிவேதிதை அந்தக் காவித் துண்டைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு பத்திரப் படுத்திக் கொண்டார் என்கிறது நிவேதிதையின் திருச்சரிதம்.

    பழந்தமிழ் இலக்கியங்களில் ஆடை பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன.

    அவ்வையாரின் நல்வழி நூலில் உள்ள ஒரு வெண்பா, எல்லா மனிதர்களுக்கும் உண்பது நாழியளவு தான், உடுப்பது நான்கு முழம்தான், பிறகு அளவுக்கு மீறி ஆசைப்பட்டு வாழ்வில் சஞ்சலம் கொள்வது ஏன் என்று வினவுகிறது.

    `உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்

    எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த

    மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

    சாந்துணையும் சஞ்சலமே தான்!`

    நாழி உணவும் நான்கு முழ ஆடையும் போதுமானதாய் இருக்க, எண்பது கோடி விஷயங்களுக்கு ஆசை ஏன்? மண்கலம்போல் உடையப் போகும் வாழ்வில் அளவுக்கு மீறிய ஆசை எப்போதும் சஞ்சலத்தையே தரும் என்கிறார் அவ்வை.

    மானம் மறைக்க நான்கு முழம் போதுமென்றாலும் மனிதர்கள் பற்பல வகையான உடைகளில் நாட்டம் கொள்கிறார்கள்!

    காந்தி எளிய ஆடைகளை அணிவதென்று, நம் தமிழகத்தைச் சார்ந்த மதுரையில்தான் முடிவெடுத்தார். பின்னர், இடுப்பில் ஒரு வேட்டியும் மேலே ஒரு துண்டுமாக மட்டுமே காட்சி தந்தார்.

    நம் சுதந்திரப் போராட்ட காலத்தில் உடையும் ஒரு முக்கியப் பங்கு வகித்தது. கதர் உடையையே அணியுமாறு காந்திஜி வேண்டுகோள் விடுத்தார். ஏராளமான மக்கள் கதர் அணிந்தார்கள்.

    இப்போதும் காந்தியச் சிந்தனையின் தாக்கத்தால் கதரே அணிபவர்கள் இருக்கிறார்கள்.

    வள்ளலார் போன்ற மிகச் சில துறவிகள் வெள்ளை ஆடை தரித்தாலும் பொதுவாக இந்தியாவில் துறவுக்கான நிறம் என்று காவியே கருதப்படுகிறது.

    சில வண்ண ஆடைகள் மனத்தில் சில உணர்வுகளைத் தூண்டுகின்றன என்றும் நாம் அணியும் ஆடைகளின் நிறத்தின் மூலம் மற்றவர்கள் மனத்தில் நாம் விரும்பிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் நம்புகிறவர்கள் உண்டு.

    அதனால் வாரத்தின் ஏழு நாட்களுக்கும் இன்னின்ன ஆடை என வகுத்துக் கொண்டு அந்தந்த நாட்களில் அந்தந்த வண்ண ஆடைகளையே அணிபவர்களும் உண்டு.

    கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகன் மயிலுக்குக் குளிருமே என அதற்குப் போர்வை போர்த்தினான் என்கிறது சங்கப் பாடல்.

    கிடைத்தற்கரிய நீல நாகத்தின் ஆடை, கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பவனுக்குக் கிடைத்தது. ஆனால் ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் சிவபெருமானுக்கு அதை வழங்கிவிட்டான் அவன். இந்தச் செய்தியைச் சிறுபாணாற்றுப் படையில் காணலாம்.

    ஐதராபாத் அருங்காட்சியகத்தில் ஓர் அபூர்வமான கற்சிலை இருக்கிறது. அது ஒரு பெண்ணின் சிலை. அவள் மெல்லிய சல்லாத் துணியால் தன் முகத்தை மூடியிருப்பதைப் போல் சிற்பி செதுக்கியிருக்கிறான்.

    மெல்லிய துணியின் ஊடாக உள்ளே அவளது விழிகள் நாசி உதடு போன்றவை யெல்லாம் நிழல்போல் தெரிவதாக சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது.

    கல்லில் உள் உறுப்புக்களைச் செதுக்கிவிட்டுக் கல்லால் ஆன மெல்லிய துணியை மேலே ஒட்டவைப்பதென்பது இயலாது. அப்படியிருக்க இத்தகைய ஜாலத்தை அந்த சிற்பி எப்படித்தான் நிகழ்த்தினான் என்பது இன்றுவரை பார்ப்போரை யெல்லாம் வியக்க வைக்கும் ஒரு சிற்ப அற்புதம்.

    அன்னதானத்தைப் போலவே ஒருவருக்கு வழங்கப்படும் வஸ்திர தானமும் சிறப்பானதாகப் போற்றப் படுகிறது. உணவு உடை உறையுள் என்ற மூன்று அடிப்படைத் தேவைகளில் ஒன்றை அது நிறைவு செய்து விடுகிறது இல்லையா?

    ஆலயத்தில் தெய்வங்களுக்கு வெவ்வேறு ஆடை அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது. தெய்வங்கள் மட்டுமல்ல, தெய்வங்களின் அடியவர்களும் ஆடைகளால் தங்களை வேறுபடுத்திக் கொண்டு தாங்கள் யாருடைய பக்தர்கள் என்பதை அறிவிக்கிறார்கள்.


    ஐயப்ப பக்தர்கள் கறுப்பு ஆடையும் முருகனது அடியவர்கள் பச்சை ஆடையும் மேல்மருவத்தூர் பராசக்தி அடியவர்கள் சிவப்பு ஆடையும் அணிகிறார்கள்.

    கேரளத்தில் ஆண்கள் ஆலயத்திற்குள் செல்லும்போது மேலாடை அணியக் கூடாது என்ற விதி இருக்கிறது. எனவே அவர்கள் மேலாடையை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு தான் கோவிலுக்குள் பிரவேசிக்கிறார்கள்.

    ஆக இந்தியா எங்கும் மக்களின் மனங்களில் ஆன்மிக உணர்வைத் தோற்றுவிப்பதில் அவர்கள் அணியும் ஆடையும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×