search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தமிழுக்கு வளம் சேர்த்த ஜி.யு.போப்
    X

    தமிழுக்கு வளம் சேர்த்த ஜி.யு.போப்

    • திருக்குறளில் 1,330 குறள்களையும் முழுமையாக ஆங்கிலத்தில் முதன்முதலாக மொழிபெயர்ப்பு செய்தார்.
    • தமிழைக்கற்று உணர்ந்து தமிழ் தொண்டராகவே மாறிவிட்ட போப் தஞ்சாவூரில் இருந்து ஊட்டி சென்று வாழ்ந்தார்.

    இன்று (பிப்ரவரி 11-ந் தேதி) ஜி.யு.போப் நினைவு நாள்.

    பிறப்பால் ஐரோப்பியராக இருந்தாலும், உள்ளத்தால் தமிழராக வாழ்ந்த ஜி.யு.போப் தமிழுக்கு பெரும் தொண்டாற்றியவர்.

    'நான் இறந்தபின் என் கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்' என்ற வாசகம் இடம் பெற வேண்டும் என்று கூறியவர்.

    கனடா நாட்டுக்கு அருகில் உள்ள பிரின்ஸ் நெட்வொர்க் தீவில் 1820-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி டாக்டர் ஜி.யு.போப் பிறந்தார். அவருடைய முழு பெயர் ஜார்ஜ் உக்லோ போப் என்பதாகும். தந்தை பெயர் ஜான் போப். தாயார் கேத்ரின்.

    சமயப்பணி

    கிறிஸ்தவ சமயப் பணிக்காக 1839-ம் ஆண்டில் அவரை தென்னிந்தியாவுக்கு கிறிஸ்தவ திருச்சபை அனுப்பி வைத்தது சென்னையில் இருந்த அவர் சாந்தோம் பகுதியில் தங்கினார்.

    தூத்துக்குடி அருகில் உள்ள சாயர்புரத்தில் குடியேறினார். ஆரியங்காவு பிள்ளை ராமானுஜ கவிராயர் ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றார். கிறிஸ்தவ சமய பணியாற்றியதுடன் கலாசாலை அமையவும், நூல் நிலையம் உருவாகவும் பாடுபட்டார். தேவாலயம் ஒன்றையும் அமைத்தார்.

    1849-ல் போப் இங்கிலாந்து சென்றார். பின்னர் தமிழகத்திற்கு திரும்பி தஞ்சாவூரில் குடியேறினார்.

    அப்போது ஏராளமான தமிழ் நூல்களைக் கற்று உணர்ந்தார். தொல்காப்பியம், நன்னூல் போன்ற நூல்களை மாணவர்கள் கற்பதற்கு கடினமாக இருந்ததால் எளிய தமிழில் இலக்கண நூல்கள் எழுதி வெளியிட்டார். மேல் நாட்டவர்கள் சுலபமாக தமிழ் கற்பதற்காக தமிழ் கையேடு ஒன்றை வெளியிட்டார்.

    திருக்குறள்

    திருக்குறளில் 1,330 குறள்களையும் முழுமையாக ஆங்கிலத்தில் முதன்முதலாக மொழிபெயர்ப்பு செய்தார். 1886-ல் இது வெளிவந்தது. ஆங்கில மொழிபெயர்ப்பின் முன்னுரையில் போப் எழுதியிருப்பதாவது:-

    தமிழ் மொழி பண்பட்ட மொழி. சொற்செல்வம் படைத்த தனிமொழி. தென்னிந்திய மொழிகளுக்கு எல்லாம் அது தாய் மொழி. தமிழ் மொழியின் இலக்கண நெறிகள் தத்துவ உண்மைகள் நிறைந்தன. தமிழில் இலக்கியங்கள் ஒழுக்கத்தையும், அறநெறிகளையும் ஊட்டுவதற்கு என்றே உருவானவை. உருவாகியவை. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு திருக்குறள்.

    உயர்ந்த அறநெறியும், உயிரினும் சிறந்த ஒழுக்கமும் பேணப்பெறும் மக்கள் வாழும் நாட்டில்தான் திருக்குறள் போன்ற நீதிநூல் உருவாகும். உருவாகவும் இயலும். அழுக்கில்லாத தூய நீரூற்று போல திருக்குறள் தோற்றம் தருகிறது.

    ஜி.யு.போப் திருக்குறள் மற்றுமின்றி, நாலடியார், திருவாசகம் முதலிய நூல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

    ஒழுக்க நெறி

    திருக்குறள், நாலடியார், பழமொழி, இனியவை நாற்பது முதலிய நூல்களில் இருந்து ஒழுக்க நெறியை போதிக்கும் சிறந்த பாடல்களை தேர்ந்தெடுத்து தனிச்செய்யுள் கலம்பகம் என்ற பெயரில் தொகை நூல் ஒன்றை வெளியிட்டார்.

    தமிழைக்கற்று உணர்ந்து தமிழ் தொண்டராகவே மாறிவிட்ட போப் தஞ்சாவூரில் இருந்து ஊட்டி சென்று வாழ்ந்தார்.

    இந்திய வரலாறு பற்றி 2 நூல்களை வெளியிட்டார். 1871-ல் பெங்களூரு சென்று பிஷப் கார்டன் பாடசாலையின் தலைமை பொறுப்பு ஏற்றார். ஏறத்தாழ 42 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த போப் 1882-ம் ஆண்டில் தன் 62-வது வயதில் இந்தியாவை விட்டு இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றார். 1885-ல் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.

    அங்கு மாணவர்களுக்கு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்றுக் கொடுத்தார்.

    திருவாசகம்

    போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த திருவாசக நூல் அவரது 80-வது பிறந்த நாள் அன்று வெளியிடப்பட்டது. அவருடைய இறுதி விருப்பம் அவரது தமிழ்ப்பற்றை வெளிக்காட்டுவதாக அமைந்து இருந்தது.

    'நான் இறந்த பின் என் கல்லறையில் தமிழ் மாணவன் என்று குறிப்பிட வேண்டும். என் கல்லறையை அமைப்பதற்காகும் செலவில் ஒரு பகுதி தமிழ் மக்களின் நன்கொடையாக அமைய வேண்டும், என்று தன் விருப்பத்தை எழுதி வைத்தார். தமிழ்த்தாத்தா உ.வே.சா மீது ஜி.யு.போப் மிகுந்த பாசம் கொண்டு இருந்தார். அடிக்கடி கடிதம் எழுதி தன் சந்தேகங்களை போக்கிக் கொள்வார்.

    கருணை

    அதில் ஒரு கடிதம்:-

    அன்பு நண்பர் உ.வே.சா. அவர்களுக்கு,

    தாங்கள் அனுப்பிய புறப்பொருள் வெண்பா மாலைக்காக நன்றி பாராட்டுகிறேன். உங்கள் பதிப்பு திருத்தமாகவும், பூர்ணமாகவும் இருக்கிறது. பழந்தமிழ் நூல்கள் எல்லாம் புதுத்தமிழர்களுக்கு விளங்கும்படி செய்ய வேண்டும். அதற்கு வழிசெய்யுங்கள்.

    புறநானூற்றை இன்னும் தெளிவுபடுத்த முடியாதா?, எனக்கு தமிழ் தெரியுமென்று நான் எண்ணிக்கொண்டிருந்தாலும் எனக்கு அதில் பல பகுதிகள் விளங்கவில்லை. அதனால் இன்னும் சுலபமான நடையில் உணர வேண்டும். பண்டிதரல்லாத என் போன்றோர் புரிந்துகொள்ள கருணை கொள்ளுங்கள்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

    தமிழ்த்தாயின் தவப்புதல்வராக விளங்கிய போப் 1908 பிப்ரவரி 11-ந்தேதி காலமானார்.

    நன்கொடை

    அவருடைய விருப்பப்படி அவர் கல்லறையை அமைக்க பச்சையப்பன் கல்லூரி தமிழ் பேராசிரியர் செல்வ கேசவ ராய முதலியார் தமிழர்களிடம் நன்கொடை வசூலித்து, இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.

    ஆக்ஸ்போர்டில் வால்டன் தெரு என்ற வீதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஒரு மரத்தடியில் சலவை கல்லால் ஆன போப் கல்லறை உள்ளது.

    இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றபோது தமிழுக்கு வளம் சேர்த்த ஜி.யு.போப்புக்கு, தமிழக அரசு சென்னை மெரினா கடற்கரையில் உருவச்சிலை அமைத்து கவுரவப்படுத்தியது.

    ஜி.யு.போப், தமிழுக்காக ஆற்றிய அரும்பணிகள், தமிழ் உள்ளவரை நினைவுகூரப்பட்டு, நிலைத்து நிற்கும்.

    Next Story
    ×