என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
வாழ்க்கையின் மதிப்பு எவ்வளவு?!
- நாம் நம்மை மதிக்கத் தொடங்கினால் வாழ்க்கையின் மதிப்பீடு பெருகிக்கொண்டே போகும்.
- இயற்கையின் படைப்பில் எல்லாருமே அழகானவர்கள்
இயற்கையின் படைப்பில் எல்லாருமே அழகானவர்கள்; மனிதர்கள் அழகானவர்கள்; அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற வாழ்க்கையும் அழகானதுதான். யார் யார் தனது மதிப்பை உணர்ந்து தன்னை ஆராதிக்கக் கற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் இந்த உலகில் மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்குத் தகுதி பெற்றவர்கள் ஆகின்றனர்.
சிலர் வாழ்க்கையில், நொடிக்கு நொடி தாம் சல்லிக்காசுக்குப் பிரயோஜனமில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சலித்துக்கொண்டே இருப்பார்கள். உண்மையில் அவர்களெல்லாம் பெரும் புதையல் மேட்டுக்கு மேல் தாம் அமர்ந்திருப்பது தெரியாமல் பிச்சையெடுத்துக் கொண்டிருப்பவர்கள். நொந்தவர்கள் வெந்துதான் போகவேண்டுமேயொழிய எந்த காலத்திலும் சிறந்தவர்கள் ஆகமுடியாது.
சம்பாதித்துக்கொண்டே இருப்பதுதான் மதிப்புமிக்க வாழ்க்கை என்று சிலர் கூறுகிறார்கள்; அவர்கள் `சம்பாதிப்பது' என்று அர்த்தப்படுத்திக் கொள்வதெல்லாம் `பணம் சம்பாதிப்பது' பற்றியதே ஆகும். பொருளை ஈட்டுவதும், வீடு,நிலம், கார் முதலிய வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வதும் ஒருவகைச் சம்பாத்தியம்தான் என்றாலும் அதையும் தாண்டிப் பலவகைச் சம்பாத்தியங்கள் உலகில் உள்ளன.
அறிவைச் சம்பாதிப்பது, திறமையைச் சம்பாதிப்பது, நற்குணங்களைச் சம்பாதிப்பது,புகழைச் சம்பாதிப்பது, நல்ல நண்பர்களையும் நல்ல உறவுகளையும், நல்ல மனிதர்களையும் சம்பாதிப்பது, நல்ல பெயரைச் சம்பாதிப்பது, நல்ல அனுபவங்களைச் சம்பாதிப்பது என்று மதிப்புமிக்க சம்பாத்தியங்கள் நாட்டில் எவ்வளவோ இருக்கின்றன.
இவற்றையெல்லாம் சம்பாதிப்பதற்குப் பணம் தேவைப்படுவதே இல்லை; ஏன்? பணத்தைச் சம்பாதிப்பதற்குக் கூட அடிப்படையில் பணம் தேவைப்படுவதே இல்லை; அடிப்படையில் உழைப்பும் தளராத முயற்சியும் இருந்தால் போதும்.
இந்த உலகில் உயிர்வாழும் காலம் வரைக்கும் தேவையான பணத்தோடு வாழ்வது மதிப்பான வாழ்க்கை என்பர் சிலர். தன் காலத்திற்குப் பிறகும், வருகிற சந்ததிகளுக்கும் சொத்துச் சேர்த்து வைப்பதே சிறந்த மதிப்பான வாழ்க்கை எனச் சிலர் முதுமையிலும் ஓய்விலாது பணம் தேடிக்கொண்டே இருப்பார்கள். உண்மையில் இதுவெல்லாம் பொருளாதாரம் சார்ந்த கோட்பாடே ஆகும்.
உண்மையில் வாழ்க்கையின் மதிப்பு எவ்வளவு? அதன் விலைமதிப்பு என்ன?. இந்தக் கேள்வி களுக்குப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் கூறினாலும், தத்துவ, வாழ்வியல் அடிப்படை களில் கூறினாலும் பதில் ஒன்றுதான். ஆம்! வாழ்க்கை விலை மதிப்பற்றது.
வாழ்க்கையின் மதிப்பை மற்றவர்களிடம் கேட்பதைவிட நமக்கு வாழ்க்கையைத் தந்த கடவுளிடமே கேட்டுவிடுவோமே என்று முடிவு செய்து கடவுளிடம் கேள்வியோடு போய் நின்றான் ஒரு மனிதன். அவனது கையில் ஒருகல்லைத் தந்த கடவுள், "இதை எடுத்துக்கொண்டு கடைவீதிக்குச் செல்!. அங்கே வணிகம் செய்யும் பலவித வணிகர்களிடம் இதற்கு என்ன விலை தருவீர்கள்? என்று கேட்டு வா! விற்றுவிடாதே! விலையை மட்டும் கேட்டு வா!" என்று கூறி அனுப்பி வைத்தார்.
கடைவீதிக்கு வந்த மனிதன் முதலில் ஒரு தள்ளுவண்டியில் ஆரஞ்சுப் பழங்கள் விற்றுக் கொண்டிருந்த வியாபாரியிடம் கடவுள் தந்த கல்லைக் காண்பித்து இதற்கு என்ன விலை தருவாய்? என்று கேட்டான். கல்லை வாங்கிப் பார்த்த பழ வியாபாரி, ஒரு டஜன் ஆரஞ்சுப்ப ழங்கள் தரலாம்! என்று பதிலளித்துவிட்டு, அடுத்த வாடிக்கையாளரைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார்.
அடுத்து ஒரு காய்கறிக் கடைக்குச் சென்ற மனிதன், அங்கிருந்த வியாபாரியிடம் கல்லைக் காண்பித்து, இதற்கு என்ன விலை தருவாய்? என்று கேட்டான். கல்லைக் கொஞ்சம் ஆர்வத்தோடு பார்த்த காய்கறி வியாபாரி, இந்தக் கல்லுக்கு விலையாக ஒருமூட்டை உருளைக் கிழங்கைத் தரவா? என்று கேட்டார். மறுத்த மனிதன் அடுத்து ஒரு நகைக் கடைக்குள் நுழைந்தான்.
அலங்காரமாகவும் வெகுநேர்த்தியாகவும் இருந்த நகைக்கடைக்குள் நுழைந்ததும் அங்கிருந்தவர்கள் மனிதனை அன்போடு வரவேற்றனர்.
முதலாளியை விசாரித்துக் கொண்டு, அவரிடம், தான் கொண்டு வந்திருந்த கல்லைக் காண்பித்து இதற்கு என்ன விலையை நீங்கள் நிர்ணயித்துத் தருவீர்கள்? என்று கேட்டான்.
கல்லை வெறுமனே பார்க்காமல் உரிய கருவிகள்கொண்டு ஆராய்ந்து பார்த்த நகை வியாபாரி, 10 லட்சம் ரூபாய் தரலாம் என்று கூறினார். இருந்தாலும் இது விற்பனைக்கல்ல என்று மனிதன் கல்லைத் தர மறுக்கவே, மேலும் ஐந்து லட்சம் போட்டு 15 லட்சமாகத் தருகிறேன் என்று விலையை உயர்த்திக் கூறினார் நகை வியாபாரி. கல்லை விற்காமல் விலைமட்டும் கேட்டு வா! என்று கடவுள் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு கடையைவிட்டுக் கல்லோடு வெளியேறினான் மனிதன்.
அந்தக் கடைவீதியில் விலையுயர்ந்த கற்கள் நவரத்தினங்கள் விற்கும் கடைக்குள் அடுத்து நுழைந்தான் மனிதன். கையில் பளபளவென்று ஒளிவீசும் ஒரு கல்லோடு ஒரு மனிதன் நுழைவதைக் கண்ட கடையின் ரத்தின வியாபாரி அவனை ஆவலோடு வரவேற்றார்.
கல்லின் மதிப்பை அறிந்து செல்ல வந்திருப்பதை மனிதன் வியாபாரியிடம் தெரிவித்தான். கல்லை வாங்கிப் பார்த்தவுடன், ஐயா விலைமதிப்பற்ற மாணிக்கக் கல் ஐயா தங்கள் கையில் ஜொலிப்பது; இதனைத் தொட்டுப் பார்ப்பதே பெரும் பாக்கியம்! என்று தனது கையில் கல்லை வாங்கினார் ரத்தின வியாபாரி.
நவீன இயந்திரங்கள் கருவிகள் கொண்டு பலநிமிடங்கள் ஆராய்ந்து பார்த்தார். பார்த்து முடித்தவுடன் மிகுந்த மரியாதையுடன், மனிதனின் கைகளை நீட்டச் சொல்லி அந்த மாணிக்கக் கல்லைக் கைகளில் வைத்தார். ஐயா இந்த மாணிக்கக் கல்லுக்கு விலைகூற என்னால் மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள ரத்தினக் கற்கள் வியாபாரிகள் எத்தனைபேர் சேர்ந்தாலும் முடியாது!. இந்த உலகையே விலைபேசினாலும் இந்தக் கல்லின் மதிப்பிற்கு இணையாகாது! என்று வியாபாரி சொல்லிமுடித்தார்.
கல்லோடு மீண்டும் கடவுளிடம் வந்த மனிதன், கடைவீதியில் நடந்த சம்பவங்களை விரித்துரைத்தான். சிரித்துகொண்டே கடவுள் சொன்னார்," மானுடா உன் வாழ்க்கையும் இந்த மாணிக்கக் கல்லைப்போல விலைமதிப்பற்றதுதான். ஆரஞ்சுப்பழ வியாபாரி, காய்கறி வியாபாரி, நகைக்கடை வியாபாரி ஆகியோர் அவரவர் அறிவிற்கு எட்டிய வரையில் கல்லுக்குள்ள மதிப்பைக் கூறினர். ஆனால் கல்லின் உண்மையான மதிப்பை அறியத் தெரிந்த ரத்தின வியாபாரியே அதன் உண்மை மதிப்பை, விலைமதிப்பற்ற சிறப்பை உனக்கு விளங்க வைத்தார்".
"மனித வாழ்க்கை ஒவ்வொன்றும் இந்த மாணிக்கக் கல் போன்று விலை மதிப்பற்றதுதான். புரியாதவர்கள் மதிப்பிழந்து போகிறார்கள்.
மதிப்பை உணர்ந்து கொண்டவர்கள் சாதித்துச் சாதித்து மதிப்பைப் பெருக்கிகொண்டே போகிறார்கள்" என்று சொல்லி முடித்தார் கடவுள்.
படைத்தவன் பெருமைக்குரியவனாக இருக்கும்போது படைப்புமட்டும் எப்படிப் பெருமை குறைந்ததாக இருக்கும்?.
நாம்தாம் தேவையில்லாமல் பலவேளைகளில் நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறோம். நம்மைப்பற்றி அடுத்தவர் கொண்டுள்ள கருத்துதான் மதிப்பீடு என்றாலும், சாதாரண அறிவுகொண்டவர்கள் நம்மைக் குறைத்துக் கூறுவதை வைத்து நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொண்டால் எப்படி?.
இந்த உலகில் எல்லாரும் ஒரேவிதமான கண்ணோட்டம் கொண்டவர்கள் இல்லை; அவரவர் பார்வைக்கு ஏற்ற வகையில் மனித வாழ்க்கையின் மதிப்பீடுகள் மாறுபடலாம். அவர்கள் ஆளுக்கொருவகையில் மதிப்பிடுவதை வைத்து நம்முடைய மதிப்பும் அவ்வளவுதான் என்று மனம் தாழ்ந்து விடக்கூடாது.
விலைமதிப்பற்ற வாழ்க்கை நமக்கு வாய்த்திருக்கிறது. அந்த வாழ்க்கையை வாழும் வகையில் வாழ்ந்து மதிப்பை உயர்த்திக்கொண்டே போக வேண்டும்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் மதிப்பையும் உயர்த்திக்காட்டுவதில் முன்னிற்பது அவனது குடும்ப வாழ்வே ஆகும். குடும்ப உறுப்பினர்களான கணவன், மனைவி, பிள்ளைகள், பெரியவர்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பும் மதிப்பும் மரியாதையும் கொண்டு வாழும் நெறியறிந்து வாழவேண்டும். அதுவே மதிப்பைத் தரும் குடும்ப வாழ்வு.
`அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவரா? சிறப்பாகத்தான் இருப்பர்!' என்று பெருமைப் படும் அளவுக்குக் குடும்ப வாழ்வை மதிப்புடன் நடத்த வேண்டும். கணவர் ஒருபக்கம், மனைவி ஒருபக்கம், குழந்தைகள் ஒருபக்கம், மூத்தோர்கள் ஒருபக்கம் என ஆளுக்கொரு பக்கமாகக் கருத்தொற்றுமை சிதையுமளவுக்குக் குடும்பம் போனால் வாழ்க்கை மதிப்பற்றுப் போய்விடும்.
குடும்பத்திற்கு அடுத்து வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் கவனம் செலுத்த வேண்டியது அவரது உழைப்பில் அல்லது தொழிலில் மதிப்போடு செயல்படுவது ஆகும். ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் மதிப்பிழந்து போவதற்கு முக்கியமான காரணம் தாம் செய்யும் தொழிலை அவர்கள் மதிப்பதே கிடையாது. என்னுடைய தகுதிக்கும் திறமைக்கும் நான் பார்க்கவேண்டிய தொழிலே இதுவல்ல! என்று மாதம் பத்து லட்சம் சம்பாதிப்பவர் கூட வேண்டா வெறுப்புடன் கூறுவதைப் பார்க்கலாம்.
இப்படி வேண்டா வெறுப்புடன் தொழில் செய்பவர்கள் அந்த தொழிலால் எந்தக் காலத்திலும் மதிப்புடன் வாழப்போவதேயில்லை. பலர் கூறுவதைப்போல தெருக்கூட்டும் தொழில் செய்பவர்கூட அதைத் தொழில்பக்தியோடு செய்தால், அந்த தொழில் மூலமாகவும்கூட உலகம்போற்றும் மதிப்பையும் மரியாதையையும் பெறலாம்.
உழைப்பதற்கு கைகால்கள் கொண்ட உடம்பையும், சிந்திக்க, கற்க, அன்பு செலுத்த, அடுத்தவர்க்கு உதவ எண்ணற்ற உடல் உறுப்புகளையும் உணர்வுகளையும் விலை மதிப்பற்ற வகையில் நாம் ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம். நம்முடைய மதிப்பை நாம் முதலில் உணர்ந்துகொள்வதே நம்முடைய வாழ்க்கையின் மதிப்பை அறிந்துகொள்ளத் தொடங்கும் அரிச்சுவடி.
மதிப்புமிக்க உடம்பை வைத்துக்கொண்டு மதிப்பிற்குரிய செயல்களை மட்டுமே செய்வது; வாழ்க்கையில் துன்பமோ இன்பமோ எது நேர்ந்தாலும் அவற்றின்மூலம் கற்றுக்கொண்டே இருப்பது; நேர்மையில் இருந்து விலகாமல், நேர்த்தியான செயல்களை மட்டுமே செய்து மதிப்புடனும் மரியாதையுடனும் இயங்கிக் கொண்டே இருப்பது; அன்பையும் சேவையையும் அறவழியில் செய்வதொன்றே மதிப்பான வாழ்க்கை என்பதை மதிப்புடன் வாழ்ந்த மாமனிதர்கள் வழியாக அறிந்து கொள்வது... இவையே வாழ்க்கையின் மதிப்பு.
வானுறையும் தெய்வத்தின் வழி படைப்பு நிகழ்வது உண்மையென்றால், படைப்பாய் பிறந்துள்ள மனிதர் அனைவரும் தனது மதிப்பை உணர்ந்த செயல்களினால் வாழ்வாங்கு வாழ்ந்தால் அந்த தெய்வீக வாழ்க்கையை மண்ணுலகிலேயே அடைந்து விடுவர். இது வள்ளுவர் வாக்கு.
மதிப்பிற்குரியவர்களே! நாம் மதிப்புமிக்கவர்கள் என்பதை நமது மதிப்புமிக்க செயல்களால் வாழ்ந்து காட்டுவோம்; நாம் நம்மை மதிக்கத் தொடங்கினால் நமது வாழ்க்கையின் மதிப்பீடு பெருகிக் கொண்டே போகும்; நாம் நம்மைத் தாழ்த்திக்கொண்டே போனால் நமது வாழ்க்கையின் மதிப்பும் தாழ்ந்துகொண்டே போகும்.
மதிப்போம்! மதிப்பீடுகள் பெருக்குவோம்!
தொடர்புக்கு 9443190098
முனைவர்
சுந்தர ஆவுடையப்பன்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்