search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    காமராஜர் செய்த கல்விப்புரட்சி- முனைவர் கவிஞர் இரவிபாரதி
    X

    காமராஜர் செய்த கல்விப்புரட்சி- முனைவர் கவிஞர் இரவிபாரதி

    • தான் முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் மாணவர்களுக்கு இலவசக்கல்வி வழங்குவதையும், மதிய உணவு வழங்குவதையும் கையிலே எடுத்துக் கொண்டார் காமராஜர்.
    • பள்ளிக்கூடம் போனால் நிச்சயம் சாப்பாடு உண்டு என்று மாணவர்களை எண்ண வைத்ததால், மாணவர்களின் வருகை நாளாக... நாளாக பெருகியது.

    மகாகவி பாரதியின் மீதும் அவருடைய புரட்சிக் கவிதைகளின் மீதும் காமராஜருக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உண்டு. சுதந்திரத்தின் அருமை தெரியாமல் உறங்கிக்கிடந்த மக்களை தனது உணர்ச்சிமிக்க கவிதைகளால் தட்டி எழுப்பிய மாபெரும் கவிஞரல்லவா பாரதியார். பொதுக்கூட்டங்களில் காமராஜர் பேசுகிற பொழுது பாரதியார் கவிதைகளை மேற்கோள் காட்டிப் பேசுவார். ஏறக்குறைய பாரதியார் கவிதைகள் அனைத்துமே அவருக்கு மனப்பாடம் என்றே சொல்லலாம். யாராவது பாரதியார் கவிதையைத் தவறாக மேடையில் உச்சரித்து விட்டால் கோபம் வந்துவிடும். உண்மையான வரிகளைச் சொல்லி, திருத்தம் சொல்லி அவர்களைப் பேச வைப்பார்... பாட வைப்பார்.

    1969-ம் ஆண்டு சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பாரதியார் கவியரங்கத்தில் கலந்துகொண்டு நான் முதல் பரிசாக காமராஜர் திருக்கரங்களால் 'பொற்கிழி' பெற்றதை இப்போது நினைத்து பார்க்கிறேன். வருங்காலத்தில் நீயும் பெரிய கவிஞனாக வருவாய் என்று அப்போது என்னை வாழ்த்தியதையும் நினைத்துப் பார்க்கிறேன். அவர் பொற்கிழி வழங்கும் புகைப்படம் என் வீட்டிலே கம்பீரமாக காட்சி அளிப்பதைப் பார்த்து பாராட்டாதவர்களே இல்லை.

    என்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து எழுதுகிறார் பாரதியார். அற்புதமான இந்தக் கவிதை வரிகள் காமராஜர் தமிழகத்தில் கல்விப் புரட்சி ஏற்படுத்துவதற்கு ஓர் உந்து சக்தியாகவே இருந்திருக்கிறது. அது மட்டுமல்ல.

    வயிற்றுக்குச் சோறிட வேண்டும். இங்கு

    பயிற்சி பல கல்வி தந்து- இந்தப்

    பாரதியின் இந்த வைர வரிகளையும் அடிக்கடி பொதுக்கூட்டங்களில் பேசும்போது காமராஜர் பயன்படுத்துவார். காமராஜருடைய அடிமனதில் இவை ஆழமாக புதைந்திருக்க வேண்டும். இருந்திருக்க வேண்டும். வாய்ப்பு வரும்போது இந்த வரிகளை அர்த்தப்படுத்தி செயல்படுத்த வேண்டும் என்ற வைராக்கியம் மனதிலே வேரூன்றி இருந்திருக்கிறது. அதனால்தான், தான் முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் மாணவர்களுக்கு இலவசக்கல்வி வழங்குவதையும், மதிய உணவு வழங்குவதையும் கையிலே எடுத்துக் கொண்டார் காமராஜர்.

    கோட்டையிலே அமர்ந்து கொண்டு கோப்புகளை படித்து உத்தரவு பிறப்பித்தால் மட்டும் போதாது. நாட்டு மக்களை நாடி பிடித்துப் பார்த்து அவர்களின் தேவை அறிந்து சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தார் காமராஜர். அதற்காக அடிக்கடி கிராமங்களை நோக்கிப் பயணப்பட்டார்.

    ஒருமுறை நெல்லை மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதுதான், திருப்பு முனையான அந்த நிகழ்வு நடைபெற்றது. செல்லும் வழியில் ரெயில்வே கேட் மூடியிருந்ததால் ஓட்டுநர் காரை ஒரு ஓரமாக நிறுத்தினார். காரைவிட்டு இறங்கிய காமராஜரை அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் சூழ்ந்து கொண்டனர். காமராஜர் யாரென்று அந்தச் சிறுவர்களுக்குத் தெரியாது. அந்தக் காலங்களில் ஒரு கார் ஒரு கிராமத்தின் உள்ளே நுழைகிறதென்றால் அந்தக் கார் அந்த சிறுவர்களுக்கு அதிசய பொருளாகிவிடும். அப்படித்தான் அந்தச் சிறுவர்கள் காரைச் சூழ்ந்து நின்றார்கள். அழுக்கடைந்த சட்டை, அழுக்கடைந்த டவுசர். எண்ணெய் இல்லாத வாரப்படாத தலைமுடி. அனைத்து சிறுவர்கள் கைகளிலும் ஒரு குச்சி. அந்தக் காட்சி காமராஜரை கண்கலங்க வைத்தது.

    இதுதான் நமது நாட்டின் நிலைமையா? பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி வழங்கிவிட்டோம் என்றல்லவா நினைத்திருந்தேன். இந்த இளஞ்சிறார்கள் இங்கே மாடு மேய்த்துக் கொண்டல்லவா இருக்கிறார்கள். இவர்கள் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை? மிகுந்த கவலையோடு ஒரு சிறுவனிடம் பள்ளிக்கூடத்துக்கு போகலியா? என்று கேட்டார் காமராஜர். அய்யய்யே பள்ளிக்கூடத்துக்குப் போனா யாரு சோறு போடுவா? சிறுவனின் பதில் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் வந்தது. அப்படியே அதிர்ந்து போய்விட்டார் காமராஜர்.

    காரில் பயணத்தை தொடர்ந்தபோது அந்தச் சிறுவர்கள் ஓடிவந்த காட்சி, அவர்களின் ஏழ்மை நிலை, அந்த சிறுவனின் கேள்வி இவை தான் திரைப்படம் போல் மனத்திரையில் ஓடியது. வயிற்றிலே பசி இருந்தால் எந்தப் பிள்ளை பள்ளிக்கூடத்துக்கு போகும்? பசியை சுமந்துகொண்டு பள்ளிக்கு போனால் பிள்ளைக்கு படிப்பு வருமா? இது காமராஜர் தனக்குள்ளேயே கேட்டுக்கொண்ட கேள்வி?

    காமராஜர் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது விருதுநகரில் படித்த ஷத்திரிய வித்யா பாடசாலை இப்போது அவருக்கு நினைவுக்கு வந்தது. அந்தப் பள்ளிக்கூடத்திற்கு பெயரே 'பிடி அரிசி பள்ளிக்கூடம்' என்பதுதான். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பள்ளிப் பிள்ளைகள் கொண்டு வரும் அந்தப் பிடி அரிசியை சேகரித்து, சமைத்து மாணவச் செல்வங்களுக்கு மதிய உணவாக வழங்கினார்கள் அந்தப் பள்ளி நிர்வாகத்தினர். எப்படிப்பட்ட தொலைநோக்கு சிந்தனை. பட்டினிக்கு விடைகொடுத்த பயனுள்ள ஏற்பாடல்லவா... இது...

    சென்னை மாநகராட்சியிலே 1920 வாக்கில் மேயராக இருந்த சர் பிட்டி தியாகராயர் ஆயிரம் விளக்கு பகுதியிலே இருந்த பள்ளியிலே 165 ஏழை மாணவர்களுக்கு நண்பகல் உணவளித்த செய்தி காமராஜரின் மனத்திரையில் வந்து போனது.

    உடனே ஏதாவது செய்தாக வேண்டும். காமராஜரின் மூளை சுறுசுறுப்பாக இயங்கியது. கல்வித்துறை இயக்குனராக இருந்த நெ.து.சுந்தர வடிவேலுவை அழைத்து இதுகுறித்து ஆலோசனை கலந்தார் காமராஜர். அவர் மட்டுமே இது அற்புதமான திட்டம். இதனால் மாணவர்களின் வருகை நிச்சயம் அதிகரிக்கும் என்றார். ஆனால் சில அதிகாரிகள் எதிர்மறை கருத்துக்களையே தெரிவித்தனர்.

    அப்போது சென்னை பூங்கா நகரில் ஒரு தனியார் பள்ளி நிர்வாகிகள் நடத்திய மாநாடு ஒன்று நடந்தது. அதில் காமராஜர் பேசும் போது...

    அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமை பற்றி நான் கவலைப்படவில்லை. அத்தனை பேரும் படிச்சாகணும். ஏழை பிள்ளையும் இந்தியாவுக்கு சொந்தகாரன் தானே. இதை தள்ளிப் போடக்கூடாது. உடனே செஞ்சாகணும். பட்டினி இருந்தால் படிப்பு வருமா?... இதை நான் ரொம்ப முக்கிய வேலையாக கருதுகிறேன். மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு இதற்காக ஊர் ஊராக சென்று பிச்சை எடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்று உணர்ச்சி பொங்க காமராஜர் பேசிய பேச்சு. மாநாட்டுக்கு வந்தவர்களை வியக்க வைத்தது.

    1956-ம் ஆண்டு மதிய உணவளிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 12 லட்சத்து 5 ஆயிரம் மாணவர்கள் இதன் மூலம் மகிழ்ச்சியோடு மதிய உணவருந்தினார்கள். பின்னர் இந்த திட்டம் படிப்படியாக தமிழகமெங்கும் எப்படி எல்லாம் விரிவுபடுத்தப்பட்டது என்பதை தலைசிறந்த பத்திரிகை ஆசிரியரான கோபண்ணா அவர்கள் தான் தயாரித்த அற்புதமான புத்தகமான காமராஜர் ஒரு சகாப்தம் என்ற நூலிலே மிக தெளிவாக பட்டியலிட்டுள்ளார்.

    1957-58-ல் மதிய உணவளிக்கப்பட்ட பள்ளிகள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 270, மதிய உணவு பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 29 ஆயிரம். 1958-59-ல் பள்ளிகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 552. மாணவர்கள் எண்ணிக்கை 14 லட்சம். 1959- 60-ல் பள்ளிகளின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 136. பயன் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்து 91 ஆயிரம். 1960-61-ல் பள்ளிகள் 24 ஆயிரத்து 586 மாணவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 78 ஆயிரம். 1961-62-ல் பள்ளிகள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 406 மாணவர் எண்ணிக்கை 31 லட்சத்து 50 ஆயிரம் 1962-63-ல் பள்ளிகள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 250-ம் மாணவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 65 ஆயிரம். இலவச கல்வி திட்டத்திற்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள பொருள்களை வழங்கி எப்படி ஆதரவு தெரிவித்தார்களோ அதன் படியே மதிய உணவு திட்டத்திற்கு தேவையான அரிசி, காய்கறி போன்றவற்றையும் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆக இந்த மகத்தான திட்டத்தின் செலவுகளை 60 விழுக்காடு அரசு ஏற்க.. மீதி 40 விழுக்காடு அப்பகுதி மக்கள் ஏற்குமாறு வகுத்து செயல்படுத்தி வெற்றி கண்டார் காமராஜர். மத்திய அரசின் (1957 மற்றும் 1962 ஆண்டுகளில்) ஐந்தாண்டு திட்டமும் இதற்கு பேருதவியாக இருந்தது.

    இப்படி ஒரு அருமையான திட்டத்தை கேள்வியுற்ற அமெரிக்காவின் சர்வதேச தன்னார்வ நிறுவனமான கேர் நிறுவனம், பால்பவுடர், சோள மாவு, தாவர எண்ணெய் போன்ற உணவு பொருட்களை 1961-62 வாக்கிலே வழங்கி, இத்திட்டம் வெற்றி பெற உதவியது. அதனால் இந்த மதிய உணவு திட்டம் நகர்ப்புற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

    பள்ளிக்கூடம் போனால் நிச்சயம் சாப்பாடு உண்டு என்று மாணவர்களை எண்ண வைத்ததால், மாணவர்களின் வருகை நாளாக... நாளாக பெருகியது. எனவே காமராஜர் உண்டி கொடுத்து உயிர் கொடுத்த தலைவராக உயர்ந்து நின்றார்.

    கடையர், கடைத்தேற வேண்டும் என்றால் கல்வி மிக மிக முக்கியம். படிக்கிற கல்வியால் அறிவும், திறமையும் பெற்று நாளடைவில் மாணவர்கள் நல்ல எதிர்காலத்தை காணுவார்கள். நிலம் ஈரமாக இருந்தால் பயிரிடலாம். காய்ந்து, வறண்டு போய் கிடந்தால் எப்படி பயிரிடுவது. அது போலத்தான் பிள்ளையின் வயிறு காய்ந்து போய் கிடந்தால், படிப்பு எப்படி மூளையில் பதியும்?

    அன்னதானம் நமக்கு புதிதல்ல. இதுவரை நம் வீட்டுக்கு வந்தவர்களுக்கு போட்டோம். இப்போது பள்ளி கூடத்தை தேடிப்போய் போட சொல்கிறோம். அப்படி செய்தால் உயிர் காத்த புண்ணியத்தோடு படிப்பு தந்த புண்ணியமும் சேரும். இதை உணர்ந்து, இந்த திட்டம் வெற்றி பெற உழைக்கும் அனைவரையும் மனதார பாராட்டுகிறேன் என்று மதிய உணவு திட்டம் துவக்கப்படும் ஒவ்வொரு கிராமத்திலும் பேசினார் காமராஜர்.

    கவிஞர் இரவிபாரதி

    ஞான துறவியான விவேகானந்தர் ஒரு கூட்டத்தில் இலவசமாக கல்வி வழங்குவது பாராட்டக்கூடிய ஒன்றாக இருந்தாலும்.. அவன் வீட்டிலே வறுமை இருந்தால் வயிற்றில் பசி இருந்தால் எப்படி அவனால் பள்ளி செல்ல முடியும்? ஏழை பையன் கல்வியை நாடி வராவிட்டால், கல்வி தான் அவனை நாடி போக வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்த நாட்டு மக்கள் பெற்றிருக்கும் கல்வி, அறிவாற்றலை பொறுத்தே அமைகிறது. நாம் வாழ்வில் உயர்வடைய வேண்டுமென்றால் பொதுமக்கள் மத்தியில் அனைவருக்கும் போய் சேரும் போது கல்வியை பரப்பியாக வேண்டும். எனவே அதனை செய்வது ஒன்று தான் நாம் சிறப்படைவதற்கு அடை யாளமாக அமையும்.

    சுவாமி விவேகானந்தரின் உத்வேகத்தை இந்த பேச்சின் ஒவ்வொரு வார்த்தையையும், கருத்தில் கொண்டு அதை நடைமுறைபடுத்தி வெற்றி கண்டவர் நமது காமராஜர். 1889-ல் விவேகானந்தர் பேசிய இந்த அற்புதமான பேச்சின் உள்ளடக்கத்தை மூத்த வழக்கறிஞர் க.சக்திவேல் அவர்கள் தான் எழுதிய காமராஜரின் பொற்கால ஆட்சி என்ற புத்தகத்தில் பொருத்தமாக பதிவு செய்துள்ளார்.

    மேற்கொண்டு ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக புத்தகமும், சிலேட்டும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். காமராஜர் படிக்கும் பிள்ளைகளுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. இது ஏழை வீட்டு குழந்தை. இது பணக்கார வீட்டு குழந்தை என்று எவரும் அடையாளப்படுத்திட கூடாது என்பதற்காக இலவச சீருடை வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்து நடைமுறைபடுத்தினார்.

    ஒரு சமயம், காலஞ்சென்ற தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காரில் பயணிக்கிறபோது ஒரு பள்ளியில் மாணவ-மாணவியர் பள்ளி சீருடையில் வருகிற அந்த அழகான காட்சியை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தேன். இலவச கல்வி, மதிய உணவு என்ற மகத்தான திட்டங்களோடு சமமாக வைத்து எண்ணப்பட வேண்டிய அற்புதமான திட்டம் இது. காமராஜரின் தொலைநோக்கு சிந்தனையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று பேசியிருக்கிறார்.

    அடுத்ததாக அறிவு பரவலாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கற்றறிந்த சான்றோர்கள் நூல்களை எல்லாம் பொதுமக்கள் படித்து பயனுற வேண்டும் என்ற எண்ணத்தில், முதலில் மாவட்ட தலைநகரங்களிலும், பின்னர் வாய்ப்புள்ள கிராமங்களிலும் நூல் நிலையங்களை ஏற்படுத்தினார். விலை உயர்ந்த நூல்களை காசு கொடுத்து வாங்க முடியாதவர்கள் படிப்பதற்காக செய்திட்ட பயனுள்ள ஏற்பாடு இது. முதற்கட்டமாக 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்க ஏற்பாடு செய்தார் காமராஜர். இப்படி கல்வி புரட்சியும், அறிவு புரட்சியும், செய்த காமராஜரை என்னென்று சொல்லி பாராட்டுவது.

    அடுத்த வாரம் சந்திப்போம்...

    Next Story
    ×