search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முருகன் அவதாரம்!
    X

    முருகன் அவதாரம்!

    • காசிபர் என்ற முனிவருக்கும், மாயை என்ற அசுரக்குலப் பெண்ணுக்கும் பிறந்தவன் சூரபத்மன்.
    • மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் பிடித்துக் தேவர்களை முருகப்பெருமான் சிறை மீட்டார்.

    தமிழ்க் கடவுள் முருகனின் அவதாரத்துடன் முழுமையாக பின்னி பிணைந்த ஒரே ஆலயம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்தான். தமிழ்நாட்டில் வேறு எந்த முருகன் தலத்துக்கும் இந்த சிறப்பு கிடையாது.

    முருகப்பெருமானின் அவதாரம் உருவானதற்கு சூரபத்மன் என்ற அசுரனை அழிக்க வேண்டும் என்பதுதான் காரணமாகும். அந்த அசுரன் அழிக்கப்பட்ட இடம் திருச்செந்தூர்.

    சூரபத்மனையும், அவனது படைகளையும் அழித்து, ஒழித்து தேவர்களையும், மக்களையும் காப்பதற்காக முருகப்பெருமான் படை வீடு அமைத்து தங்கியிருந்த ஒரே இடம் திருச்செந்தூர். தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் முருகன் தங்கியிருந்து படை வீடு அமைத்து போர் புரியவில்லை. இதனால் படை வீடுகளில் முதல் வீடாக மட்டுமின்றி ஒரே வீடாகவும் திருச்செந்தூர் தலத்தைதான் நமது மூதாதையர்கள் குறிப்பிட்டனர்.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழகத்தின் தொன்மையான இலக்கியங்கள் அனைத்திலும் திருச்செந்தூர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களில் முருகனை பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் திருச்செந்தூர் தலத்தை முதன்மையாக கொண்டே குறிப்பிட்டு உள்ளனர். பிற்காலத்தில்தான் "ஆறுபடை வீடு" என்று தலங்கள் வகுக்கப்பட்டன.

    இதில் இருந்து தமிழகத்தில் திருச்செந்தூர் திருத்தலம் நாகரீகம் தோன்றிய நகரங்களில் ஒன்றாக இருந்தது உறுதியாகிறது. திருச்செந்தூர் முருகன் தலத்தின் முதல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

    திருச்செந்தூர் ஆலயம் மன்னார் வளைகுடா கடலின் கரையோரத்தில் அமைந்துள்ளது. கடல் அலைகள் வந்து வந்து மோதும் வகையில் ஆலயம் இருக்கிறது. அதாவது கடல் அலைகள் ஆலயத்தை தழுவும் வகையில் அமைந்திருக்கிறது. இதனால் நமது முன்னோர்கள் அந்த ஆலயத்தை "அலைவாய்" என்று அழைத்தனர்.

    அதற்கு மரியாதை கொடுக்கும் வகையில் திரு சேர்த்து "திருச்சீரலைவாய்" என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டது. திருச்செந்தூர் ஆலயத்தில் அன்று முதல் இன்று வரை கட்டுமான பணிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

    முதலில் மலைக் குகையில் ஆலயம் அமைந்திருந்தது. கடலோரத்தில் பிரமாண்டமாக இருந்த அந்த மலையை சந்தன மலை என்று அழைத்தனர். அந்த மலையை குடைந்து தான் முருகப்பெருமான் கருவறை உருவாக்கப்பட்டது.

    பிறகு பிரகாரங்கள் தோன்றின. 17-ம் நூற்றாண்டில் ஆலயம் ஒரு முழுமையான வடிவத்துக்கு வந்தது. பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு மன்னர்களும், குறுநில மன்னர்களும், சாதுக்களும் இந்த ஆலயத்தை அமைத்தனர். என்ற போதிலும் தானாகவே அது பிரணவ மந்திரமான "ஓம்" எனும் மந்திர வடிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வடிவத்தை ஏற்படுத்தியது முருகன்தான். அங்கு ஆலயத்தை உருவாக்கியதும் முருகன்தான். முருகனின் அவதார வரலாற்றை தெரிந்து கொண்டால் திருச்செந்தூர் முருகனின் சிறப்பையும் ஆலயம் உருவான சிறப்பையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

    காசிபர் என்ற முனிவருக்கும், மாயை என்ற அசுரக்குலப் பெண்ணுக்கும் பிறந்தவன் சூரபத்மன். இவன் நீண்ட காலம் தவம் இருந்து சிவனிடம் அழியா வரம் பெற்றான். அந்த ஆணவத்தில் அவன் தேவர்களுக்கு இன்னல்கள் பல விளைவித்து வந்தான். அவன் மகன் பானு கோபனால் இந்திரன் மகன் ஜெயந்தனும், தேவர்களும் சிறை பிடிக்கப்பட்டனர்.

    இத்துன்பங்களைக் களைய வேண்டி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    அவர்களின் முறையீட்டைக் கேட்டு சிவபெருமான் மனம் இரங்கினார். சிவபெருமான் தமக்கு இயல்பாக உரிய ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் முதலிய ஐந்து முகங்களோடு ஆறாவது முகமான அதோ முகம் கொண்டு, ஆறுமுகங்களை உடையவராகி, அம்முகங்களில் உள்ள நெற்றிக் கண்கள் தோறும் ஒவ்வொரு தீப்பொறிகளைத் தோற்றுவித்து அருளினார்.

    அவை உலகம் முழுவதும் பரவி தேவர்களுக்கு அச்சத்தை விளைவித்தன. அதனால் சிவபெருமான் அவைகளைத் தம் திருக்கரத்தினால் எடுத்து வாயு தேவனிடம் கொடுத்தார். அவர் அதனைத் தாங்க முடியாமல் அக்னி பகவானிடம் கொடுத்தார்.

    அக்னி பகவான் அத்தீப் பொறிகளை தாங்க முடியாமல் கங்கையில் விட்டார். கங்கை அதன் வெப்பம் தாங்காமல் தன் மடியில் தாங்கிக் கரையில் உள்ள தர்ப்பைகள் தாமரைகள் மிகுந்த சரவணப் பொய்கையில் 6 தாமரை மலர்களில் அப்பொறிகளைச் சேர்த்தாள்.

    அங்கு அந்த ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாகின. கார்த்திகைப் பெண்கள் அறுவரின் பால் குடித்து மகிழ்ந்தனர். விளையாடித் திரிந்தனர். சிவபெருமான் அந்தக் குழந்தைகளை உமாதேவிக்குக் காட்டினார். தேவி அந்த ஆறு குழந்தைகளையும் எடுத்து ஒன்றாகச் சேர்த்து அணைத்தாள்.

    அப்போது அருவமாயும், உருவமாயும், அநாதியாயும் ஒன்றாயும், பலவாயும் பரப்பிரம்மாவும் விளங்கும் சோதிப் பிழம்பான சிவபெருமானே, ஒரு மேனியாக வடிவு கொள்ள முருகப் பெருமான் ஒரு உருவாகத் திருஅவதாரம் எடுத்தார்.

    அதைக் கண்டு மகிழ்ந்து கந்தன் எனப் பெயரிட்டு அணைத்து உச்சிமுகர்ந்து பால் ஊட்டி சிவபெருமானிடம் குழந்தையை ஒப்படைத்தார் உமா தேவியார்.

    முருகப்பெருமான் வளர்ந்து உரிய பருவம் வந்ததும், சிவபெருமான் கேட்டுக்கொண்டதற்கிணங்க தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களை அழிக்கப் புறப்பட்டார் முருகப் பெருமான்.

    தாரகாசுரன், கிரவுஞ்சனை அழித்து திருச்செந்தூரை வந்தடைந்தார். அங்கு சிவனை வணங்கி பாசுபதம் பெற்றார். அங்கு தவம் இருந்த பராச புத்திரருக்கு அனுக்கிரகம் செய்தார்.

    பின்னர் திருச்செந்தூரில் எழுந்தருளி சூரபத்மனை அழிக்க வியாழ பகவானான குருவடம் ஆலோசனை நடத்தினார். அதன்படி வீரபாகுவைச் சூரபத்மனிடம் தூது அனுப்பி சிறையிடப்பட்ட தேவர்களை விடுவிக்கும்படிக் கூறினார். தேவர்களைச் சிறைவிடுத்து, இனி தேவர்களைத் துன்புறுத்தவில்லை என முருகப் பெருமானிடம் பணிந்து வேண்ட வேண்டும் என்று வீரபாகு கூறினார். இல்லையெனில் போர் செய்து உம்மை அழிப்போம் என்று எச்சரிக்கையும் செய்தார்.

    சூரபத்மன் வீரபாகுவின் பேச்சைக் கேட்கவில்லை. ஆணவமாகப் பேசினான். அகங்காரமாக நடந்து கொண்டான். எனவே கந்தப் பெருமான் போரிடப் புறப்பட்டார். சூரபத்மன் படையுடன் எதிர்கொண்டான்.

    முதல் நாள் போரில் சூரபத்மன் மகன் பானு கோபன் போரிட வந்து தோல்வி கண்டு புறமுதுகிட்டுத் திரும்பினான்.

    இரண்டாம் நாள் சூரபத்மனும், அவன் தம்பி சிங்கமுகாசுரனும், அதிசூரன், தாரகாசுரன் மகன் அசுரேந்திரனும் உடன் வந்தனர். வீரபாகுத் தேவர் அசுரேந்திரனைக் கொன்றார்.

    மூன்றாம் நாள், சூரபத்மன் தன் மற்றொரு மகனான இரணியனைப் போரிடச் சொன்னான். அவன் அறிவுரைக் கூறியும் சூரபத்மன் ஏற்கவில்லை. இருப்பினும் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்னும் வாக்கினை ஏற்றுப் போரிடச் சென்றான் இரணியன்.

    போரில் தோற்றதும் தம் பெற்றோருக்கு அந்திமக்கடன் செய்ய தான் உயிரோடு இருக்க வேண்டும் என எண்ணி மாய சக்தியால் மீன் வடிவம் எடுத்து மறைந்தான். வீரபாகுத் தேவர் பானுகோபனைக் கொன்றார்.

    சிங்கமுகாசுரன் ஆயிரம் முகம் கொண்ட வன். அவன் தேவர்களையும், வீரபாகுவையும் தன் தாய் கொடுத்த கயிற்றால் கட்டிக் கடலில் விட்டான்.

    பாலசுப்பிரமணியருடன் போரிட வந்த படைகள் அனைத்தையும், கோர ரூபம் கொண்டு விழுங்கினான். குமரக் கடவுளால் பலமுறை வெட்டப்பட்ட வெட்டுண்ட சிரம் மீண்டும் மீண்டும் முளைத்தது.

    ஆறு நாட்கள் யுத்தம் நடந்தது.

    சூரபத்மன் திறமையாகப் போரிட்டான். முடிவில் இந்திர ஜாலத் தேரைக் கொண்டு சஞ்சீவியால் உயிர்ப்பித்த, பானுகோபன், சிங்கமுகன், தருமகோபன் முதலிய வீரர்களைக் கொண்டு மீண்டும் போரிட்டான்.

    முருகப் பெருமான் பாசுபதத்தால் மீண்டும் அவர்கள் அனைவரையும் கொன்றார். சூரபத்மன் எடுத்த மாமர உருவை வேலாயுதத்தால் இரு பிளவாக்கினார். அவன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் மீண்டும் பழைய உருவை பெற்று வந்தான். மீண்டும் அவனை இருபிளவாக்க, அவ்விரு பிளவும், மயிலும், சேவலுமாக மாறின.

    மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் பிடித்துக் தேவர்களை முருகப்பெருமான் சிறை மீட்டார். முருகன் பின் செந்தூரை அடைந்து சிவபூஜை செய்தார். இவ்வாறாக சூரபத்மனை அழித்ததனால் மும்மூர்த்திகளின் குறைகளைப் போக்கினார்.

    தேவர்களை விடுவித்தார். தேவேந்திரன் தனக்கும், தேவர்களுக்கும் உதவிய முருகனுக்குத் தம் நன்றியை தெரிவிக்கும் வகையில் தன் மகள் தேவசேனாவை திருமணம் செய்து கொடுக்க விரும்பினார். இதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    அதன்படி முருகப்பெருமானுக்கும், தேவசேனாவுக்கும் திருமணம் நடந்தது. மும்மூர்த்திகளும், முக்கோடி தேவர்களும், முனிவர்களும் திரண்டு வாழ்த்தினார்கள். அதன் பிறகு முருகப்பெருமான் மற்ற கடமைகளை செய்ய தொடங்கினார்.

    அப்போது முருகனிடம் சூரனை அழித்து எங்களை காப்பாற்றிய நீங்கள் இதே கடற்கரையில் அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதை முருகப்பெருமான் ஏற்றுக்கொண்டார். அவர் உத்தரவை ஏற்று திருச்செந்தூர் கடலோரத்தில் அமைந்திருந்த சந்தன மலையில் குகை கோவில் உருவாக்கப்பட்டது.

    அங்கு முருகப் பெருமான் சிவ பூஜைகள் செய்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் அவர் திருச்செந்தூர் கடலோரத்தில் சூரபத்மன் அழிக்கப்பட்ட வரலாறை பக்தர்களுக்கு நடத்தி, அவதாரக் காரணத்தை முற்றுப்பெற செய்து காட்டுகிறார். இதை சூரசம்ஹாரம் என்கிறார்கள். 6 நாட்கள் நடந்த போர் கந்தசஷ்டியாக மாறியது. சிறப்பு மிக்க அந்த 6 நாள் போர் பற்றி அடுத்த வாரம் காணலாம்.

    Next Story
    ×