search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திருப்புகழ் பாடினால் உடனே திருமணம்
    X

    திருப்புகழ் பாடினால் உடனே திருமணம்

    • திருப்புகழ் பாடல்களை முதன் முறையாகப் படிக்கின்றவர்களுக்கு அதில் உள்ள வார்த்தைகள் சற்று சிரமமாகத் தோன்றும்.
    • இரவில் தூங்க செல்வதற்கு முன் இந்த பாடலை பாடுவது சிறப்பு.

    முருகன் என்றதும் நினைவுக்கு வருபவர் அருணகிரிநாதர். அந்த அளவுக்கு முருகன் மேல் பற்று கொண்டவர். அவரால் பாடப்படாத முருகன் தலங்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு, முருகன் குடிகொண்டுள்ள தலங்கள் எல்லாவற்றைப் பற்றியும் பாடி உள்ளார்.

    முருகன் மீது இவர் பாடிய பாடல்களே "திருப்புகழ்" எனப்படுகிறது. திருப்புகழ் 1,324 பாடல்களைக் கொண்டது. "திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்" என்று சிறப்பித்து சொல்வார்கள்.

    திருப்புகழ் பாடல்கள் எல்லாமே சந்தங்களோடும் தாளங்களோடும் அமைந்தவையாகும். மொத்தம் 859 சந்தங்கள் திருப்புகழில் உள்ளதாக இசை வல்லுநர்கள் ஆராய்ந்துள்ளனர்.

    அருணகிரி நாதர், முருகனிடத்தில் தன்னைப் பூரணமாக அர்ப்பணித்து, தெய்வீக நெறியில் நின்று, முருகனின் அருள் பெற்று அந்த ஆனந்த அனுபவத்தை இசை வடிவத்திலே பாடியவர்.

    திருப்புகழின் மூலம், முருகனின் பெருமையையும் சிறப்பையும், ஏன் அவனை நாட வேண்டும் என்பதற்கான காரணங்களையும், அவனை நாடுவதனால் மனிதர்களுக்கு கிடைக்கும் அருளையும், அமைதியையும் இந்தப் பாடல்களில் எடுத்துரைக்கின்றார்.

    அதில் விநாயகர் துதியாக 5 பாடல்கள் தனியாகவும், திருப்பரங்குன்றத்தைப் பற்றி 15 பாடல்களும், திருச்செந்தூர் பற்றி 84 பாடல்களும், திருஆவினன்குடி பற்றி 95 பாடல்களும் உள்ளன.

    திருப்புகழ் பாடல்களை முதன் முறையாகப் படிக்கின்றவர்களுக்கு அதில் உள்ள வார்த்தைகள் சற்று சிரமமாகத் தோன்றும். ஆனால் சரியானபடி வார்த்தைகளைப் பிரித்துப் படித்தால், பாடல்களில் உள்ள ஆழமானதும், நுட்பமானதும் ஆகிய பொருள் விளங்கும். அதன் பிறகு திரும்ப திரும்ப படிக்கத் தோன்றும்.

    திருச்செந்தூரில் முருகனை நேரில் கண்ட அனுபவத்தை அருணகிரிநாதர் தனது பாடல்களில் எழுதி, அந்த பேரின்பத்தை அனைத்து முருகன் அடியார்களும் பெற வழிகாட்டி உள்ளார். ஒவ்வொரு திருப்புகழும் ஒவ்வொரு பலனை தரக் கூடியதாகும். நம்முடைய தேவைக்கு ஏற்ற திருப்புகழை தொடர்ந்து படித்து வந்தால் முருகப் பெருமானின் அருளால் நம்முடைய குறை தீரும்.

    அருணகிரிநாதர் அருளிய திருச்செந்தூர் தலத்திற்குரிய திருப்புகழின் 62-வது பாடலான இந்த பாடலை தினமும் மனதார பாடி வந்தால் நிச்சயம் முருகன் கனவில் வந்து காட்சி தருவார். இரவில் தூங்க செல்வதற்கு முன் இந்த பாடலை பாடுவது சிறப்பு.

    தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்

    தண்கழல்சி லம்புடன் கொஞ்சவேநின்

    தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்

    சந்தொடம ணைந்துநின் றன்புபோலக்

    கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்

    கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும்

    கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்

    கண்குளிர என்றன்முன் சந்தியாவோ

    புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்

    பொங்கியெழ வெங்களங் கொண்டபோது

    பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்

    புண்டரிகர் தந்தையுஞ் சிந்தைகூரக்

    கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்

    கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே

    கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்

    கும்பமுநி கும்பிடுந் தம்பிரானே.

    விளக்கம்:

    தண்டையும், வெண்டையும், கிண்கிணி, சிலம்பு போன்ற பலவிதமான காதணிகள் ஒலிக்க உன்னுடைய தந்தையாகிய சிவபெருமானை வலம் வந்து அவரை அணைத்து அன்பு செய்தது போல் ஆறுமுகங்கள், பன்னிரு கண்கள், கொடியும், வேலும் கொண்டு என் கண்முன் வந்து தோன்றுவாயா? அனைத்து உலகங்களும் மகிழ்ச்சியில் நிறைய பெருமாளும், சிவனும் மகிழ் போர்களத்தில் நடன பாதங்களை திருச்செந்தூரில் காட்டியவனே, கந்தனே, வள்ளியின் மனம் கவர்ந்தவனே, அகத்தியர் வணங்கும் தலைவரே என் முன்னே வர வேண்டும்.

    இதை தினமும் பாடி, சொல்லி வந்தால் நிச்சயமாக முருகன் உங்கள் கனவிலும் வர வாய்ப்புள்ளது.

    திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது. இதில் "விறல் மாரனைந்து" எனும் திருப்புகழை தினமும் 6 தடவை பாராயணம் செய்து வந்தால் உடனே தடைகள் விலகி திருமணம் கைகூடி நடைபெறும். திருமுருக கிருபானந்த வாரியார் அறிவுறுத்தலின் பேரில் ஏராளமானவர்கள் தினமும் திருச்செந்தூர் திருப்புகழைப் பாராயணம் செய்து நல்ல வரன் பெற்று கல்யாணம் செய்துள்ளனர்.

    சிறப்புமிகு அந்த திருப்புகழ் இதோ...

    விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த

    மிகவானி லிருந்து - வெயில் காய

    மிதவாடை வந்து தழல்போல வொன்ற

    வினைமாதர் தந்தம் வசை கூற

    குன்றி லுறைபேதை கொண்ட

    கொடி தான துன்ப -மயில்தீர

    குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து

    குறை தீர வந்து குறுகாயோ

    மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து

    வழிபாடு தந்த மதியாளா

    மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச

    வடிவேலெ றிந்த அதிதீரா

    அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு

    மடியாரி டைஞ்சல் களைவோனே

    அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து

    அலைவாயு கந்த பெருமாளே!

    குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கீழ்க்கண்ட திருச்செந்தூர் திருப்புகழை தினமும் பாராயணம் செய்ய வேண்டும். இது சக்தி வாய்ந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனத்தெளிவாக தன்னம்பிக்கையுடன் இதை பாராயணம் செய்தால் நிச்சயம் முருகன் அருளால் உங்களுக்கு மகப்பேறு உண்டாகும். இதோ அந்த திருப்புகழ்.....

    வாரியார் கருங்கன் மடமாதர்

    மகவாசை தொந்த மதுவாகி

    இருபோது நைந்து மெலியாதே

    இருதாளி னன்பு தருவாயே!

    பரிபால னஞ்செய் தருள்வோனே

    பரமேசு ரன்ற னருள்பாலா

    அரிகேச வன்றன் மருகோனே

    அலைவா யமர்ந்த பெருமாளே!

    ஒரு மனிதனுக்கு நல்ல மனைவி அமைவதும், ஒரு பெண்ணுக்கு உயர்ந்த கணவன் அமைவதும் இறைவன் திருவருளேயாகும் எனவே முருகப் பெருமானைத் திருப்புகழால் போற்றி வழிபட்டு இனிய இல்லற வாழ்வு பெற்றிட வழி காட்டுகிறார் அருணகிரியார்.

    திருச்செந்தூர் திருப்புகழ் ஒன்றில் வள்ளியம்மைக்கு திருமண மாலை தந்து குறையைத் தீர்த்தது போல் தனக்கும் (இந்த ஜீவாத்மாவுக்கும்) மாலை தந்து குறையை நீக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

    இதோ அந்த திருப்புகழ் பாடல்

    நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே

    நீவந்த வாழ்வைகண் டதனாலே

    மால்கொண்ட பேதைக்குள் மணம்நாறும்

    மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே

    வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே

    வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா

    நாலந்த வேதத்தின் பொருளோனே

    நான்என்று மார்தட்டும் பெருமாளே.

    இத்திருப்புகழ் அடியார்களின் இடுக்கண் நீக்கும் மந்திரத்திருப்புகழ்' என்று குகத்திரு வாரியார் சுவாமிகள் குறிப்பிடுவார். செந்தூர் முருகனைத் தரிசிப்பதுடன், மேற்காணும் திருப்புகழ் பாடலை அனுதினமும் பாடி அவரை வழிபட்டால், மணமாலை விரைவில் தோள்சேரும்.

    தண்டேனுண்டே வண்டார் வஞ்சேர்

    தண்டார் மஞ்சுக் குழல்மானார்

    தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே

    சம்பா வஞ்சொற் றடிநாயேன்

    மண்டோ யந்தீ மென்கால் விண்டோய்

    வண்கா யம்பொய்க்குடில்வேறாய்

    வன்கா னம்போ யண்டா முன்பே

    வந்தே நின்பொற் கழல்தாராய்

    கொண்டா டும்போர் கொண்டா டுஞ்சூர்

    கொன்றாய் வென்றிக் குமரேசா

    கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்

    குன்றா மன்றற் கிரியோனே

    கண்டா கும்பா லுண்டா யண்டார்

    கண்டா கந்தப் புயவேளே

    கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா

    கந்தா செந்திற் பெருமாளே!

    இந்த பாடலின் பொருள் வருமாறு:-

    திருச்செந்தூர் செந்தில் குமரா சூரபத்மனை போரிலே வென்று அவனை வீழ்த்தினாய். அவன் தன்னை எவர் ஒருவர் புகழ்வார்களோ அவர்களுக்கு ஆதரவாக இருப்பான். தேனீக்கள் எவ்வாறு தேனை உறிஞ்சி மலர்களில் சேர்க்கின்றனவோ அதுபோல நம்முடைய ஆத்மாவை சுத்தம் செய்து நாம் புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும். மனிதர்களாகிய நாம் இந்த மனித உடம்பை நமக்குத் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்.

    முருகா! உன்னுடைய நாமத்தை உச்சரிப்ப தால் நான் முழுமையான பாக்கியத்தை அடைகிறேன். உன் நாமத்தைச் சொல்வதற்கு என்றே எனக்கு நாவைப்படைத்துள்ளாய் . குமரா! இந்நாவு எந்தப் பாவத்தையும் செய்யாதபடி என்னைக் காக்க வேண்டும்.

    இவ்வாறு அருணகிரி நாதர் திருச்செந்தூர் தலத்தில் பாடிய திருப்புகழ் பாடல்களில் பல அருமையான தகவல்களை வெளியிட்டுள்ளார். திருச்செந்தூர் முருகன் அருளால் அவர் ஸ்ரீவில்லிபுத்தூராரை வெற்றிக்கொண்ட ஒரு நிகழ்வும் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூரில் நடைபெற்றது.

    அருணகிரிநாதரை பாட வைத்து திருச்செந்தூர் முருகன் கொடுத்த அந்த வெற்றி நிகழ்ச்சி பற்றி அடுத்த வாரம் காணலாம்.

    Next Story
    ×