என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வியப்பில் ஆழ்த்தும் ஜெய்பூர்
    X

    வியப்பில் ஆழ்த்தும் ஜெய்பூர்

    • ஜெய்பூரில் அமேர் பகுதியில் ஆரவல்லி மலைத் தொடரில் ஆம்பர் கோட்டைக்கு மேலே அமைந்துள்ள கோட்டை இது.
    • ராஜஸ்தான் என்றாலே கைவினைப் பொருள்களின் சிறப்பே ஞாபகத்திற்கு வரும்.

    இந்திய வீரத்தையும் பாரம்பரியத்தையும் அழகையும், கலைகளின் மேன்மையையும் பக்தியின் உச்சத்தையும் கண்டு உற்சாகம் பெற ஒரு இடத்தை இந்தியாவில் சொல்லுங்கள் என்றால் உடனே வரும் விடை ஜெய்பூர்.

    கம்பீரமான இந்த ஊரில் உள்ள கவினுறு காட்சிகள் ஏராளம். முக்கியமானவற்றைப் பார்ப்போமா?

    ஹவா மஹால்:

    ஜெய்பூரில் பார்க்க வேண்டிய முக்கிய இடம் ஹவா மஹால்.

    தேனடையைப் போலக் காட்சி அளிக்கும் ஐந்து அடுக்கு அரண்மனையான இதை மகாராஜ சவாய் பிரதாப் சிங் 1799-ம் ஆண்டில் கட்டினார். சிவப்பு மற்றும் இளநீல கற்களைக் கொண்டு சிடி பாலஸ் அருகில் இது கட்டப்பட்டது.

    பிரமிட் போல கட்டப்பட்ட இதில் ஜாரோகாஸ் என்று அழைக்கப்படும் 953 விசேஷமான ஜன்னல்கள் பார்ப்போரைக் கவரும் வடிவமைப்பில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஜன்னல்கள் வழியே குளிர்ந்த காற்று பாய்ந்து மகாலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

    அரண்மனையில் வாழும் மகளிர் சாதாரணமாக நகர வாழ்க்கையைப் பார்க்க முடியாமல் தனியே அரண்மனைக்குள்ளேயே இருப்பது வழக்கம். அவர்கள் இதில் இருந்து மீண்டு, நகரத்தைப் பார்க்க வழிவகை செய்யும் முக்கிய நோக்கத்துடன் இது அமைக்கப்பட்டது.

    அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்ட 50 அடி உயரம் கொண்ட இந்த மகால் 87 டிகிரி சாய்ந்திருக்கும். இங்கு மாடிப்படிகள் கிடையாது. அரண்மனை நாரீமணிகள் நளினமாக நடந்து செல்ல வசதியாக இதில் சரிவுப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தொல்லியல் கண்காட்சி ஒன்றும் உள்ளது. ராயல் டோர் என்னும் பிரதான வாயில் வழியே உள்ளே செல்ல வேண்டும்.. இதன் உச்சியில் இருந்து பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் உண்டு

    ஆம்பர் கோட்டை:

    அமர் நகரில் ஒன்றரை சதுர மைல் பரப்பில் அமைந்துள்ள கோட்டை இது. பவானி என்னும் அம்மனின் பெயரால் இக்கோட்டைக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. ராஜபுதன கட்டிடக் கலை அம்சங்களைக் காட்டும் இந்தக் கோட்டை மணல் கற்களாலும் சலவைக் கல்லாலும் கட்டப்பட்டதாகும்.

    கோட்டையில் பல அரண்மனைகளும் ஒரு ஏரியும் உள்ளன.

    ஜெய் மந்திர் எனப்படும் கண்ணாடி மாளிகை உட்பட பல மாளிகைகள் இங்கு உண்டு. இங்குள்ள ஒலி-ஒளி காட்சியை மறக்காமல் அனைவரும் பார்ப்பது வழக்கம்.

    ஆம்பர் கோட்டையின் சுவர்களுக்கு மற்றும் பேசும் சக்தி இருந்தால் அவை ராஜபுதனத்து மன்னர்களின் காலத்தை வென்ற வீர சரித்திரங்களைக் கூறும் என்பது அறிஞர் வாக்கு.

    ஜெய்கர் கோட்டை:

    ஜெய்பூரில் அமேர் பகுதியில் ஆரவல்லி மலைத் தொடரில் ஆம்பர் கோட்டைக்கு மேலே அமைந்துள்ள கோட்டை இது. இரண்டாம் சவாய் ஜெய்சிங் என்ற மன்னர் தனது வெற்றியைக் கொண்டாட 1310 அடி உயரமுள்ள மலையில் இந்தக் கோட்டையைக் கட்டினார். கோட்டையின் மேல் உள்ள ஜெய்வானா பீரங்கி உலகின் மிகப் பெரிய பீரங்கிகளில் ஒன்று. கோட்டையின் சுவர்கள் எதிரிகள் இடிக்க முடியாதபடி வலிமை வாய்ந்தவை. உள்ளே லலிதா கோவில் ஆரம் கோவில், ஆயுத சாலை மற்றும் அருங்காட்சியகம் உள்ளது. ஜெய்கர் கோட்டையையும் ஆம்பர் கோட்டையையும் பூமிக்கடியில் உள்ள ஒரு சுரங்கப் பாதை இணைக்கிறது.

    ஒரு போதும் சரிந்து வீழாத கோட்டை இது; இதன் வீர உணர்வு ஒருபோதும் குறைந்ததே இல்லை!

    சிடி பாலஸ் (நகர அரண்மனை):

    மகாராஜ சவாய் ஜெய்சிங் உருவாக்கிய இந்த அரண்மனை வாஸ்து சாஸ்திரப்படி உருவாக்கப்பட்டது. இங்கு முபாரக் மகால், சந்திர மகால், மகாராணியின் அரண்மனை ஆகியவற்றைப் பார்ப்பதோடு மகாராஜா சவாய் மான்சிங் அருங்காட்சியகத்தையும் பார்க்கலாம்.

    ஜெய்பூரின் இதயம் துடிக்கும் இடம் இது தான் என்கின்றனர் பயணிகள்!

    ஜந்தர் மந்தர்:

    திறந்த வெளிக் கோளரங்கமான இதில் மிகப் பெரிய சூரிய கடிகாரம் உள்ளது. வானவியலில் ஆர்வமுள்ளோர் கோள்களைப் பற்றிய ஆய்விற்காக செய்யப்பட்ட பல எந்திரங்களை இங்கு பார்க்கலாம். இது 1734-ல் கட்டப்பட்டது. எதிர்காலம் இறந்தகாலத்தைச் சந்திக்கும் அற்புத இடம் இதுவே என்கின்றனர் அறிஞர்கள்!

    ச.நாகராஜன்

    பாபு பஜார்:

    ராஜஸ்தான் என்றாலே கைவினைப் பொருள்களின் சிறப்பே ஞாபகத்திற்கு வரும். பிங்க் சிடி என்று ஜெய்பூருக்கு ஒரு பெயர் உண்டு. இளஞ்சிவப்பு வண்ணத்தில் அனைத்துக் கட்டிடங்களும் இங்கு கட்டப்பட்டிருப்பதால் இதற்கு பிங்க் சிடி என்ற பெயர் வந்தது.

    இங்கு கைவினைப் பொருள்கள் அனைத்தையும் குறைந்த விலையில் வாங்கலாம். ஒரு பை நிறைய பாபு பஜாரில் வாங்கும் பொருள்கள் ராஜஸ்தானைப் பற்றிய முழு விவரத்தையும் சொல்லும்!

    நகார்கர் கோட்டை:

    நகார்கர் கோட்டை ஆரவல்லி மலையில் அமைந்துள்ள இன்னொரு கோட்டையாகும். நகார்கர் என்றால் புலி என்று பொருள். இது முதலில் சுதர்ஷன்கார்க் என்று அழைக்கப்பட்டது. ஜெய்பூரின் வலிமை வாய்ந்த அரணாக இது திகழ்கிறது. அரசர்கள் ஒரு காலத்தில் நடந்த இந்த இடத்தில் பயணிகள் இன்று நடந்து உத்வேகம் பெறுகின்றனர்!

    காலே அனுமான்ஜி ஆலயம்:

    இது ஜெய்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

    அனுமார் சூரிய பகவானிடம் அனைத்துக் கலைகளையும் கற்ற பின் அவருக்கு குரு தட்சிணை தர விழைந்தார்.

    சூரிய பகவான் அனுமானிடம் தனது புத்திரரான சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறி அதுவே அவர் தனக்குத் தரும் குரு தட்சிணையாகும் என்றார்.

    தானாக சனீஸ்வரன் தன்னிடம் வருவதில்லை என்றும் தான் அழைத்தாலும் அவர் வருவதில்லை என்றும் சூரிய பகவான் குறிப்பிட்டு ஆகவே எப்படியாவது சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு அனுமானிடம் கூறினார்.

    அனுமார் சனீஸ்வரனைத் தேடிப் போனார். ஆனால் அவரைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்து அவரை சூரிய பகவானிடம் அழைத்துப் போகத் தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

    அனுமான் தனது தந்தையான சூரியனைக் குருவாகக் கொண்டு அவரிடம் வைத்திருக்கும் அசைக்க முடியாத பக்தியைக் கண்டு சனீஸ்வரன் வியந்தார்.

    சூரியனைப் பார்க்க வருவதாக ஒப்புக் கொண்ட சனீஸ்வரன் மனம் மிக மகிழ்ந்தார். தன்னை வழிபடுவோர் அனுமானை வழிப்பட்டாலொழிய தனது அருளைப் பெற முடியாது என்று ஒரு நிபந்தனையைக் கூறிய அவர் தனது கறுப்பு நிறத்தையும் அனுமானுக்கு வழங்கினார். அந்த கறுப்பு நிறத்தைப் பெற்றுக் கொண்ட அனுமான் கறுப்பு நிறமானார்.

    காலே அனுமான் என்றால் கறுப்பு அனுமான் என்று பொருள். ஆகவே இங்கு கோவில் கொண்டுள்ள அனுமானை காலே அனுமான் என்று அனைவரும் துதித்து வழிபடுகின்றனர்.

    எப்போதும் பொதுவாக அனுமான் எல்லாக் கோவில்களிலும் ஆரஞ்சு வண்ணத்திலோ அல்லது சிவப்பு வண்ணத்திலோ தான் காட்சி அளிப்பார். இங்கு மட்டும் கறுப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறார்.

    கண் திருஷ்டியினால் பாதிக்கப்பட்டவர்களும், கண் திருஷ்டி ஏற்படக் கூடாது என்று நினைக்கும் பக்தர்களும் இந்தக் கோவிலுக்கு வருகை புரிகின்றனர். அனைத்து வியாதிகளையும் போக்குபவராக இந்த அனுமான் இருப்பதாக இவரை இங்கு வழிபடுபவர்கள் கூறுகின்றனர்.

    சனி தோஷம் நீங்கவும், திருமணத்தடை நீங்கவும் தொழிலில் மேன்மை பெறவும், மனோவியாதிகள் நீங்கி அமைதியான வாழ்க்கையைப் பெறவும் அனுமானை வழிபட வேண்டும் என்பது முன்னோர்களின் வாக்கு.

    அனுமத் ஜெயந்தி தினத்தில் இங்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரளாகக் கூடுகின்றனர். விட்டது வியாதி; போனது தோஷம் என்பது இங்கு வந்து தொழும் பக்தர்களின் நம்பிக்கை வாக்கு!

    பிர்லா மந்திர்:

    பிர்லா மந்திர் என்று அழைக்கப்படும் லட்சுமிநாராயணன் கோவில் 1988-ல் பிர்லா அறக்கட்டளையால் கட்டப்பட்ட கோவிலாகும். வெண்மையான சலவைக் கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் லட்சுமி தேவியும் நாராயணரும் குடி கொண்டு அருள் பாலிக்கின்றனர். சாந்தம், அழகு, இறை வழிபாட்டின் பலன் – இவை அனைத்தையும் ஒருங்கே தருவது பிர்லா மந்திர்!

    ஜல் மகால்:

    ஜல் மகால் என்றால் நீர் அரண்மனை என்று பொருள். இது ஜெய்பூரில் மான் சாகர் ஏரியின் நடுவில் அமைந்துள்ள அழகிய ஒரு அரண்மனையாகும். இதை சவாய் பிரதாப் சிங்க் 1799ல் கட்டினார். ஐந்து அடுக்குகள் கொண்ட இந்த அரண்மனை முழுவதும் சிவப்புக் கற்களால் கட்டப்பட்டது, ஏரியில் நீர் முழுமையாக நிரம்பும் சமயத்தில் இதில் உள்ள நான்கு அடுக்குகள் நீரிலே மூழ்க ஐந்தாவது அடுக்கு மட்டும் காட்சி அளிக்கும்.

    ஜல்மஹால், வானம் நீரைத் தொடும் இடம்; சரித்திரம் கவிதை பாடும் இடம்!

    சிசோடியா ராணி அரண்மனையும் தோட்டமும்:

    கூட்டத்தைத் தவிர்த்து அமைதி நாடும் வரும் இடம் இது. ஜெய்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இது.

    மன்னர் சவாய் ஜெய் தனது உதய்பூர் இளவரசியான தனது இரண்டாவது மனைவிக்குப் பரிசாக 1728-ம் ஆண்டு கட்டியது இது. இந்த ராணி சூரியவம்சத்தின் வழி வந்த சிசோடியா பரம்பரையைச் சேர்ந்தவர். பசுமை வாய்ந்த மரங்களும் மலர்ச் செடிகளும் ஒருபுறம் இருக்க பல அடுக்குகள் கொண்ட அரண்மனையை இன்னொரு புறம் காணலாம்.

    டக் டக் ரைட் (டக் டக் சவாரி)

    ஜெய்பூரில் எல்லா இடங்களுக்கும் செல்ல வசதியாக டக் டக் என்று அழைக்கப்பட்டும் ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளன. இந்த டக் டக் சவாரி மூலம் இதன் டிரைவரே திட்டமிட்ட பாதை வழியே ஜெய்பூர் முழுவதையும் சுற்றிக் காட்டி விடுவார். ஒரு நாள் பயணம் இரு நாள் பயணம் என்று நமது வசதிக்குத் தக்கபடி இந்த சவாரியை நாம் அமைத்துக் கொள்ளலாம். இதில் பயணம் செய்வோர் அனைவரும் இதைப் பொதுவாக ரசிக்கவே செய்கின்றனர். ஜெய்பூர் என்பது இவ்வளவு தான் என்று யாரும் முடிவு கட்டி விடக் கூடாது. வீரம் வாய்ந்த ராஜபுதன அரசர்களின் பரம்பரைக்கே உரித்தான ஏராளமான அரண்மனைகள், அழகிய மாளிகைகள், பூத்துக் குலுங்கும் தோட்டங்கள், இறைவழிபாட்டுத் தலங்கள் என்று இன்னும் ஏராளமான இடங்கள் உள்ளன. ஆங்காங்கே உள்ள அருங்காட்சியகங்கள் பழமையான சிறப்பு வாய்ந்த வரலாறை நமக்கு விளக்கமாகத் தெரிவிக்கும். ஜெய் ஜெய்பூர்!

    Next Story
    ×