என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மறக்க முடியாத மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- தமிழ் திரை வானில் கருத்துச் சூரியனாக வலம் வந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
- டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த கல்யாண பரிசு படத்துக்கு கல்யாணசுந்தரம் எழுதிய எல்லா பாடல்களும் வெற்றி பெற்றன.
இன்று (ஏப்ரல் 13-ந் தேதி) கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தநாள்.
தமிழ் திரை வானில் கருத்துச் சூரியனாக வலம் வந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும் பாடல் மூலம் நேரடி வர்ணனையாக தந்தவர்.
இனிய சொற்கள், ஆழமான பொருள், கற்பனை வளம், பொதுவுடமை சித்தாந்த கருத்துகள், வாழ்வியல் தத்துவம் என இவர் எழுதிய பாடல் ஒவ்வொன்றும் காற்றில் எழுதிய கல்வெட்டுகள் ஆகும்.
"ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி; ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி; மனிதனாக வாழ்ந்திட வேண்டும், மனதில் வையடா தம்பி! மனதில் வையடா! வளர்ந்து வரும் உலகத்திற்கே, நீ வலது கையடா!" என்று இளைய தலைமுறையினருக்கு பட்டுக்கோட்டையார் அறிவுரை கூறுகிறார்.
"இருப்பது எல்லாம் பொதுவாய் போனால் பதுக்குற வேலையும் இருக்காது; ஒதுக்குற வேலையும் கிடையாது" என்று பொதுவுடமை சமுதாயம் படைக்க விரும்பிய கவிஞர் கல்யாணசுந்தரம், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா செங்கப்படுத்தான் காடு கிராமத்தில் 13-4-1930-ல் பிறந்தார். தந்தை பெயர் அருணாசல கவிராயர். தாயார் விசாலாட்சி.
உள்ளூர் திண்ணை பள்ளிக்கூடத்தில் ஒரு வருடம் அரிச்சுவடி படிப்பு பெற்றதோடு கல்யாணசுந்தரத்தின் பள்ளி படிப்பு முடிந்தது. தொடக்கத்தில் விவசாயியாக வாழ்க்கையை தொடங்கிய அவர் பல்வேறு தொழில்களை செய்தார். இறுதியில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உந்தி தள்ள சக்தி நாடக சபாவில் இணைந்து நடித்தார்.
சிறிது காலத்துக்கு பின் புதுச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தங்கி இருந்து கவிதை எழுத கற்றுக்கொண்டார்.
பின்னர் சென்னை ராயப்பேட்டையில் தங்கி இருந்து பட வாய்ப்புகள் தேடினார். 1954-ல் 'படித்த பெண்' படத்துக்கு 2 பாடல்கள் எழுதினார் .
ஆனால் அப்படம் வெளிவர தாமதம் ஆனது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த மகேஸ்வரி இவருடைய பாடலுடன் வெளிவந்த முதல் படமாகும். பாசவலை என்ற திரைப்படத்துக்கு இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.
அப்போது ஒரு காட்சி அமைப்புக்கு பிரபல பாடலாசிரியர்கள் எழுதி கொடுத்த பாடல்கள் பொருத்தமாக அமையவில்லை. மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகி ஒரு இளைஞரை எம்.எஸ்.விஸ்வநாதனிடம் அறிமுகப்படுத்தி இவர் நன்றாக பாட்டு எழுதுவார் என்று கூறினார்.
அவரது தோற்றத்தை பார்த்த எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு 'இவர் 'டியூனு'க்கு ஏற்றப்படி பாட்டு எழுதுவாரா?' என்று சந்தேகம் ஏற்பட்டது. உடனே அந்த இளைஞர் தான் எழுதிய பாடலை எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கொடுத்தார். அதை வாங்கி படித்து பார்த்த எம்.எஸ்.விஸ்வநாதன் முகம் மலர்ந்தது. பாடல் வரிகளில் கிறங்கி போன அவர் 'இதைத்தான் எதிர்பார்த்தேன்' என்று கூறியபடியே அந்த இளைஞனை கட்டிப்பிடித்து அவரது கையில் முத்தமிட்டார் .
அந்த இளைஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். அவர் எழுதி கொடுத்த அந்த பாடல்;
"குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம்; குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம்! தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்; சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்."
நான்கே வரிகளில் வாழ்வின் நிலையாமை தத்துவத்தை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார் பட்டுக்கோட்டையார். படம் வெளிவந்ததும் திரையுலகம் வியந்தது. பிரபல கவிஞர்கள் மிரண்டனர். தொடர்ந்து கிராமிய மணம் கொண்ட பாடல்களை எழுதி பாட்டாளி மக்களின் பாட்டு வாத்தியாரானார்.
எம்.ஜி.ஆரின் கனவு படமான நாடோடி மன்னனில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை பயன்படுத்த விரும்பிய எம்.ஜி.ஆர். அவரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து ஒரு பாடல் எழுதி தரும்படி கேட்டுக்கொண்டார். அவர் சற்றும் தாமதிக்காமல் தனது கையாலே மேஜையில் தாளமிட்டு ஒரு பாடலை பாடிக்காட்டினார்.
'சும்மா கெடந்த நிலத்தைக்கொத்தி சோம்பலில்லாமா ஏர்நடத்தி' என தொடங்கும் அந்த பாடலில், 'காடு விளைஞ்சா தான்மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்.; கையும் காலும் தானே மிச்சம்.; இப்போ, காடு விளையட்டும் பொண்ணே, நமக்கு காலம் இருக்குது பின்னே!"
விவசாயிகளின் உழைப்பு சுரண்டப்படுவதையும், அவர்கள் சோகத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் அமைந்த பாடலைக் கேட்டு பிரமித்து போன எம்.ஜி.ஆர். அந்த பாடலைப்பதிவு செய்ததோடு மேலும் ஒரு பாடலையும் எழுதி வாங்கினார். அந்த பாடல்தான், "தூங்காதே தம்பி தூங்காதே. சோம்பேறி என்ற பெயர் வாங்காதே" என்ற பிரபலமான பாடலாகும்.
இந்த பாடல் பட்டித்தொட்டியெல்லாம் வலம்வந்து மக்களை முணுமுணுக்க வைத்தது.
"திருடாதே... பாப்பா திருடாதே...
வறுமைநிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே" என்று குழந்தைக்கு போதித்து அவர்களுக்கு தைரியத்தை வழங்கியதோடு,
"வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க.! உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க!
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பி விடாதே.!
நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!" என்று அவர்கள் மனதில் பகுத்தறிவு விதையையும் ஊன்றினார்.
'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா' போன்ற கவிஞரின் கருத்தாழமிக்க சமூக சீர்திருத்த பாடல்கள் எம்.ஜி.ஆரின் புகழுக்கு ஒரு காரணமாக இருந்தது.
முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ஒருமுறை வானொலி நேர்காணலின்போது "என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்கு தெரியாது நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்"என்று மனம்திறந்து பாராட்டினார்.
எம்.ஜி.ஆரின் 7 படங்களுக்கு முத்தாய்ப்பான பாடல்களை எழுதிய கவிஞர் கல்யாணசுந்தரம், சிவாஜி கணேசன் நடித்த மக்களைப் பெற்ற மகராசி, அம்பிகாபதி, பதிபக்தி, பாகப்பிரிவினை உள்ளிட்ட 11 படங்களுக்கு எழுதிய பாடல்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன.
டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த கல்யாண பரிசு படத்துக்கு கல்யாணசுந்தரம் எழுதிய எல்லா பாடல்களும் வெற்றி பெற்றன.
கவிஞர் மொத்தம் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை 187. ஒவ்வொரு பாடல்களும் சாகாவரம் பெற்றவை.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற சில பாடல்கள்;
கொக்கர கொக்கரக்கோ சேவலே (பதிபக்தி), என் அருமை காதலிக்கு பெண்ணிலாவே (எல்லோரும் இந்நாட்டு மன்னர்), சின்னப்பயலே சின்னப்பயலே (அரசிலங்குமரி), உன்னை கண்டு நான் ஆட (கல்யாண பரிசு), வாடிக்கை மறந்ததும் ஏனோ (கல்யாண பரிசு), ஆடை கட்டி வந்த நிலவோ (அமுதவல்லி), உனக்காக எல்லாம் உனக்காக (புதையல்), இரை தேடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே (பதி பக்தி), முகத்தில் முகம் பார்க்கலாம் (தங்கப்பதுமை) .
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சினிமா கம்பெனிக்கு பாட்டு எழுதி கொடுத்தார். பட தயாரிப்பாளர் பணத்தை கொடுக்காமல் நாளை வாருங்கள் பார்க்கலாம் என்று கூறி இழுத்தடித்தார். ஒரு நாள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பணம் கேட்கச் சென்றபோது தயாரிப்பாளர் வழக்கமான பதிலையே கூறினார். ஆனால் கவிஞர் அங்கிருந்து செல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். உடனே தயாரிப்பாளர் ஆணவத்துடன் நிற்பதாக இருந்தால் நின்றுகொண்டே இருங்கள் என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.
உடனே கவிஞர் ஒரு பேப்பரில் சில வரிகள் எழுதி அதை மேஜை மீது வைத்து விட்டு சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் படக் கம்பெனியைச் சேர்ந்த நபர் கல்யாணசுந்தரம் வீட்டுக்கு அரக்கப்பறக்க ஓடிவந்து பணத்தை கொடுத்தார் .
பட்டுக்கோட்டை அந்த காகிதத்தில் எழுதி இருந்த வாசகம் இதுதான்:-
"தாயால் பிறந்தேன், தமிழால் அறிவு பெற்றேன்; நாயே! நேற்று உன்னை நடுத்தெருவில் சந்தித்தேன்; நீ யார் என்னை நில் என்று சொல்ல"
இதைப் படித்துப்பார்த்த பட அதிபர் ஆடி போய் விட்டார். பதறி போய் பணத்தை உடனே கொடுத்து அனுப்பிவைத்து விட்டார்.
"தானா எவனும் கெட மாட்டான் தடுக்கி விடாம விழமாட்டான் போனால் எவனும் வரமாட்டான் மேலே போனால் எவனும் வரமாட்டான் இதை புரிஞ்சுகிட்டவன் அழ மாட்டான்" என்று வாழ்வின் நிலையாமை குறித்து பாடிய கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் புகழின் உச்சியில் இருந்தபோது யாரும் எதிர்பாராத வகையில் 8-10-1959-ல் தமது 29-வது வயதில் மரணம் அடைந்தார்.
கல்யாண சுந்தரத்தின் மனைவி பெயர் கவுராம்பாள். ஒரே மகன் குமாரவேல்.
1959-ம் ஆண்டு கோவை தொழிலாளர் சங்கம் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்துக்கு மக்கள் கவிஞர் என்ற பட்டத்தை வழங்கியது. 1981-ம் ஆண்டு தமிழக அரசு கவிஞருக்கு பாவேந்தர் விருது வழங்கியது. விருதை முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். வழங்க அதை கவிஞரின் மனைவி பெற்றுக்கொண்டார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் அனைத்து பாடல்களும் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
2000-ம் ஆண்டு முதல்-அமைச்சர் கருணாநிதி பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார். அங்கு அவரது மார்பளவு சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
கல்யாண சுந்தரம் மரணம் அடைந்துவிட்டாலும், அவர் கட்டி தந்த பாட்டுக்கோட்டை காலத்தை வென்று வாழும் என்பதில் ஐயமில்லை.






