search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மோடி-ராகுல் நேருக்கு நேர்
    X

    மோடி-ராகுல் நேருக்கு நேர்

    • நாட்டின் பிரச்சினைகள் பற்றி பொது விவாதம் நடத்த வேண்டும்.
    • வேட்பாளர்களின் கருத்துகளை தெரிந்து கொள்ள இது ஒரு அருமையான ஏற்பாடு.

    உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் மதன் லாகூர், ஏபி ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் இந்து ராம் ஆகியோர் சமீபத்தில் ஒரு அழைப்பு விடுத்தனர். பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாட்டின் பிரச்சினைகள் பற்றி பொது விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

    மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், இத்தகைய விவாதங்கள் எப்போதும் நடந்து வருகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பு ஜனாதிபதி வேட்பாளர்கள் பல்வேறு நேருக்கு நேர் விவாதங்களில் கலந்து கொள்வார்கள்.

    நாட்டின் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவற்றைப் பற்றிய வேட்பாளர்களின் கருத்துகளை வாக்காளர்கள் நேரடியாகத் தெரிந்து கொள்ள இது ஒரு அருமையான ஏற்பாடு. விவாதங்களின் சிறப்பு மற்றும் வேட்பாளர்களின் அணுகுமுறைத் தெளிவு ஆகியவற்றை வைத்து வாக்காளர்கள் முடிவுக்கு வருவார்கள்.

    சில நேரங்களில் நாடு முழுமைக்குமான ஒரே ஒரு பிரச்சினை குறித்த விவாதமும் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. "கிரேட் டிபேட்" என்று இன்றும் அழைக்கப்படும் விவாதம் கூட்டாட்சித் தத்துவத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எதிரானவர்கள் சார்பாக நடந்தது.

    அதன் பின்னர் தான் குடிமக்களின் உரிமைகள் குறித்த ஷரத்து அமெரிக்க அரசியலமைப்பில் இடம்பெற்றது. கூட்டாட்சித் தத்துவம் வலிமை பெற்றது.

    அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5-ந் தேதி அன்று நடைபெறவுள்ளது. எனவே டிபேட்டுகள் களை கட்டத் துவங்கி விடும். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இன்றைய ஜனாதிபதி ஜோ பைடன் ஆகிய இருவருக்கும் இடையிலான விவாதம் 2020-ல் நடந்தது.

    முன்னதாக "எப்போது வேண்டுமானாலும்- எங்கு வேண்டுமானாலும்- எந்த நேரம் வேண்டுமானாலும்" விவாதத்திற்கு தயார் என்று மார்தட்டினார் டிரம்ப். ஆனால் பல டிபேட்களுக்கு அவர் டிமிக்கி கொடுத்தார். இறுதியாக பைடன் விவாதம் வாக்காளர்கள் மனங்களைக் கவர்ந்தது.

    ஜனாதிபதி வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதிக்கும் நிகழ்ச்சி 1960 முதல் நடைபெற்று வருகிறது. அப்போதெல்லாம் தொலைக்காட்சி நிறுவனங்களால் அவை நடத்தப்பட்டன. ஆனால் 1987-க்குப் பிறகு டிவிக்கள் இத்தகைய விவாதம் நடத்த அனுமதி இல்லை.

    ஜனாதிபதி வேட்பாளர்களின் நேருக்கு நேர் விவாதம் நடத்துவதற்கு இன்று சிபிடி என்று அழைக்கப்படும் தனியான அரசு அமைப்பு அமெரிக்காவில் உள்ளது. டிபேட் மற்றும் அவற்றின் விதிமுறைகளை அது வகுக்கிறது. உதவி ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாதங்களும் நடப்பது உண்டு.

    வாட்டர் கேட் ஊழல் காரணமாக நிக்சன் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் பதவியேற்ற ஜெரால்ட் போர்ட் எதிரணி வேட்பாளரான கார்ட்டரை விவாதத்திற்கு அழைத்தார். அந்த டிபேட்டில் போர்ட் ஜொலிக்கவில்லை. பரபரப்பாக இருந்த அந்த விவாதத்தை நான் அமெரிக்க தொலைக்காட்சிகளில் நேரடியாகக் கண்டேன்.

    நேருக்கு நேர் லைவ் விவாதங்களில் உடல் மொழி மிகவும் முக்கியம். அடிக்கடி வாட்சைப் பார்த்தார் என்ற காரணத்திற்காக நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் அமெரிக்காவில் உண்டு.

    விவாதத்திற்குப் பயிற்சி கொடுப்பதற்காகவே நிபுணர்கள் இருக்கிறார்கள். வேட்பாளர்களின் அங்க அசைவுகள் மற்றும் பார்வை மூலம் நம்பகத்தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. நடுவர் உண்டு. எதிர்த்தரப்பு வைக்கிற குற்றச்சாட்டுகளுக்கு ஒரு வேட்பாளர் எப்படி பதில் சொல்கிறார் என்பதையும் கூர்ந்து கவனிப்பார்கள்.

    லைவ் டிபேட்டுகளுக்குப் பின் அவை பற்றிய விமர்சனங்கள் டிவிக்களில் எழுப்பப்படும். மதிப்பெண்கள் போடப்பட்டு வெற்றி-தோல்வி அலசப்படும். எனவே உலகெங்கிலும் இது பேசுபொருள்.

    ஆனால் அமெரிக்கக் கான்செப்ட் இந்தியாவுக்குப் பொருந்துமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் அங்கு இரண்டு கட்சி முறை. அதிபர் தேர்தல் என்பதால் நேரடி விவாதம் சாத்தியப்படுகிறது.

    மேலும் ஆங்கிலம் என்கிற ஒற்றை மொழி. இங்கு இந்தி பல்வேறு மாநிலங்களில் பேசப்படுகிறது. என்றாலும் பல்வேறு பழமையான மொழிகள் புழக்கத்தில் உள்ளன.

    இந்தியாவில் பிரதமர் வேட்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக யாரும் கிடையாது. நாம் எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கிறோம். எனவே மோடி- ராகுல் நேரடி நேருக்கு நேர் சாத்தியமில்லை.

    ஆனால் தலைவர்கள் தங்கள் கருத்துகளை முன் வைக்கிற "லீடர்ஸ் டிபேட்" சாத்தியம். நியூசிலாந்து போன்ற நாடுகளில் இத்தகைய விவாதம் நடக்கிறது.

    நேருக்கு நேர் விவாதத்தின் மூலமாக நாட்டின் பொதுப் பிரச்சினை பற்றிய தலைவர்களின் கருத்தை வாக்காளர்கள் அறிந்து கொள்ளலாம். யாருக்கு ஓட்டுப் போடுவது என்று முடிவு எடுக்க அது உதவி செய்யும்.

    தலைவர்களும் கொள்கை மற்றும் செயல்திட்டத்தைப் பற்றி மட்டும் பேசுவார்கள். வெறுப்புப் பேச்சு, மதம் மற்றும் ஜாதி ரீதியிலான பிளவுக்கு இடம் கிடைக்காது. தேர்ந்தெடுக்கப்பட்ட பின் வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படும்.

    இந்தியத் தேர்தல் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஆரம்பத்தில் தலைவர்கள் பேசியதற்கும் இப்போது பேசுவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

    தேர்தல் பரப்புரைகளின் போது பிரதமர் மோடி இந்து, முஸ்லீம் என்று பேசினார். வெறுப்புப் பேச்சு என்று கண்டனங்கள் எழுந்தன. தேர்தல் ஆணையத்திற்கும் புகார்கள் சென்றன. ஆனால் இப்போது அவரே தான் அப்படிப் பேசவில்லை என்று கூறுகிறார்.

    இறுதியில் யார் எண்ண பேசினார்கள் என்று வாக்காளர்களுக்கு குழப்பம் தான் மிஞ்சுகிறது. எனவே தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி மாதிரியான அமைப்புகள் நேருக்கு நேர் விவாதங்களுக்கு ஏற்பாடு செய்யலாம்.

    ஆனால் உச்சகட்டத் தலைவர்கள் கலந்து கொள்வார்களா என்பது சந்தேகம் முன்பெல்லாம் கட்சி பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிப் பொது மேடை அமைத்து தந்து வந்தது தூர்தர்ஷன். அவற்றில் பெரிய தலைவர்கள் பேசி வந்தார்கள். கல்லூரிப் பருவத்தில் ரேடியோவில் அண்ணா, கலைஞர் பேசியதைக் கேட்ட நினைவு இருக்கிறது.

    மொத்தத்தில் பொது மேடைகள் படிப்படியாகக் குறைந்துவிட்டன. இப்போதெல்லாம் பெரும்பாலும் செய்தித் தொடர்பாளர்கள் தான் கலந்து கொள்கிறார்கள்.

    பொது மேடைகளுக்குப் பதிலாக டிவிக்களில் தினமும் இரவு விவாத அரங்கம் நடத்தப்படுகிறது. அன்றாடப் பிரச்சினைகள் குறித்த கருத்துகள் அலசப்படுகின்றன.

    அவற்றில் செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அதே நேரத்தில் மூத்த பத்திரிகையாளர்களும் தங்கள் கருத்துகளை முன் வைக்கிறார்கள்.

    தலைவர்கள் கலந்து கொள்ளும் நேரடி விவாதம் அல்ல. என்றாலும் சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் டி.வி. விவாத மேடைகளில் தலைவர்களும் தோன்றுகிறார்கள்.

    இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் சில தலைவர்கள் விவாதப் பேச்சில் வல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் வேறு சிலருக்கு செயல் திறன் மட்டுமே!

    எடுத்துக்காட்டாக 2009 பொதுத் தேர்தலில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் என்று பரவலாக வர்ணிக்கப்பட்ட அத்வானியும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொண்டிருந்தால் சரிப்பட்டிருக்குமா?

    தலைவர்கள் அனைவருக்கும் "கம்யூனிகேஷன் ஸ்கில்" ஒரே மாதிரி இருக்க வழியில்லை. செய்தித் தொடர்பாளர்கள் தான் அந்தப் பணி செய்கிறார்கள். நிதி மந்திரி நிர்மலா சீதாராமனே முன்னாள் செய்தி தொடர்பாளர் தான். அப் பணியை அவர் நேர்த்தியாகக் கையாண்ட விதமே அவருக்கு மோடியின் குட் புக்சில் இடம் பெற்றுத் தந்தது.

    பொது விவாதத்தின் தேவை பற்றி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளும் மூத்த பத்திரிகையாளரும் பின்வருமாறு விளக்கி உள்ளார்கள்.

    1. நடப்பு தேர்தலில் வெறும் குற்றச்சாட்டுகளும், பரஸ்பர சவால்களும் மட்டுமே மலிந்துள்ளன.

    2. மக்களுக்குப் பயன் தரக்கூடிய பொருள் பொதிந்த தீர்வுகள் முன் வைக்கப்படவே இல்லை.

    3. ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா மற்றும் அதை அடுத்து அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் ஆகிய இரண்டும் பொது விவாதத்தில் கலந்து கொள்வது இந்திய ஜனநாயகத்தை முதிர்ச்சி அடையச் செய்யும் .

    4. எனவே பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    ராகுல்காந்தி தரப்பில் உடனடிச் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. இணங்கவில்லை. ராகுல் காந்தி வெறும் எம்பி என்றும் அதே நேரத்தில் மோடி பிரதமர் என்றும் அது கூறி விட்டது. இருவருக்கும் ஒரே அரசியல் அந்தஸ்து இல்லை என்றும் மறுத்து விட்டது.

    ஆனால் தேசிய அரசியல் பற்றிய பரப்புரைகளின்போது ராகுல்காந்தியை மட்டுமே "இளவரசர்" என்று மையப்படுத்தினார் பிரதமர். தனக்கு ராகுல் சரியான களப் போட்டியாளர் இல்லை என்று அவர் தொடர்ந்து கூறி வந்தார். அதாவது களத்தை "மோடி vs ராகுல்" என்று கட்டமைத்தது அவர் தான்.

    தராசு காலகட்டத்தில் மக்கள் மேடை என்ற பதாகையின் கீழ் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களை வைத்து இத்தகைய "நேருக்கு நேர்" நிகழ்ச்சிகளை துவக்கத்தில் நடத்தினோம். ஆனால் நாளாவட்டத்தில் வேட்பாளர்கள் தயக்கம் காட்டினார்கள். எனவே அது கை விடப்பட்டது. மறைந்த எம்.எஸ்.உதயமூர்த்தி இது போன்ற விவாதங்களை நடத்தியதாக ஒரு நினைவு.

    தலைவர்கள் நேரடி விவாதங்களுக்குச் சம்மதித்தால் நமது மக்களாட்சி மேலும் கூர்மைப்படும்.

    Next Story
    ×