என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
ராமர் கோவில் அமைந்தது தேசத்தின் பெருமை- மோகன் பகவத்
- சிவனை வணங்க வேண்டும் என்றால் சிவமாக இரு, ராமனை வணங்கவேண்டும் என்றால் ராமனாக இரு என்று பொருள்.
- அகங்காரம், சுயநலம், பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு இடர்கள் காரணமாக உலகம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது.
ராமர் கோவில் அமைந்தது தேசத்தின் பெருமை- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்இந்துக்களின் புண்ணிய பூமியான அயோத்தியில் நாளை (திங்கட்கிழமை) ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சுமார் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடிய வரலாறு நம் பாரதத்தின் வரலாறு. ஆரம்ப காலத்தில் நடந்த படையெடுப்புகள் செல்வத்தை கொள்ளையடிக்க நடந்தன. சில (அலெக்சாண்டர் படையெடுப்பு போன்றவை) ஆக்கிரமிப்பை மையமாக வைத்து நடந்தன.
ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின் தன்னம்பிக்கையை குறைக்க அவர்களின் வழிபாட்டுத்தலத்தை அழிப்பது அக்காலத்தில் அவசியமாக இருந்தது. எனவே, அன்னிய படையெடுப்பாளர்கள் பாரதத்தில் பல்வேறு கோவில்களை அழித்தார்கள். அவர்கள் குறிக்கோள் பாரதிய சமுதாயத்தின் சுயநம்பிக்கையை சிதைத்து, பலவீனமாக்கி, பின்னர் நிரந்தரமாக இங்கு ஆட்சி செய்வதாக இருந்தது. அயோத்தியில் இருந்த ராமர் கோவிலும் அதே எண்ணத்துடன் அழிக்கப்பட்டது.
ராமஜென்ம பூமி விஷயத்தில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தொடங்கிய சட்டப்போராட்டம் தொடர்ந்தது. 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி அன்று, 134 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு பிறகு, சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு சான்றுகளை ஆய்வு செய்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்ப்பை வழங்கியது. இருதரப்பு நம்பிக்கைகள் மற்றும் எண்ணங்களுக்கும் இந்த தீர்ப்பு மதிப்பளித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகுதான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆன்மிக ரீதியாக பார்த்தால், பெருவாரியான மக்களால் வழிபடப்படும் கடவுளாக இருக்கிறார் ராமர். ராமரின் வாழ்க்கை ஒரு நெறியான வாழ்க்கை என்று ஒட்டுமொத்த சமுதாயமும் போற்றுகிறது. அயோத்தியா என்றால் 'போர் இல்லாத நகரம், 'சச்சரவுகள் இல்லாத நகரம்' என்று பொருள். இந்த நேரத்தில், ஒட்டுமொத்த நாடும், அயோத்தியை எப்படி மீண்டும் நிர்மாணம் செய்வது என்பது பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும், இது நமது கடமையும் கூட.
ராமர் கோவில் அமைந்துள்ள இந்த தருணம் நமது தேசத்தின் பெருமையை மீண்டும் எழ செய்துள்ளது. பாரத சமுதாயம் ராமரின் வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாகவும் இது விளங்குகிறது. ராமரை கோவிலில் வணங்க சொல்லப்பட்டுள்ள முறைகள் பத்ரம், புஷ்பம், பலம், தோயம் (இலை, பூ, பழம், தண்ணீர்).
அதுமட்டுமில்லாது ராமரின் உருவத்தை நமது மனதில் பதித்து, அந்த நெறிப்படி நமது வாழ்க்கையை அமைத்து ராமரை பூஜிக்க வேண்டும். 'சிவோ பூத்வா சிவம் பஜேத், ராமோ பூத்வா ராமம் பஜேத்' என்பார்கள், அதாவது சிவனை வணங்க வேண்டும் என்றால் சிவமாக இரு, ராமனை வணங்கவேண்டும் என்றால் ராமனாக இரு என்று பொருள்.
'மற்றவர் மனைவியை தாயாக பார்ப்பவனும், பிறர் சொத்தை ஒரு பிடி மண்ணாக பார்ப்பவனும், அனைத்து ஜீவராசிகள் உள்ளேயும் தன்னை காண்பவனே பண்டிதன்' என்ற சொல் வழக்கு உள்ளது. பாரதிய கலாசாரம் வலியுறுத்துவது இதையே. இதேபோன்று ராமரின் பாதையில் நாமும் செல்ல வேண்டும்.
வாழ்க்கையில் சத்தியம், வலிமை மற்றும் துணிவுடன் மன்னிக்கும் மனம், நேர்மை, அடக்கம், அனைவர் மீதும் அன்பு பாராட்டல், தூய்மையான எண்ணம், கடமையை நிறைவேற்றுவதில் கண்டிப்பு உள்ளிட்ட பண்புகள் ராமனிடம் இருந்து கற்று நாம் அனைவரும் பின்பற்றக்கூடியதாகும். இவற்றை நம் வாழ்வில் கொண்டுவர நேர்மை, அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைக்க வேண்டும்.
நமது தேசிய கடமைகளை மனதில் கொண்டு, இந்த பண்புகளை நமது சமுதாய வாழ்விலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த பண்பின் அடிப்படையில்தான் ராமர் - லட்சுமணர் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்ததுடன், வலிமையான ராவணனையும் வீழ்த்தினார்கள்.
ராமரின் குணங்களை பிரதிபலிக்கும் நீதி, கருணை, சமத்துவம், சமூக நல்லிணக்கம், நேர்மை, சமுதாய நடத்தை ஆகியவற்றை பரப்பவும்; துணிச்சலான, சுரண்டல் இல்லாத, சமநீதியை கொண்ட வலிமையான சமுதாயம் உருவாவதை உறுதிசெய்வோம். இது நாம் ராமருக்காக மேற்கொள்ளும் சமுதாய பூஜை.
அகங்காரம், சுயநலம், பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு இடர்கள் காரணமாக உலகம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. பால ராமர் அயோத்தியில் எழுந்தருள்வதும், அவரது பிராண பிரதிஷ்டை நடப்படும் பாரத பூமியின் புனர் நிர்மாணத்தின் ஆரம்பம். இது எல்லோருக்கும் நன்மை பயக்கக்கூடியது, எவர் மீதும் விரோதம் பாராட்டாதது. நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி, அமைதிக்கான வழியை காட்டவல்லது.
நாம் இதை பின்பற்றி எடுத்து செல்லும் பக்தர்கள். இன்று, கோவில் எழுந்ததற்கான ஆன்மிக கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அதே வேளையில், பாரதத்தை புனர் நிர்மாணம் செய்து, அதன் மூலம் உலகை புனர் நிர்மாண பணியில் ஈடுபட உறுதி எடுத்துக்கொள்வோம். இந்த பேரொளியை மனதில் வைத்து, முன்னேறி செல்வது காலத்தின் கட்டாயம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்