search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இரவல்! தருவதும் பெறுவதும்!
    X

    இரவல்! தருவதும் பெறுவதும்!

    • உருவமில்லாத உயிர் மட்டுமே நமக்குடையது.
    • உலகத்தை இரவலாக வழங்கி ஆண்டவன் அனுப்பி வைத்திருக்கிறான்.

    இரவல் குறித்த செய்திகளை இனிமையுடன் வாசிக்கக் காத்திருக்கும் வாசகர்களே! வணக்கம்.

    மனிதராகப் பிறந்துள்ள நம் ஒவ்வொருவருக்கும் இந்த வாழ்க்கை இரவலாக வழங்கப்பட்டுள்ளது எனத் தத்துவவாதிகள் கூறுகின்றனர். உருவமில்லாத உயிர் மட்டுமே நமக்குடையது. அதற்குத் தகுந்தாற்போல உடம்பையும், வாழ்விட வசதிகளாகிய உலகத்தையும் இரவலாக வழங்கி ஆண்டவன் அனுப்பி வைத்திருக்கிறான்.

    இரவலாகப் பெற்ற உடம்பை வைத்துக்கொண்டு, வாய்க்கின்ற வாழ்க்கை இன்பமோ? துன்பமோ? முடியும் வரை வாழ்ந்துவிட்டு, இரவலாகப் பெற்ற உடம்பை இறைவனிடமோ இயற்கையிடமோ திரும்ப வழங்கிவிட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்கின்றனர்.

    'இரவல் தந்தவன் கேட்கின்றான்! அதை இல்லையென்றால் அவன் விடுவானா?' எனும் அர்த்தப் பொதிவுள்ள கவியரசர் கண்ணதாசனின் பாட்டு இரவல் எனும் பொருண்மையின் ஆழத்தை நமக்கு எடுத்துரைக்கிறது. நம்முடைய பிறப்பு என்பது எந்த விதக் கட்டணமுமின்றி இயற்கையாகவே நிகழுகிறது. மருத்துவக் கட்டணம் மனிதர்க்கானது; ஆயினும் மனிதப் பிறப்பின் நிகழ்விற்காக எந்தக் கட்டணத்தையும் நாம் இயற்கையிடம் செலுத்துவதில்லை.

    உடல், கண், காது, மூக்கு, வாய் ஆகிய பொறிபுலன்கள், கை, கால்கள் முதலிய அங்கங்கள், மூளை, மனம் முதலிய அறிவின் செயலாக்கங்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் முதலிய உள்ளுறுப்புகள், உதவிக்கென நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் ஐம்பூதங்கள் கொண்ட இயற்கையின் தொகுதி இவற்றையெல்லாம் இறைவன் நமக்கு இரவலாகவே வழங்கியிருக்கிறான்.

    அது என்ன இரவல்?

    ஒருவரிடமிருந்து ஒரு பொருளை அல்லது ஒரு சேவையைப் பெறுகிறோம் என்றால் அதனை நான்கு வகையில் பெறலாம்.

    பணம் கொடுத்துப் பெறுவது முதல் வகை. இவ்வகையில் பொருளுக்கான அல்லது சேவைக்கான பணமதிப்பைத் தருபவர் தீர்மானிப்பார்.

    பெறுபவர் அதனை ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் அந்த விலை கொடுத்துப் பெற்றுக் கொள்வார்; அல்லது தனக்கு உகந்த குறைந்த ஒரு விலையைக் கூறி, விற்பவர் அந்த விலைக்கு ஒத்துவரும் பட்சத்தில் அதைக் கொடுத்துப் பெற்றுக் கொள்வார். பொருளை விலைகொடுத்து வாங்குவது முதல் வகை.

    ஒரு பொருளை இலவசமாகப் பெறுவது அல்லது பண்டமாற்று எதுவுமின்றி வாங்குவது இரண்டாவது வகை. இதில் கொடுப்பவர் முழுமனத்தோடு பொருளை அடுத்தவருக்குக் கொடுப்பார்; பெறுபவர் மனமகிழ்ச்சியோடு அதனைப் பெற்றுக்கொள்வார். யாசகமாகப், பிச்சையாகப் பெறுவதையும் ஒருவகையில் இதனோடு சேர்த்துக் கொள்ளலாம். இலவசமாகப் பொருளை வாங்குவது இரண்டாவது வகை.

    ஒரு பொருளை விலைக்கும் கொடுக்காமல். இலவசமாகவும் வழங்காமல் கடனுக்குக் கொடுப்பது மூன்றாவது வகை. இவ்வகையில் பெரும்பாலும் பணமே கடனாக வழங்கப்படும். வாங்குகிற பணத்தைத் திருப்பிக் கட்டவேண்டும் என்கிற கடப்பாடோடு இது பெறப்படுவதால் இதற்குக் 'கடன்' என்று பெயர். 'கடன்' என்றால் தமிழில் கடமை என்கிற பொருளும் உண்டு.

    பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையென்பதால் அப்பெயர். பெற்றவனுடைய பற்றாக்குறைத் தேவையை நிவர்த்தி செய்ய அக்கடன்தொகை உதவியதால் கடனைத் திருப்பியளிக்கும்போது வட்டியாகச் சிறிது கூடுதல் தொகையும் வழங்கியாக வேண்டும். நிதிமேலாண்மையில் பெறப்படுகிற கடனுக்கேற்ற வட்டிவிகிதங்களும் தற்போது வரையறுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொருளைக் கடனாக வாங்குவது மூன்றாவது வகை.

    விலைக்கும் வாங்காமல், இலவசமாகவும் பெறாமல், கடனாகவும் பெற்றுக்கொள்ளாமல், ஒரு பொருளை வாடகைக்கு வாங்குவது நான்காவது முறை. குறுகிய காலத் தேவைக்கு மட்டுமே பயன்படுகிற சிலபொருள்களை விலைகொடுத்து வாங்குவது பண விரயம் என்று எண்ணுபவர்கள் அவற்றைத் தேவைப்படும்போது மட்டும் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திவிட்டுத் திருப்பித் தந்துவிடுவது இவ்வகை.

    நிரந்தரமாக இல்லாமல் சில ஊர்களில் தற்காலிகமாகப் பணியாற்றுபவர்கள் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கிப், பிறகு பணிமாறுதல் பெற்றவுடன் அடுத்த ஊரில் வாடகைக்கு வீடு தேடுவர். இவர்கள் ஊர்கள்தோறும் சொந்த வீடுகள் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு வசதிகள் அற்றவர்கள் அல்லது தேவையுமற்றவர்கள்.

    அந்தக் காலங்களில் சொந்தமாகச் சைக்கிள்கூட வைத்துக்கொள்ளும் வசதியற்றவர்களாய் மக்கள் இருந்தனர். அதனால் கிராமங்கள்தோறும் வாடகைக்குச் சைக்கிள்கள் விடும் கடைகள் இருந்தன. அன்றாடக் குறுகிய தூரப் பயணங்களுக்கு மக்கள் வாடகைச் சைக்கிள்களைப் பயன்படுத்தினர். சொற்ப வாடகைச் செலவில் குறிப்பிட்ட காலத்திற்குப் பொருளின் முழுப் பயனையும் இவர்கள் பெற்று விடுவர். ஒத்திக்கு வாங்குவது, குத்தகைக்கு எடுப்பது போன்றவையும் இதில் அடங்கும்.

    இரவல் என்பது இவை அத்தனையையும் தாண்டியது. இரவலாக வாங்கப் படும் பொருள் எந்தப் பணப்பலனையும் சாராதது; அதே நேரத்தில் இலவசமானதும் கிடையாது. இரவலாக ஒரு பொருளை ஒருவரிடமிருந்து ஒருவர் பெறுகிறார் என்றால், அதற்கு விலையாகவோ, கடனாகவோ, வாடகையாகவோ அல்லது பிணையாகவோ எந்தப் பொருளையும், பணத்தையும் தரவேண்டியது இல்லை.

    எனவே இரவலாகப் பெறப்படும் பொருள் முழுக்க முழுக்கத் தருபவருக்கு உரிமையான சொந்தப் பொருளாகவே இருக்கும். வாங்கியவர் பொருளின் பயனை அனுபவித்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் இரவல் வாங்கிய பொருளைத் தந்தவருக்கு உரிய நன்றியுடன் திருப்பித் தந்துவிட வேண்டும்.

    அந்தக் காலங்களில் தங்கநகை முதலிய அணிகலன்கள் வசதிபடைத்தவர்கள் வீடுகளில் மட்டுமே இருக்கும். திருமணம் மற்றும் மங்கல விழாக்கள் வரும்போது வசதியற்ற உறவினர்கள், வசதியுள்ளோரிடம் இரவலாக அணிக்கலன்களை வாங்கி அணிந்துகொள்வது வழக்கம். விசேஷம் முடிந்ததும் திருப்பிக்கொடுத்து விடுவர். இன்று எல்லார் வீடுகளிலும் தங்க ஆபரணங்கள் இருந்தாலும், திருட்டுபயத்திற்கு அஞ்சி, நகைகளை வங்கி லாக்கரில் தான் வைத்துவிடுகிறோம்; விசேஷங்களுக்குத் தேவையென்றால் வங்கிக்குச் சென்று இரவல்நகை பெற்று வருவதுபோலப் பத்திரமாக எடுத்து, விழா முடிந்ததும் பத்திரமாகத் திருப்பி வைத்து விடுகிறோம்.

    அதுபோல ஆடைகளையும் இரவல்வாங்கி அணிந்துகொண்ட காலம் ஒன்று இருந்தது." மாப்ள அவருதான் ஆனா அவரு போட்டிருக்கிற சட்டை என்னோடது!" என்பதுபோன்ற திரைப்படக் காமெடிகள் இதை விளக்கும்." பட்டுப் புடவைய இரவல் குடுத்துட்டுப் பின்னாடியே பாயை எடுத்திட்டுப்போய் அவ உட்கார்ற இடமெல்லாம் விரித்துப் பட்டுப் புடவையை அழுக்காகாமல் பார்த்துக்கொண்ட பெண்மணி" கதைகளும் பழமொழிகளில் உண்டு.

    சைக்கிள், இருசக்கர வாகனங்கள், கார் முதலான வாகனங்களையும் இரவல் வாங்கிப் பயன்படுத்துகிற பழக்கம் இன்றும் இருக்கிறது. சில பொருள்கள் இரவல் வாங்குவதற்கென்றே படைக்கப்பட்டவை போல இருக்கும். வீடுகளில் பால், சீனி, காபிப் பொடி போன்றவை அடிக்கடி இரவலாகப் பெறப்படுபவை. அதே போல ஆணி அடிக்கப் பயன்படும் சுத்தியல், திருப்புளி, மின்சார டெஸ்டர், ஏணி,அயர்ன்பாக்ஸ், குடை போன்றவையும் இரவல் பட்டியலில் இடம்பெறுபவை.

    வங்கிகளுக்குச் சென்றால், அங்கே படிவங்களை நிரப்பப், பேனாவிற்காக, வந்திருப்பவர்களின் சட்டைப் பைகளையும் கைகளையும் நோட்டமிடுபவர்களைப் பரவலாகப் பார்க்கலாம். சிலர், படிவம் நிரப்பிக் கொண்டிருப்பவரின் அருகில் வந்து நின்றுகொண்டு, கொஞ்சம் எழுதி முடிச்சிட்டுப் பேனாவை எனக்குத் தருவீர்களா? எனச் சொந்தப் பேனாவைக் கேட்பதைப்போலக் கேட்பர்.

    இதற்கும் மேலே சிலர், சார் உங்களோடதை நிரப்பிட்டு எனக்கும் கொஞ்சம் நிரப்பித் தருவீங்களா? என்று படுத்துவார்கள். பெருவாரியான மக்கள் பேனாவை இரவல் கேட்கும் இடம் வங்கிதான். அதிலும் பலர் இரவல் வாங்கிய பேனாவைத் திருப்பித் தராமலேயே சென்றுவிடுவதும் உண்டு.

    இரவல் கொடுக்கிற பொருள்களிலேயே பெரும்பாலும் திரும்பி வராத பொருள் புத்தகம் தான். நிறையப் புத்தகங்களைத் தன் வீட்டில் வைத்திருக்கும் ஒரு எழுத்தாளர் சொன்னார்," கேட்பது யாராக இருந்தாலும் புத்தகங்களை மட்டும் இரவலாகக் கொடுக்காதீர்கள்; அவை எக்காலத்திலும் திரும்ப வரப்போவதேயில்லை. என்னிடம் இருக்கிற பல புத்தகங்கள் நான் இரவலாகப் பெற்றுத் திரும்பக் கொடுக்காதவைதாம்".

    மார்க் ட்வைன் பிரபலமான மேனாட்டு எழுத்தாளர். அவர் எங்கு சென்றாலும், எப்போது சென்றாலும் கையில் ஒரு குடையோடு செல்வது வழக்கம். அந்த நகரில் மார்க் ட்வைன் என்றாலே கையில் குடையோடு இருப்பவர் என்பதே அடையாளமாகிப் போனது.

    அவர் ஒருநாள் தனது கையிலிருந்த குடை மிகவும் பழையதாகவும் பழுதாகவும் போய்விட்டதால் அதைக் குப்பையில் எறிந்து விட்டுப் புதிதாகஒரு குடை வாங்கிக்கொள்ள முடிவு செய்தார். தனது பழைய குடையை அன்று மாலை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார். மறுநாள் காலை விடிந்ததும் வீட்டு வாசலில் அழைப்புமணி ஒலித்தது. தூக்கக் கலக்கத்தோடு கதவைத் திறந்து பார்த்தார் மார்க் ட்வைன்.

    அந்தப் பகுதியைத் துப்புரவு செய்யும் தொழிலாளி, மார்க் ட்வைன் குப்பைத் தொட்டியில் போட்ட குடையுடன் நின்றிருந்தார். " இது உங்கள் குடை தானே!; இந்தக் குடையோடு அடிக்கடி உங்களை இந்தத் தெருவில் பார்த்திருக்கிறேன்; குப்பைத் தொட்டிக்குள் யாரோ தெரியாமல் போட்டிருக்கிறார்கள்! இதோ பெற்றுக் கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்.

    அடுத்து என்ன செய்வது? என யோசித்த மார்க் ட்வைன் அந்தக் குடையோடு அந்தப் பகுதியிலிருந்த குளக்கரைக்குச் சென்று குளத்திற்குள் குடையை வீசியெறிந்து விட்டு வீட்டுக்குத் திரும்பிவிட்டார். அந்தோ பரிதாபம்! அன்று மாலையே இவருடைய நண்பரொருவர், குடையை குளக்கரையில் கண்டெடுத்ததாகச் சொல்லி, மார்க் ட்வைனிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

    நிரந்தரமாக அந்தக் குடையிடமிருந்து பிரிவது எப்படி?. மார்க் ட்வைன் பக்கத்து வீட்டு நண்பரின் கதவைத் தட்டினார்; குடையை இரவலாகத் தருகிறேன்; வைத்திரு; நான் கேட்கும்போது திருப்பித்தா! எனத் தந்துவிட்டு வந்தார். அந்தக் குடை திரும்ப வரவேயில்லை. இரவலுக்கு அவ்வளவு சக்தி.

    இரவல் என்பது அவசர ஆத்திரத்திற்குக் கருணையோடு கிடைக்கிற உதவி; அதுவும் நூல்களாக இருந்தால் பேரறிவு. பெற்றதைத் திரும்ப அளிக்கும் குணம் இரவல் பெறுவதில் இனிமையோடு இருக்க வேண்டும்.

    யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம்! தாம் இன்புறுவது உலகு இன்புறக் காணும் பரோபகாரம் இரவல் தருவதில் உண்டு. நாம் தொடக்கத்தில் கண்டதைப்போல இந்த வாழ்வே நமக்கு இரவல் வாழ்க்கைதான். நன்றாக வாழ்ந்துவிட்டு எதிர்காலச் சமூகத்திற்காக இந்த பூமியின் செல்வ வளத்தை, அறிவு வளத்தை மேலும் செழுமையாக்கித் திருப்பித் தந்துவிட்டுச் செல்வதே இரவல் வாழ்வியலின் லட்சியமாக இருக்கட்டும்.

    தொடர்புக்கு 9443190098

    Next Story
    ×