என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
ஐயன்-அம்பிகையின் திருவூடல்
- தை முதல் நாள் இந்தத் திருவிழா நிறைவடைந்த பின்னர், தை இரண்டாம் நாள் திருவூடல் திருவிழா நடைபெறும்.
- அர்த்தநாரீஸ்வரர் என்று சிவனாருக்குப் பெருமை சேர்த்தாலும், அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்திற்கு அம்பிகையே காரணம்.
ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் திருவண்ணாமலைத் திருத்தலத்தில் அம்பாள் எழுந்தருளித் திருக்கோலம் காட்டுகிறாள். இவளுக்கு உண்ணாமுலை அம்மன் என்றே திருநாமம்.
அம்பாள் இத்தலத்தில் எழுந்தருளியதே வெகு சிறப்பானதாகும். திருக்கைலாயத்தில் ஐயனும் அம்பிகையும் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, விளையாட்டாக ஐயனின் திருக்கண்களைத் தன்னுடைய கைகளால் அம்பிகை பொத்திவிட்டாள். விளையாட்டு என்றாலும் எந்தச் செயலுக்கும் எதிர்வினை உண்டல்லவா! அதன்படி, உலகம் இருண்டது. உயிர்களெல்லாம் நடுங்கின. பிரளயம் சூழ்ந்தது. தன்னுடைய செயலால், அகாலத்தில் பிரளயம் வந்ததை உணர்ந்த அம்மை, தன் செயலுக்குப் பரிகாரம் தேட விழைந்தாள். பூவுலகம் அடைந்து காஞ்சிபுரத்தில் மணலால் சிவலிங்கம் அமைத்து தவம் செய்து இறைவனை வழிபட்டாள். இறைவனும் காட்சி கொடுத்து அம்பிகையை ஏற்றார்.
இந்நிலையில், சில காலம் முன்னர், பிருங்கி முனிவர் செய்ததொன்று அம்பிகையின் நினைவில் ஊசலாடியது. சிவனை மட்டுமே பிருங்கி வணங்குவார். அம்பிகை அருகில் இருந்தாலும் ஒதுக்கிவிட்டுச் சிவனை மட்டுமே சுற்றிவருவார். ஒருமுறை, பிருங்கி திருக்கைலாயம் வந்தபோது, வேண்டுமென்றே சிவனாரின் அருகில் அன்னை நின்றுகொண்டாள். ஐயனோடு ஒட்டி நின்றுவிட்டால், 'வலம் வரும்போது தன்னையும் சேர்த்துத்தானே வலம் வரவேண்டும்; பிருங்கி என்ன செய்கிறார் பார்க்கலாம்' என்று அம்பிகை எண்ண, பிருங்கியோ இன்னும் வேறு விதமாக எண்ணினார். மானுட உருவில் இருந்தால்தானே, அருகருகே நிற்கும் ஐயனுக்கும் அம்பிகைக்கும் இடையில் நுழையமுடியாது? என்று வண்டு வடிவம் எடுத்தார். இடையில் புகுந்தார். சிவனாரை மட்டுமே வலம் வந்தார்.
இப்போது அம்பிகைக்கு இந்நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. என்னதான் ஐயனுக்கு அருகில் நின்றாலும், தனியாக இருந்ததால்தானே பிருங்கியால் இடைபுக முடிந்தது? ஐயனிடமிருந்து பிரிக்கமுடியாத நிலையை அடைந்துவிட்டால்......? சிவனாரிடமே இதைக் கேட்க...... திருவண்ணாமலை சென்று தவம் செய்யச் சொன்னார் அவர். ஆமாம், திருவண்ணாமலையில் தவம் செய்தால், தாம் எழுந்தருளி இடப்பாகத்தில் அம்மையை அரவணைப்பதாகவும் கூறினார்.
இதன்படியே அம்பிகையும் செய்ய, தம்முடைய வாம பாகத்தில் அம்பிகையை ஏற்றுக்கொண்டு, மாதொரு பாதியனாக, அர்த்தநாரீஸ்வரர் என்னும் புதிய திருநாமம் கொண்டார்.
அண்ணாமலையாரின் திருவாட்டியாக, உண்ணாமுலை என்னும் திருநாமத்தோடு அம்பிகையும் இங்கே நிலைகொண்டாள்.
வாமபாகத்துக்குரியவள் என்னும் பெருமையை அம்பிகையின் கோவில் அமைப்பிலும் காணலாம். திருவண்ணாமலைத் கோவிலில், ஐயன் சந்நிதிக்கு இடது பக்கத்தில், மூன்றாம் பிராகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இருக்கிறது உண்ணாமுலையம்மன் சந்நிதி.
அம்பிகைக்கு அபீதகுசாம்பாள், திருக்காமகோட்டமுடைய தம்பிராட்டி, உலகுடைப்பெருமான் நம்பிராட்டி, காமகோட்டமுடைய உண்ணாமுலையாள் என்னும் திருநாமங்களும் உண்டு.
அம்பாள், நின்ற கோல நாயகி. திருக்கரங்களில் தாமரை மலர் ஏந்தி நிற்கிறாள். சின்னஞ்சிறு பெண்போல திருப்பாதங்களைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறாள். சாந்தம் நிறைந்த முகம், எல்லையற்ற கருணையைக் கொட்டும் விழிகள்:
சித்தாந்தத்தெருளே வருக சிவஞானத் தேனே வருக திருவாளர்
தேடி வைத்தப் பேரின்பத் திரளே வருக சன்மார்க்க
அருளே வருக திருவருணை அருந்தாமுலையாய் வருக
அலகில் விளையாட்டு அயரும் எங்கள் அம்மே வருக வருகவே என்று அம்மையைப் போற்றுகிறது உண்ணாமுலையம்மன் பிள்ளைத் தமிழ்.
பிள்ளைகளான விநாயகரும் முருகரும், சாதாரண மானுடப் பிள்ளைகளைப் போல் பாலருந்தா முலைகளைக் கொண்டவள் என்பதாலேயே உண்ணாமுலை என்று அம்பாளுக்குத் திருநாமம். இந்தத் திருநாமத்திற்கு சித்தாந்த ரீதியாகவும் வேதாந்த ரீதியாகவும் வேறு சில விளக்கங்களும் உள்ளன.
அர்த்தநாரீஸ்வரர் என்று சிவனாருக்குப் பெருமை சேர்த்தாலும், அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்திற்கு அம்பிகையே காரணம். சிவந்த செஞ்சடைக் கற்றை – கருங்கூந்தல் அலை; கொன்றை மாலை – மல்லிகைப் பூமாலை; திரிசூலம் – நீலோற்பல மலர்; பவள நிறம் – பச்சை நிறம்; தண்டை – சிலம்பு; அகன்ற மார்பு – கச்சணிந்த மார்பு; இவ்வாறாக, ஆணும் பெண்ணுமாக, ஐயனும் அம்மையும் காட்சி கொடுத்தார்கள்.
ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் எதிரிகளல்ல, போட்டியாளர்களல்ல, ஆயின் சமமானவர்கள், இணையானவர்கள், இணைந்து செயல்படவேண்டியவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தினார்கள். இவ்வாறு ஐயனுக்குப் புது பெருமையை அம்பிகை சேர்த்த அந்தத் திருநாள், கார்த்திகை மாதத்துப் பவுர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருநாள். இந்த நாளே திருவண்ணாமலையில் தீபத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
அண்ணாமலை என்னும் பெயருக்கு 'அணுக முடியாத' என்று பொருள். உண்ணாமுலை என்னும் பெயருக்கு 'உண்ணாத' என்று பொருள். ஆனால், ஐயனும் அம்மையும் அன்பினால் அணுகக்கூடியவர்களாக, ஞானம் ஊட்டுகிறவர்களாக இங்கே எழுந்தருளியிருக்கிறார்கள். மார்கழி மாதக் கடைசியில் கோவிலில் பத்து நாள் திருவிழா நடைபெறும். தை முதல் நாள் இந்தத் திருவிழா நிறைவடைந்த பின்னர், தை இரண்டாம் நாள் திருவூடல் திருவிழா நடைபெறும்.
அம்பிகையை உதாசீனம் செய்துவிட்டு ஐயனை மட்டும் வணங்கினாரில்லையா பிருங்கி முனிவர்? அவர் அவ்வாறு செய்தபோதும் அவருக்குச் சிவனார் முக்தி வழங்கினார். அர்த்தநாரீஸ்வரர் ஆனபின்னரும் உண்மை உணராத பிருங்கிக்கு முக்தியா என்று அன்னை சினந்தாள். பிருங்கி எப்படியோ போகட்டும், ஆனால், சிவனார் அவருக்கு முக்தி கொடுக்கலாமா? தன் இருப்பிடம் புகுந்து கதவடைத்துக்கொண்டாளாம் அம்பிகை. அம்பிகை சினம் கொண்டுவிட்டாள் என்பதைத் தெரிந்துகொண்ட சிவனார், சுந்தரமுர்த்தி சுவாமிகளைத் தூது அனுப்பினாராம். அம்பிகை அதற்கும் மசியவில்லை.
சிவனார் பாவம், தடுமாறித்தான் போனார். பக்தரையும் விடமுடியவில்லை; அம்பிகையையும் ஒதுக்கமுடியவில்லை. ஆகவே, மீண்டும் அம்பிகைக்குத் தூது அனுப்பினார். அம்பிகையின் கோபம், செல்லக் கோபம்தானே! யாரிடமும் சினம் கொள்ளாத ஜகன்மாதா ஐயனிடம் மட்டும் சினம் கொள்வாளா என்ன? சினம் தணிந்து வெளிப்பட்டாள். ஐயனுக்கு அருகில் வந்து அமர்ந்தும் கொண்டாள்.
இதைத்தான், திருவூடல் விழாவில் மீண்டும் நடித்துக் காட்டுகிறார்கள். முதல் நாள் இரவு அம்பிகை ஊடல் கொண்டுவிடுவாள். சினத்தை எப்படித் தணிப்பது என்று எண்ணித் தணிக்கும் சிவனார், அன்றிரவு குமாரக்கோவிலில் சென்று தங்கிவிடுவார். அடுத்த நாள் காலையில் கிரிவலம் செல்வார். கிரிவலத்தின்போது, பிருங்கி முனிவருக்குக் காட்சி கொடுத்து அருள்வார். பின்னர் அம்பிகைக் கோவிலை அடைந்து ஊடலுக்கு விளக்கம் தந்து அம்பிகையை சமாதானப்படுத்துவார்.
சின்னச் சின்ன கோபதாபங்கள் இருந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் உதவி செய்தும் வாழுகிற வாழ்க்கைத் தாத்பரியத்தை எடுத்துக்கூறும் விதமாக ஐயனும் அம்பிகையும் நடித்துக் காட்டுகிற இந்நிகழ்ச்சி நடைபெறுகிற வீதிக்கே, திருவூடல் திருவீதி என்றுதான் பெயர்.
குறையாத பொருளாம், மாற்றறியாப் பொன்னாம் உண்ணாமுலை அம்மன் அள்ள அள்ளக் குறையாது அருளக் காத்திருக்கிறாள்; பாவப்பிணிக்கு மருந்தாம் இவளை வணங்குவோம்; வழிபடுவோம்.
தொடர்புக்கு:- sesh2525@gmail.com
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்