search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பெரிய அய்யாவின் தமிழ்த்தொண்டு!
    X

    பெரிய அய்யாவின் தமிழ்த்தொண்டு!

    • "தமிழர் தந்தை" என்ற அன்பான, அறிவுப்பூர்வமான அடைமொழி பெரிய அய்யாவை எளிதில் வந்து அடைந்துவிடவில்லை!
    • ஆதித்தனார் ஒரு பத்திரிகை ஆரம்பித்தார்-மளமளவென்று வளர்ந்தது. எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு வளர்ந்தது. நன்றாகவே வேரூன்றிவிட்டது.

    பூமியில் பிறந்த எல்லோரையும் சிறப்புப்பெயர் சொல்லி அனைவரும் அழைப்பதில்லை! புகழுடம்போடு பூமியில் வாழ்ந்து சென்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கரம்சந்த் காந்தி உலகமக்களால் "மகாத்மா காந்தி" என்று அழைக்கப்பட்டார். காமராஜர் "பெருந்தலைவர் காமராஜர்"என்றும், இ.வெ.ராமசாமி நாயக்கர் "பெரியார்" என்றும், அண்ணா "அறிஞர்" என்றும், கருணாநிதி "கலைஞர்" என்றும் ஒருமனதாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுபோல் பெரிய அய்யா சி.பா.ஆதித்தனார் தமிழ் மக்களால் "தமிழர் தந்தை" என்று ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

    இந்த "தமிழர் தந்தை" என்ற அன்பான, அறிவுப்பூர்வமான அடைமொழி பெரிய அய்யாவை எளிதில் வந்து அடைந்து விடவில்லை! அவரின் உடலில்... உள்ளத்தில்... அதன் அடித்தளத்தில்... அதன் ஆணிவேரில்... இளம் வயது முதல் இறக்கும் நாள்வரையில் உயிர்மூச்சாய் இணைந்திருந்த தமிழ்பற்றும், 'தமிழன்' என்ற நீங்காத நினைவு, முயற்சி, உழைப்பு, பாரிஸ்டர் பட்டம், பத்திரிகையாளர், நாம் தமிழர் இயக்கத் தலைவர், அரசியல், மொழிப்போர், மேலவை உறுப்பினர், பேரவைத்தலைவர், அமைச்சர், உடல் மண்ணுக்கு-உயிர் தமிழுக்கு என்ற அனைத்தும்தான் அவருக்கு "தமிழர் தந்தை" என்ற சிறப்பைத் தந்து தன்னைச் சிறப்பித்துக்கொண்டது!

    27-9-1805-ல், திருநெல்வேலி மாவட்டம் (தூத்துக்குடி) திருச்செந்தூருக்கு அருகே, காயாமொழி என்ற பிரபலமான ஊரில், சிவந்திஆதித்தனார்- கனகம் அம்மாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவருக்கு பாலசுப்பிரமணிய ஆதித்தன் என்று பெயர் சூட்டினார்கள். அந்த சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனார், பிற்காலத்தில் தன் பெயரை சி.பா.ஆதித்தன் என்று சுருக்கிக் கொண்டார். தந்தை சிவந்திஆதித்தனார், ஸ்ரீவைகுண்டத்தில் மிகப்பெரிய வக்கீலாகப் பணியாற்றினார். தமையனார் எஸ்.டி.ஆதித்தனாரும் சிறந்த வழக்கறிஞர்தான்! எனவே தானும் படித்து வழக்கறிஞர் ஆகவேண்டும் என்று எண்ணிய ஆதித்தனார் சிறுவயதிலேயே படிப்பில் கெட்டிக்காரராக விளங்கினார். தனது உயர்நிலைப்பள்ளிப் படிப்பை ஸ்ரீவைகுண்டத்தில் படித்த சி.பா. ஆதித்தனார் தமிழ்மீது தாழாத பற்றும், பாசமும் கொண்டிருந்ததன் காரணமாக, அந்தக்காலத்தில் விருப்பப்பாடமாக பெரும்பாலானவர்கள் சமஸ்கிருதத்தைத் தேர்வுசெய்து படித்துக்கொண்டிருந்தாலும், தனது தமையனார் எஸ்.டி. ஆதித்தன் சம்ஸ்கிருதத்தை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்தும்கூட, தான்மட்டும் தமிழையே விருப்பப்பாடமாக எடுத்துப் படித்தார்.

    சின்னவயதிலேயே தமிழ்அறிவோடு, கற்பனைத்திறனும் கைவறப் பெற்றிருந்ததன் காரணமாகத் தன் பதினைந்தாம் வயதில் கல்கத்தாவில் பிரபலமாக விளங்கிய நறுமணப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையினர் தங்கள் கம்பெனி விளம்பரத்திற்கான சிறந்த கற்பனை ஓவியம் தீட்டி அனுப்பும் சிறந்த ஒருவருக்குப் பரிசு தருவதாக அறிவித்திருந்ததைக் கண்ணுற்ற அய்யா அவர்கள் தீட்டிய கருத்தோவியத்திற்கு முதற்பரிசு பெற்றார்.

    பள்ளி இறுதிவகுப்பை வெற்றிகரமாக முடித்துவிட்ட சி.பா.ஆதித்தனார் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பவுதீகப் பாடப்பிரிவில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தார். தமிழிலும், கற்பனைத்திறனிலும் சிறந்துவிளங்கிய ஆதித்தனார் படிப்பில் சிறந்தவராகவும், விளையாட்டு வீரராகவும் விளங்கினார். கல்லூரியிலேயே ஒரு கால்பந்தாட்டக் குழுவை ஆரம்பித்து, வீரர்களுக்குப் பயிற்சி அளித்தார். அந்தக்குழுவின் தலைவராகவும் அவர் இருந்தார். அந்தவயதிலேயே அவரின் தலைமைப்பண்பு வெளிப்படத்து வங்கிவிட்டது என்பதுதான் உண்மை!

    கல்லூரியின் தமிழ் இலக்கியச் சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பு வகித்த ஆதித்தனார் தமிழ் இலக்கியப் புத்தகங்களை வாங்கித் தான் படித்ததோடு, சங்கத்தில் உள்ள உறுப்பினர்களையும் இலக்கியம் படிக்கவைத்தார். திருச்சியில் அவரின் தமிழ்ப்பணி தொடர்ந்தது. படிக்கும்காலத்திலேயே தமிழார்வத்தின் காரணமாக ஒரு அச்சகத்தை விலைக்கு வாங்கி 'ஆர்ட்ஸ் புக் கம்பெனி' என்ற பெயரில் அச்சகம் நடத்தி, பயனுள்ள புத்தகங்களைப் பிரசுரித்து விற்பனை செய்து பணம் சம்பாதித்தார் என்பது படிக்கின்ற மாணவர்கள் மத்தியில் சாத்தியப்படாத ஓன்று என்றாலும், ஆதித்தனாருக்கு மட்டும் எல்லாமே சாத்தியமானதாகவே அமைந்திருந்தது என்பதுதான் உண்மை!

    கல்லூரிக்காலத்தில் நடத்திய பதிப்பகத்தில், ஒரு நடுத்தரக் குடும்பத்திற்குப் போதுமான வருமானம் வந்தது. ஆனால் அந்த வருமானத்தைத் தான் செலவு செய்யாமல், தனது லட்சியமான, தமிழ் வளர்த்தலுக்கும், விளையாட்டில் திறன்பெற்று விளங்குதற்குமே செலவிட்டார்! பி.ஏ. தேர்ச்சிபெற்றவர், அதே கல்லூரியிலேயே எம்.ஏ.யும் பயின்று, பட்டம் பெற்றுக்கொண்டு, சட்டம் படிப்பதற்காக சென்னை சட்டக்கல்லூரியில் 1928-ல், பி.எல். வகுப்பில் சேர்ந்தார். கூடவே, திருச்சியில் நடத்திவந்த அச்சுக்கூடத்தையும் சென்னைக்கு எடுத்து வந்து, அச்சகத்தில் அச்சகத்தை நிறுவி, பயனுள்ள புத்தகங்களைப் பதிப்பித்தார். இதன் காரணமாக, அக்காலத்தில் பிரபலமாயிருந்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான பி.ஸ்ரீ.ஆச்சார்யாவுடன் நட்பு கிடைத்தது. அவர்மூலமாக அவரின் நண்பரும், சுதேசமித்திரன் பத்திரிகையின் ஆசிரியருமான சி.ஆர்.சீனிவாசனிடம் பழக்கம் ஏற்பட்டது. சீனிவாசனின் மூலம் 'இந்து' ஆசிரியர் ஏ.ரெங்கசாமியின் நட்பு கிடைத்தது. கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த ஒரு மாணவரின் நட்பு வட்டம், மாணவர்களைத்தாண்டி, எழுத்தாளர்கள்... பத்திரிகையாளர்கள் எனவிரிய முடிந்ததென்றால் அது ஆதித்தனார் அவர்களின் ஆளுமைத்தன்மையால்தான் என்பதை உணரமுடிகிறது! சட்டக் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தவருக்கு லண்டன் சென்று பார்-அட்-லா படித்தால் மதிப்பும், மரியாதையும், சம்பாத்தியமும் அதிகமாகும் என்ற எண்ணம் ஏற்பட்டதால், சட்டக்கல்லூரியில் இருந்து விலகி, லண்டன் செல்ல முடிவெடுத்தார். உடனடியாக சுதேசமித்திரன் ஆசிரியர் சி.ஆர். சீனிவாசனிடம் பேசி, லண்டனில் இருந்து தான் அனுப்பும் செய்திகளைப் பிரசுரம் செய்து, தன்னை லண்டன் நிருபராக ஏற்றுக்கொள்ள அனுமதி பெற்றுவிட்டுத் தான் ஆதித்தனார் துணிச்சலாக லண்டன் சென்றார். அங்கு பாரிஸ்டர் பட்டப்படிப்பில் சேர்ந்ததோடு, லண்டன் செய்திகளை சுதேசமித்திரனுக்கு உடனுக்குடன் எழுதி அனுப்பினார். சுதேசமித்திரனோடு மட்டும் அவரின் நிருபர் பணியை நிறுத்திக்கொள்ளாமல், 'டைம்ஸ் ஆப் இந்தியா' 'ஆஜ்'என்ற உருது பத்திரிகை, இன்னும் சில ஆப்பிரிக்கப் பத்திரிகைகளுக்கும் செய்திகள் அனுப்பினார். லண்டனில் வெளிவந்து கொண்டிருந்த 'ஸ்பெக்டேட்டர்' என்ற ஆங்கில பத்திரிகைக்கும் செய்தி தந்து, தனது பாரிஸ்டர் படிப்பிற்கான முழு தொகையினையும் சம்பாதித்துக் கொண்டார் என்பது ஆதித்தனாரின் உழைப்பும், உயரிய நோக்கமும் 'விளையும் பயிர் முளையிலேயே தெரியும்' என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துவிட்டது!

    1931-ம் ஆண்டு லண்டனில் வட்டமேசை மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள வருகைதந்த 'மகாத்மா' காந்தியுடன் சென்னையில் இருந்து 'இந்து' பத்திரிகை ஆசிரியர் ரெங்கசாமியும் வந்திருந்தார். ரெங்கசாமி 'மகாத்மா' காந்தியிடம் சி.பா.ஆதித்தனாரை அறிமுகம் செய்து வைத்தார். அதனால் ஆதித்தனார் காந்தியிடம் நெருங்கிப்பழகும் வாய்ப்பைப் பெற்றதோடு, அவரைப்பற்றிய செய்திகளையும் உடனுக்குடன் சுதேசமித்திரனுக்கு அனுப்ப முடிந்தது. ஒருமுறை காந்தி பேசிக்கொண்டிருந்த போது, பேச்சை நிறுத்திவிட்டு வெளியேறிச் சென்றவர், சிறிதுநேரம் கழித்தே திரும்பிவந்தார். அதன் காரணத்தை அவரிடமே கேட்டு, "காந்தி தனது பேச்சின் இடையேவெளியில் சென்று, ஆடிக் கொண்டிருந்த ஒரு பல்லைப் பிடுங்கிப்போட்டுவிட்டுத் திரும்பினார்" என்ற செய்தியை இந்தியாவிற்கு ஆதித்தனார் மட்டுமே அனுப்பிப் பாராட்டினைப் பெற்றார்! செய்திகளை வித்தியாசமாகச் சேகரிப்பதிலும், எழுதுவதிலும் புதுமைகள் செய்த அய்யாவைப் பத்திரிகைகளும், படிப்பவர்களும் பாராட்டினார்கள் என்பதைவிட 'மகாத்மா' காந்தியடிகளே பாராட்டினார் என்பது சிறப்பல்லவா? ஆதித்தனாரின் கட்டுரைகளும், தமிழ் எழுத்துக்களும் லண்டனில் தமிழ் ஆய்வுகள் செய்த பேராசிரியர் ஜே.ஆர்.பெர்த் என்பவரைக் கவர்ந்த தால். அவர் தயாரித்துக்கொண்டிருந்த 'தமிழ் உச்சரிப்புகள்' என்ற நூலுக்காக ஆதித்தனாரின் தமிழ் உச்சரிப்புகளை ஒலிநாடாவில் பதிவுசெய்து பயன்படுத்தினார் என்று அறியும்போது, எத்தனையோ தமிழர்களும், தமிழறிஞர்களும் இருந்தும்கூட ஆதித்தனாரே தமிழில் சிறந்து விளங்கினார் என்று தெரிகிறதல்லவா? இந்தத் தமிழுணர்வு அவருக்குள் பிறப்பிலேயே நீக்கமற நிறைந்திருந்ததால்தான் பிற்காலத்தில் தமிழ், தமிழர். தமிழ் தேசம் என்ற தீவிரமான தமிழ் லட்சியம் ஆதித்தனாரைத் தமிழகத்தின் தன்மானமிக்கத் தமிழர் தந்தையாய் மாற்றியிருக்கிறது என்று அறியத்தோன்றுகிறது.

    லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று 1933-ல் சென்னை திரும்பிய ஆத்தித்தனார் சிங்கப்பூரில் சென்று வக்கீல் தொழில் செய்தால் மதிப்பும், மரியாதையும், நல்ல சம்பாத்தியமும் கிடைக்கும் என்பதால் அங்கு செல்ல முடிவெடுத்தார். அதற்குள் நாடார் மகாஜன சங்கம் நடத்திய மாநாட்டின் வரவேற்பு செயலாளராகப் பொறுப்பேற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதால் மதுரையில் நடந்த அந்த மாநாட்டினை மிகச்சிறப்பாக நடத்திக்கொடுத்தார். மாநாட்டுச்செய்திகளைத் தொகுத்து, ஒரு புத்தகவடிவில் மாநாட்டில் அவர் விநியோகித்ததே பிற்காலத்தில் 'மகாஜனம்'என்ற பத்திரிகையாகி, இன்றளவும் வந்து கொண்டிருக்கிறது என்பதும் அவரின் தமிழ்த் தொண்டுகளுள் ஒன்றுதான்!

    சிங்கப்பூர் சென்று சிறப்பாக வழக்கறிஞர் தொழில் செய்துவந்த ஆதித்தனார் 'ஆதித்தன் அண்ட் கம்பெனி' என்ற பெயரில் வக்கீல்கள் குழுவமைத்துப் பெரும் மதிப்புடன் செயல்பட்டார். அங்கும் அவரின் தமிழார்வம் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கத்தூண்டியது! அங்குள்ள ஆதித்தனாரின் நண்பரான கோ.சாரங்கபாணி என்பவருக்கு,'தமிழ் முரசு'என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பிப்பதற்கு ஆதித்தனார் காரணமாயிருந்தார். அந்தப் பத்திரிகை இன்றளவும் மலேசியாவில் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

    கடல்கடந்தும் அய்யா ஆதித்தனார் ஆரம்பித்த 'தமிழ் முரசில்' 1987 இல் நான் எழுதிய 'ஒற்றைக் கித்தாமரம்' என்ற தொடர்கதை ஓராண்டுகாலமாகப் பிரசுரமாகி நிறைவடைந்தது என்பதை இந்தநேரத்தில் நினைவுகூர்கின்றேன். சிங்கப்பூரில் வெற்றிக்கொடிநாட்டிய ஆதித்தனார் வீட்டில்தான், தமிழ்நாட் டில் இருந்து சென்ற ஈ.வெ.ரா.பெரியார் தங்கியிருந்து, அவரின் தமிழ் கொள்கைகளைப் பாராட்டி, 'தமிழ் சீர்திருத்த இயக்கம்' என்ற அமைப்பை ஆதித்தனாருடன் சேர்ந்து ஆரம்பித்துவைத்தார் என்பது ஆதித்தனாரின் தமிழ் பற்றுக்கு எடுத்துக் காட்டல்லவா? சிங்கப்பூரைவிட்டு இரண்டாம் உலகப்போர் நடந்த 1942-ம் ஆண்டில் தமிழகம் திரும்பிய ஆதித்தனார் அதற்குப்பிறகு இந்திய வைஸ்ராயை விட அதிகமாகப்பொருளீட்டித்தந்த பாரிஸ்டர் தொழிலுக்குப் போகவே இல்லை! காந்தியடிகள் எப்படி 1919-ல் இந்தியா திரும்பியபின் தன் பாரிஸ்டர் தொழிலை மூட்டைகட்டிவைத்துவிட்டு, முழுநேர அரசியலில் தன்னலமின்றித் தன்னை அர்ப்பணித்துக்கொண்டாரோ அவ்வாறே ஆதித்தனாரும் பாரிஸ்டரைத் துறந்து, தமிழைக் கையில் எடுத்துக்கொண்டார். தமிழ் தொண்டாற்றவே பத்திரிகையைக் கையில் எடுத்துக்கொண்டார் ஆதித்தனார்.

    மதுரையில் 'மதுரை முரசு' என்ற பத்திரிகையைத் தொடங்கி, கையினாலே காகிதக்கூழ் தயாரித்து, காகிதம் செய்து, காயவைத்து, கையினால் இயந்திரம் ஓட்டி...காலம் தவறாமல் பத்திரிகையை வெளியிட்டுச் சாதனை படைத்தார். இரண்டாவதாக 'தமிழன்' என்ற பத்திரிகையைத்தான் துவங்கினார். அந்தப்பத்திரிகையின் நோக்கம் எது என்பதை அவரே எழுதியுள்ளார்.

    "அந்நியர்களுக்கு நம் நாட்டில் இருக்கும் ஆதிக்கம் ஒழியவேண்டும் என்பது நமது நோக்கம்"

    துண்டுபட்டுக்கிடக்கும் தமிழ்நாடு ஒன்றுபடவேண்டும் என்பது நமது நோக்கம்."

    தமிழனுக்கு ஆளும் உரிமை வேண்டும். அரசுவேண்டும். நாடு வேண்டும் என்பது நோக்கம்" என்பது போன்றவற்றைத் தன் தமிழ் சார்ந்த, தமிழன் சார்ந்த கோட்பாடாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் "நாம் தமிழர்" இயக்கம். அன்றைக்கு ஆதித்தனார் ஆரம்பித்த இயக்கம் இன்றும் வீறுநடை போடுகிறது என்பதுதான் அய்யாவின் தொலைநோக்கு வெற்றிப்பார்வையாகும்.

    'தமிழன்'தான் 'தந்தி'என மாறியது. அதுவே 'தினத்தந்தி'என்ற இமாலய வடிவெடுத்து இன்று இந்தியாவிலேயே அதிகப் பிரதிகள் விற்கும் நாளேடாக விளங்குகிறது. தந்தை பெரியார் தினத்தந்தி பற்றியும், ஆதித்தனார் பற்றியும் இவ்வாறு சொல்கிறார்...

    "செயற்கரிய செய்த பெரியார், ஆதித்தனார். யாருமே செய்யாத அறிய செயல்களை அவர் செய்திருக்கிறார். இதை நான்தான் நன்கு உணர்கிறேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழனுக்கு என்று ஒரு பத்திரிகை கிடையாது. ஒரு சிலர் ஆரம்பித்த பத்திரிகைகளும் தலைதூக்க முடியாமல் ஒழிந்தன. ஆதித்தனார் ஒரு பத்திரிகை ஆரம்பித்தார்-மளமளவென்று வளர்ந்தது. எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு வளர்ந்தது. நன்றாகவே வேரூன்றிவிட்டது. இது எவ்வளவு பெரிய செயல் என்று எனக்குத்தான் தெரியும். 'நாமும் பத்திரிகை நடத்தலாம்' என்ற துணிவை மற்றவர்களுக்குக் கொடுத்தவர், ஆதித்தனார்தான். ஆகவேதான் ஆதித்தனாரை 'செயற்கரிய செய்த பெரியார்' என்று சொல்லுகிறேன்."

    எத்தனையோ போராட்டங்கள்....எத்தனையோ சிறை வாசங்கள்...அய்யா லட்சிய புருசர் என்பதால் உயரமான அந்த மனிதர் உயர்ந்து கொண்டே வந்தார். மேல்சபை உறுப்பினரானார். சட்டமன்ற உறுப்பினரானார். சட்டப்பேரவைத் தலைவர் ஆனார். ஆதித்தனார் அவைத்தலைவராக ஆன நாள்முதல் தமிழக சட்டசபை மேலும் சிறப்படையத் தொடங்கியது. சட்டசபையில் தமிழ்மணம் கமழ்ந்தது. தமிழன்னை உளங்குளிர்ந்தாள்.சட்டசபை நிகழ்ச்சிகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தலாம் என்று விதி இருந்தது. ஆனால் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. அதை மாற்றி தமிழிலேயே நிகழ்ச்சிகளை நடத்தினார், ஆதித்தனார்.

    சட்டசபையின் வரவு செலவு திட்ட (பட்ஜெட்டு) கூட்டம் ஜூன் 17-ம் நாள் தொடங்கியது. "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்ற திருக்குறளின் முதலடிகளைக் கூறி கூட்ட நிகழ்ச்சிகளை தொடங்கிவைத் தார். சட்டசபைக் கூட்டம் திருக்குறள் பாடலுடன் தொடங்கியது இதுவே முதல் முறையாகும். திருக்குறளுடன் தொடங்கிய இந்தக் கூட்டம், "தமிழ்நாடு வாழ்க" என்ற நாட்டு வாழ்த்துடன் முடிந்தது.

    அவர்காலத்தில்தான் சட்டசபை விதிகள் அவரால் தமிழில் நேர்த்தியாக மொழிபெயர்க்கப்பட்டது! அசல் தமிழர் ஒருவர் "நாம் தமிழர்" என்றதும். "உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு" என்று அறைகூவியதும் தமிழர்களுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் செயல் என்பதை யாரும் மறக்கவும் மாட்டார்கள். மறுக்கவும் மாட்டார்கள். தமிழகத்தின் தென் எல்லையின் தன்னிகரற்ற தலைவரைப் பற்றிச்சொல்வதானால் பக்கங்கள் நீளும்.

    பத்திரிகையுலகின் முன்னோடியான அய்யா அவர்கள் எழுதியுள்ள புத்தகங்களில் "பத்திரிகை எழுத்தாளர் கையேடு" என்ற தன்னிகரற்ற நூல் தமிழுக்கு இலக்கணம் வகுக்கும் தரமான நூலாகும். அரசு போற்றிப்பாதுகாக்க வேண்டிய அறிவுப்பெட்டகம்! பத்திரிகையாளர்கள் கண்டிப்பாகக் கைகளில் வைத்துக்கொண்டிருக்க வேண்டிய கலைச்சுரங்கம்! ஆதித்தனார் எழுதிய 'தமிழ்ப் பேரரசு' தமிழ் தேசியம் விரும்பும் அனைவர் கைகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய நூலாகும். தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் ஆதித்தனாரைப்போல தன்னலமற்று இருப்பார்களேயானால் அவர்களுக்கு என் தலைதாழ்த்தி வணங்குகின்றேன்!

    தொடர்புக்கு: rtspandy@gmail.com

    Next Story
    ×