search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தமிழன்னையின் தவப்புதல்வர் காமராஜர்- முனைவர் கவிஞர் இரவிபாரதி
    X

    தமிழன்னையின் தவப்புதல்வர் காமராஜர்- முனைவர் கவிஞர் இரவிபாரதி

    • பள்ளியிலே படிக்கும் பொழுதே மாணவர்கள் மனதிலே தமிழ் பற்று வேரூன்றி நிற்க வேண்டும் என விரும்பினார் காமராஜர்.
    • தமிழின் மீது காமராஜர் கொண்டிருந்த பற்றினை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர் வாழ்ந்து முடித்த திருமலைபிள்ளை சாலை இல்லத்திற்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம்.

    மொழி தான் ஒரு மனிதனுக்கு முகவரி கொடுக்கிறது. அவன் பேசுகிற மொழியை வைத்து தான் இன்னாரென்று அவனை நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம். தமிழர்களாக பிறந்தவர்களுக்கு எல்லாம் ஒரு தனி பெருமை இருக்கிறது. உலகிலேயே மூத்த மொழி, புகழ் பூத்த தமிழ் மொழியின் புதல்வர்கள் என்பதால் கிடைத்த பெருமை அது. உலகில் ஏறத்தாழ 3 ஆயிரம் மொழிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றிலே முதல் முதலாக தோன்றிய மொழி தமிழ் தான் என்பதனை ஆராய்ச்சியாளர்கள் வலுவான காரணங்களோடு நிரூபித்திருக்கிறார்கள். இதை எண்ணும்போது நாம் தமிழனாக பிறந்ததற்காக என்ன பாக்கியம் செய்தோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    தொன்மையும், இனிமையும், எளிமையும், இளமையும், வளமையும், தாய்மையும், தூய்மையும், செம்மையும், தனித்து இயங்கக்கூடிய திண்மையும் நிறைந்தது நமது தமிழ் மொழி மட்டுமே. இன்னும் பல சிறப்பு இயல்புகளை கொண்டு உயிர்ப்போடு உலா வருவதும் நமது தமிழ் மொழி மட்டுமே.

    வேறு எந்த மொழிக்கும் இந்த பெருமைகள் எல்லாம் முழுமையாக வாய்க்கப் பெறவில்லை. அதனால் தான் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தேவையான அத்தனை பண்புகளும் உள்ளது தமிழ்மொழி என்று மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

    காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடம் தமிழின் அருமை பெருமைகளை எல்லாம் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது எடுத்து சொல்லி கிடைத்திட்ட பெரும் பேறு இது.

    உலகுக்கு இதனை அறிவிக்கும் வகையிலே உலக அறிஞர்களை எல்லாம் வரவழைத்து, கோவையிலே செம்மொழி மாநாட்டினை முதல்வராக இருந்து வெகு சிறப்பாக நடத்திக் காட்டினார் கலைஞர் அவர்கள்.

    மத்திய அரசிலே உள்ளவர்கள் எல்லோருமே, நமது பாரத பிரதமர் மோடி உட்பட எல்லோருமே தமிழின் பெருமை பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவர்களின் நெஞ்சிலே நிரம்பி இருப்பது இந்திமொழி தான் என்பது கண்கூடாகத் தெரிகிறது. அதற்காக மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் இந்தி மொழியை அவர்கள் முன்னிலைப்படுத்துகிறார்கள். நம் மீது திணிக்க பார்க்கிறார்கள்.

    முத்தமிழ் அறிஞரின் புதல்வர் இங்கே முதல்வராய் இருப்பதால் மத்திய அரசின் முயற்சிகள் எதுவுமே இங்கே எடுபடவில்லை என்பதே உண்மையாகும்.

    தமிழகத்தை முதல்வராக இருந்து ஆட்சி செய்த பெருமக்கள் அனைவருமே தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார்கள். இதிலே மாற்று கருத்து இல்லை.

    நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே அதாவது 1946-லேயே அப்போது கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் செட்டியாரின் தலைமையிலே தான் தமிழ் வளர்ச்சி கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் தமிழ் வளர்ச்சி திருநாள் கொண்டாடப்பட்டது. அப்போது தமிழறிஞர்கள் எல்லோருமே கவுரவிக்கப்பட்டார்கள்.

    அப்போதுதான் ரூ.14 லட்சம் செலவிலே தமிழ் கலைக்களஞ்சியம் எனும் முதல் தொகுப்பு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முயற்சியால் வெளியிடப்பட்டது. இது தொடர்ந்து பத்து தொகுதிகளாக வெளிவந்தது. குழந்தைகள் கலைக்களஞ்சியமும் அப்போதுதான் வெளியிடப்பட்டது. ஆனால் இன்னும் இதற்கு மறுப்பதிப்பு வெளியிடப்படவில்லை என்பது வருத்தமான செய்தியாகும்.

    இந்திய நாடு சுதந்திரம் பெற்றதற்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி செட்டியார் அவர்கள் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை 1948, செப்டம்பர் 11-ம் நாள் எட்டயபுரத்தில் பாரதி பிறந்த மண்ணிலே மிகச் சிறப்பாக கொண்டாடினார்.

    இந்த விழாவிலேயே தான் தமிழக அரசவைக் கவிஞர் பதவி அறிவிக்கப்பட்டு நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு அது வழங்கப்பட்டு அவர் கவுரவிக்கப்பட்டார். இன்று தலைமைச் செயலகத்தின் ஒரு பிரிவுக்கு நாமக்கல் கவிஞர் மாளிகை எனும் பெயர் சூட்டப்பட்டு பிரம்மாண்டமான செயலகமாக அது செயல்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.

    அப்போதுதான் (1949) முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி செட்டியார் பாரதியார் கவிதைகளின் உரிமை பெற்றிருந்த ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியாரிடம் பேசி, பாரதியார் கவிதைகள் அனைத்தையும் வாங்கி, பாரதியார் குடும்பத்திற்கு ஒரு தொகை கொடுக்கப்பட்டு, அதனை நாட்டுடைமை ஆக்கினார். அதற்கு பிறகு தான் பாரதியார் கவிதைகள் திரைப்படங்களிலும் மேடைகளிலும் சுதந்திரமாக உலா வந்தன.

    இந்த வரலாறுகளை எல்லாம் நன்கு உணர்ந்த காமராஜர் தனது ஆட்சிக் காலத்தில் எப்படி எல்லாம் தமிழுக்கு பெருமை சேர்ப்பது என்று சிந்தித்துக்கொண்டே வந்து படிப்படியாக அதனை எப்படி சிறப்பாக அமல்படுத்தினார் என்பதுதான் சுவையான வரலாறு.

    ஆரம்ப காலத்தில் இருந்தே நாள், நட்சத்திரம், தேதி இவைகளை எல்லாம் காமராஜர் பார்ப்பதில்லை. செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்ய வேண்டும் என்பதில் தான் குறியாக இருப்பார். ஆனால் தான் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு மட்டும் தமிழ் புத்தாண்டினை தேர்ந்தெடுத்தார் என்ற செய்தி நம்மை வியக்க வைக்கிறது. தமிழ் மீது இருந்த பற்று காரணமாகத்தான் இந்த நன்நாளை அவர் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தோடு காமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்றதையும் அன்றைய தினம் தமிழ் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    அடிமட்ட தொண்டனாக இருந்த ஒருவர், தனது கடுமையான உழைப்பினால் படிப்படியாக உயர்ந்து, அர்ப்பணிப்பு நிறைந்த தியாகத்தால் சிறந்து, நேர்மையிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்து, நாட்டினையே ஆளக்கூடிய முதல்வராக வருகிறார் என்றால் அது அனைத்து தமிழ் மக்களுக்கும் பெருமை அல்லவா? இதை எல்லாம் சீர்தூக்கி பார்த்து தான் தந்தை பெரியார், பச்சை தமிழர் காமராஜர் முதல்வராகியிருக்கிறார் என்று பூரிப்போடு பாராட்டி மகிழ்ந்தார்.

    ஒரு மாணாக்கரின் அடிப்படைக் கல்வி அவனது தாய் மொழியிலேயே தான் இருக்க வேண்டும் என்பதே காந்தியின் கருத்தாகும். பல்வேறு மொழி அறிஞர்களும் இக்கருத்தையே வலியுறுத்தி வந்துள்ளனர். காமராஜர் ஆட்சி காலத்தில் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியான தமிழிலே தான் அனைத்தும் பயிற்றுவிக்கப்பட்டது. 6-ம் வகுப்பில் இருந்து தான் ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை ஏ,பி,சி,டி என்பதே எந்த மாணவர்களுக்கும் தெரியாது என்ற நிலைதான் இருந்து வந்தது.

    ஆனால் இப்போதெல்லாம் எல்.கே.ஜி.யிலேயே இன்னும் சொல்லப்போனால் அதற்கு முன்பாகவே ஏ,பி,சி,டி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் நம்மை விட்டு அகன்றாலும் ஆங்கில மோகம் மட்டும் நம்மை விட்டு அகலமாட்டேன் என்கிறது. தங்கள் பிள்ளைகள் மம்மி, டாடி என்று அழைப்பதிலேயே பெற்றோர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    தமிழின் மீது காமராஜர் கொண்டிருந்த பற்றினை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர் வாழ்ந்து முடித்த திருமலைபிள்ளை சாலை இல்லத்திற்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம். அவர் படித்து மகிழ்ந்த கம்பராமாயணம், பாரதியார் கவிதைகள், திருக்குறள், சங்க இலக்கிய நூல்கள் எல்லாம் அங்கே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். ஆனால் இதையெல்லாம் ஒருபோதும் அவர் வெளிக்காட்டியதே இல்லை. தேவைப்படும்போது, பொதுக்கூட்டங்களில் பேசும்போது பாரதியார், கவிமணி, நாமக்கல் கவிஞர் போன்ற மூத்த கவிஞர்களின் கவிதைகளை உதாரணம் காட்டி பேசுவார். அவ்வளவுதான்.

    பள்ளியிலே படிக்கும் பொழுதே மாணவர்கள் மனதிலே தமிழ் பற்று வேரூன்றி நிற்க வேண்டும் என விரும்பினார் காமராஜர். கல்லூரியிலும் தமிழே பயிற்று மொழியாக இருக்கும்படி உத்தரவு பிறப்பித்து அதனை அமல்படுத்தினார்.

    சங்க இலக்கிய நூல்களில் திருக்குறளின் மீது காமராஜருக்கு தணியாத தாகம் இருந்தது. ஒன்றே முக்கால் அடியில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பெருமை உடைய திருக்குறளை எல்லோரும் கட்டாயம் படித்தாக வேண்டும் என்று பள்ளிகளில் திருக்குறளை கட்டாய பாடமாக்கினார்.

    தமிழ் இலக்கியங்களை கற்றுக் கொடுக்கும் தமிழ் கல்லூரிகள் காமராஜர் ஆட்சியில் அமருவதற்கு முன்பே இயங்கி வந்தன. கரந்தை தமிழ் சங்க கல்லூரியும், காரைக்குடியில் ராமசாமி தமிழ் கல்லூரியும், தருமபுர ஆதீனம் தமிழ் கல்லூரியும் திருப்பத்தூர், திருவை யாறு, பேரூர் மற்றும் மயிலம் போன்ற இன்னும் பல ஊர்களிலும் தமிழ் கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டன. இக்கல்லூரியில் பயின்றவர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். காமராஜர் ஆட்சியில் இவை அனைத்தும் நடந்தன. அவர்கள் வித்துவான் என்றும் அழைக்கப்பட்டனர். வித்துவான் என்பது வடமொழியாக இருப்பதால் புலவர் என்று மாற்றப்பட்டது கலைஞர் ஆட்சியில் தான்.

    இளங்கலை பட்டம் பெற்று ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு சமமாக புலவர்கள் கருதப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்ததோடு, அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் தலைமை ஆசிரியராகவும் ஆகலாம் என்ற உத்தரவையும் காமராஜர் தான் பிறப்பித்தார். இந்த உத்தரவு தமிழ் அறிஞர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

    பல ஆங்கில சொற்கள் நமது தமிழ் மொழியோடு சேர்ந்து புழக்கத்திலேயே வந்துவிட்டது. அதனை தவிர்க்க முடியவில்லை. தலைமை ஆசிரியரை எல்லோரும் ஹெட் மாஸ்டர் என்றே அழைத்தனர். உடற்பயிற்சி ஆசிரியரை எல்லோரும் டிரில் மாஸ்டர் என்றே அழைத்தனர். ஓவிய ஆசிரியரை டிராயிங் மாஸ்டர் என்றும், தமிழ் ஆசிரியரை தமிழ் பண்டிட் என்றும், இந்தி ஆசிரியரை இந்தி பண்டிட் என்றும் அழைக்கும் பழக்கமே மேலோங்கி இருந்தது.

    இதேபோன்று தான் பவுதீகத்தை பிசிக்ஸ் என்றும், விஞ்ஞான பாடத்தை சயின்ஸ் என்றும், சரித்திர பாடத்தை ஹிஸ்டரி என்றெல்லாம் அழைத்தது மட்டுமல்ல, பாடப் புத்தகத்தில் பல சொற்களுக்கு சரியான தமிழாக்கம் இல்லாமலும் இருந்தது. இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்ற சிந்தனை அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்தபோதே வந்துவிட்டது.

    அதையொட்டிதான் தமிழ் வளர்ச்சி கழகம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு அதன் மூலம் தமிழ் கலைக்களஞ்சியம் என்ற அகராதியின் முதல் பதிப்பு 1957-ல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து காமராஜர் ஆட்சி காலம் வரை, அதாவது 1963 வரை 9 தொகுதிகள் தமிழ் கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.

    இந்த தமிழ் கலைக்களஞ்சியத்திலே உள்ள சிறப்பு என்னவென்றால், புழக்கத்தில் உள்ள ஒவ்வொரு ஆங்கில சொல்லுக்கும் அர்த்தமும் சொல்லப்பட்டு அதற்கு சமமான தமிழ் சொல்லும் விளக்கமும் அதிலே இடம் பெற்றிருக்கும் அளவுக்கு இந்த அகராதி தயாரிக்கப்பட்டது. இந்த அகராதி வெளிவந்ததற்கு பின்னாலே தான் பாட புத்தகங்களில் பொருத்தமான சொற்கள் பயன்படுத்தப்பட்டு அவை புழக்கத்தில் கொண்டுவரப்பட்டன.

    உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டும் என்றால் கணிதத்திலே பித்தாகரஸ் விதி என்று ஒன்று இருந்தது. அதனை பித்தாகரஸ் தேற்றம் என்றும் அதிலே வருகிற ஈக்வேஷன்களை சமன்பாடுகள் என்றும் மாற்றி தமிழ் சொற்றொடர்களை புழக்கத்தில் கொண்டு வந்தனர். இப்படி ஒவ்வொரு பாடத்திலும் செய்தனர்.

    ஆசிரியர்களில் தமிழ் ஆசிரியரை மட்டுமே தமிழ் ஐயா என்று அழைத்தனர். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் அவர்கள் கற்பிக்கும் துறையை சொல்லி மேக்ஸ் டீச்சர் என்றும், ஹிஸ்டரி டீச்சர் என்றும் அழைக்கப்பட்டனர். டீச்சர் என்ற ஆங்கில சொல் நம்மோடு அந்த காலத்தில் இருந்து ஒன்றிப்போய்விட்டது. இன்றைக்கும் பெண் ஆசிரியர்களை டீச்சர் என்று அழைக்கும் வழக்கம் தானே இருந்து வருகிறது.

    கிளாசில் அட்டன்டன்ஸ் எடுத்தாச்சா என்று தான் கேட்பார்கள். மாணவர்களும் ஆஜர் என்று பதில் உரைப்பார்கள். ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாதல்லவா.

    காமராஜர் ஆட்சி காலத்தில் படிப்படியாக அட்டன்டன்ஸ் என்பது வருகை பதிவேடு ஆகவும் ஆஜர் என்று சொல்வதற்கு பதிலாக உள்ளேன் ஐயா என்றும் சொல்லிப் பழக்கப்படுத்தப்பட்டது.

    காமராஜர் ஆட்சி காலத்தில் இந்த மாற்றங்கள் ஆரம்பமாகி நடக்கத் தொடங்கின. ஆனால் இவற்றையெல்லாம் கலந்து பேசி நடைமுறைப்படுத்துகிற பணியினை தமிழறிஞர்களிடமே விட்டுவிட்டார் காமராஜர். அவர்களின் ஆலோசனைப்படியே படிப்படியாக தமிழ் சொற்கள் புழக்கத்திற்கு வந்தன.

    தமிழ் வளர்ச்சியில் காமராஜர் எத்தனை அக்கறையும் ஆர்வமும் காட்டினார் என்பதற்காக தான் இவைகளையெல்லாம் இங்கே குறிப்பிட்டுள்ளேன். இன்னும் காமராஜர் தமிழ் வளர்ச்சிக்கு என்னென்ன செய்தார் என்பதை அடுத்த வாரத்தில் பார்ப்போம்.

    Next Story
    ×