search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கடன் தீரும் காலம் எது?
    X

    கடன் தீரும் காலம் எது?

    • ஜோதிடத்தில் 6-ம் பாவகம் எனப்படும் ருண, ரோக, சத்ரு ஸ்தானம் செய்யும் வேலை அளப்பரியது.
    • பிறவிக்கடன்பூமியில் ஜனனமாகும் அனைத்து உயிர்களும் பிறக்கும் போது கர்ம பந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்து வருகிறது.

    மனித வாழ்வில் அன்றாடம் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை சுப நிகழ்வு, அசுப நிகழ்வு என்று இரண்டாக பிரிக்கலாம். ஒரு சிலருக்கு சுப நிகழ்வு தொடரும். ஒரு சிலருக்கு அசுப நிகழ்வு தொடரும். இன்னும் சில பிரிவினருக்கு சுபமும் அசுபமும் பிணைந்த பிணைப்பாக வாழ்க்கை இருக்கும். சுப நிகழ்வுகள் ஏற்படும் போது மனம் இன்பமாக இருக்கும். அசுப நிகழ்வுகள் மனவருத்தத்தை அதிகரிக்கும்.

    சுபத்தை மட்டும் அனுபவிக்க விரும்பும் மனம் அசுபத்தை ஏற்காது, இது மனித இயல்பு. சிலருடைய வாழ்க்கை நடைமுறையை பார்க்கும் போது அசுப வலிமை பெற்ற கிரகங்கள் ஜாதக கட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து விட்டதோ? என்று எல்லோரையும் வியக்க வைக்கும். இன்னும் சிலரது வாழ்க்கையை பார்க்கும் போது சுப நிகழ்வுகளே கேள்விக்குறியாகும். மிகக் குறிப்பாக கடன் என்ற ஒரு நிகழ்வு மனித குலத்தையே நடுநடுங்க செய்கிறது. ஒரு சிலர் அரசாங்கத்திற்கே கடன் இருக்கிறது எனக்கு இருந்தால் என்ன என்று யதார்த்தமாக வாழ்க்கையை நகட்டுகிறார்கள்.

    ஜோதிடத்தில் 6-ம் பாவகம் எனப்படும் ருண, ரோக, சத்ரு ஸ்தானம் செய்யும் வேலை அளப்பரியது. ருணம் என்றால கடன், ரோகம் என்றால் நோய், சத்ரு என்றால் எதிரி. கால பகவான் எழுதி வரும் காலக் கணக்கில் ருண, ரோக, சத்ரு ஸ்தான பாவகத்தில் இருப்பு பூஜ்யமாகும் வரை பிறவி தொடரும். கடன் என்றால் பணத்தால் வரும் கடன் என்று பலர் தவறாக முடிவு செய்கிறார்கள். மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் இரண்டு விதமான கடன்கள் உண்டு.

    அவை பிறவிக் கடன், பொருள் கடன்

    பிறவிக்கடன்பூமியில் ஜனனமாகும் அனைத்து உயிர்களும் பிறக்கும் போது கர்ம பந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்து வருகிறது. அதே போல் பூமியை விட்டுச் செல்லும் போதும் கர்ம பந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்துச் செல்ல முடியும். பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் உள்ள இடைபட்ட காலத்தில் மட்டுமே கர்மவினையை கலைந்து கர்ம பந்தத்தை அதிகரிக்கச் செய்ய முடியும்.

    ஒரு மனிதனுக்கு வினை அதிகரித்தாலும் குறைந்தாலும் தன்னுடைய கர்மப் பதிவில் தொடர்புடைய உயிர், பொருள் காரகத்துவங்களிடம் மட்டுமே வாழ்நாள் இருக்கும். பூமியில் கோடிக்கணக்கானவர்கள் வாழ்ந்தாலும் ஒருவருடைய கர்மப் பதிவில் சில குறிப்பிட்ட உறவுகள், நட்புகள் பழக்கத்தில் இருக்கும். மனிதர்களை சுற்றி உள்ள பொருள் காரகத்துவங்களை தேர்ந்தெடுத்து அனுபவிக்கும் உரிமையை தந்த பிரபஞ்சம் ஏன் உயிர் காரகத்துவங்களான தாய், தந்தை,சகோதரர், சகோதரி, மனைவி,கணவன், பிள்ளைகளை, தேர்ந்தெடுக்கும் உரிமையை யாருக்கும் வழங்கவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் கர்மாவோடு தொடர்புடைய உறவுகளால் ஒன்றை நாம் பெற்றுக் கொள்கிறோம், அல்லது இழக்கிறோம். இந்த கர்மாவின் தொடர்ச்சிியில் சில உறவுகள் கர்ம பந்தமாகிறது. பல உறவுகள் கர்ம வினையாகிறது. அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்.சிலருக்கு நல்லது செய்கிறோம்.பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம்.இந்த கொடுக்கல் வாங்கலே 'ருண பந்தம்' எனப்படுகிறது.

    ருணம் என்றால் கடன். பொருள் கடன் மட்டுமல்ல. ஒருவரிடம் இருந்து பெற்ற அன்பும் உதவியும் கூட கடன் தான். ஒருவரிடம் பெற்ற உதவி மற்றும் அன்பிற்கு பிரதி உபகாரம் செய்யாமல் இருந்தால் ருண பந்தம் கர்ம வினையாக மாறி பிறவி தொடர்ந்து கொண்டே இருக்கும்.மிகச் சுருக்கமாக பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறும் போது பிறவிக் கடன் தீராது. பிறவிக் கடனை எளிதில் தீர்க்க முடியாது. மீண்டும், மீண்டும் அவர்களுடன் பிறந்து அன்பால் உடல் உழைப்பால் பிரதி உபகாரம் செய்தால் மட்டுமே பிறவிக் கடனை தீர்க்க முடியும். ஒரு மனிதன் உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்களுக்கு கூட பிறவிக் கடனை திரும்பச் செலுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கப் பெறலாம். ஆனால் நம்மை பெற்ற, நமக்கு உடலும், உயிரும் கொடுத்த தாய், தந்தைக்கு செலுத்த வேண்டிய பெற்ற கடனை யாராலும் எளிதில் தீர்க்க முடியாது. லக்னம், ஐந்தாமிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம், ஒன்பதாமிடம் எனும் பாக்கிய ஸ்தானம் வலிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். பிறவிக் கடன் முற்றிலும் சரி செய்யப்பட்டு விட்டால் மறுபிறவி எடுக்க முடியாது. மனிதர்களாய் இந்த பிறவியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரும் தீர்க்க முடியாத பிறவிக் கடனில் நீந்துபவர்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் போது போதிய வசதி வாய்ப்பு இருந்தும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யத் தவறியவர்கள் மறுபிறவியில் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை இன்றி வறுமையில் வாழ்வார்கள். பெற்றோர்களை தன் சுய நலத்திற்காக தனக்கு அடிமையாக நடத்துபவர்கள் மறு பிறவியில் அடிமைத் தொழில் செய்து கஷ்ட ஜீவனம் நடத்த வேண்டி வரும். பெற்றோர்களை சுமையாக கருதி முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்கள் மறு பிறவியில் வீடு, வாசலை இழந்து தவிப்பார்கள்.பெற்றோர்களை மதிக்காமல் குல மரபை கடைபிடிக்கத் தவறியவர்கள் மறுபிறவியில் பிறந்த குலம், குலதெய்வம் தெரியாமல் அவதிப்படுவார்கள்.

    ஜனன கால ஜாதகத்தில் ஆறாமிடம் மற்றும் ஒன்பதாமிடத்திற்கு சம்பந்தம் இருப்பவர்கள் தீராத, தீர்க்க முடியாத பிறவிக் கடனை அதிகம் சுமக்கிறார்கள். உயிருடன் வாழும் பெற்றோர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து வாழ வேண்டும். இறந்த பிறகு எத்தனை முறை ஊரை கூட்டி திதி கொடுத்து விருந்து போட்டு தங்கள் பாசத்தை வெளிக்காட்டினாலும் பயன் இல்லை. இந்த வகை பித்ரு தோஷம் எவ்வளவு திதி, தர்பணம் கொடுத்தாலும் போகாது என சாஸ்திரம் கூறுகிறது.

    பொருள் கடன்

    சுய ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 3, 6, 8, 12 பாவகங்கள் எனப்படும் மறைவு ஸ்தானங்கள் கர்ம வினைத் தொடர்பு ஏற்படுத்தும். மனிதர்கள் இந்த பிறவியில் வாழும் காலத்தில் திருமணம் செய்ய, வீடு கட்ட, கல்வி செலவிற்காக கடன் வாங்கிவிட்டு, திரும்பி கட்டமுடியாமல் கஷ்டப்படுவது, தொழில், வியாபாரம் செய்ய கடன் வாங்கி தொழில் செய்து, கடன்பட்டு நஷ்டம் அடைந்தவர்கள், வேலை இழப்பு,வேலை இல்லாமை, மருந்துசெலவு போன்றவைகளால் கடன் வாங்கி, திரும்ப செலுத்த முடியாமல் கஷ்டப்படுவதும் பொருள் கடனில் அடங்கும். பொருள்கடன் இருவகைப்படும்.

    வறுமை கடன்

    அன்றாட தேவையான ஜீவனத்திற்கு, உணவிற்கு, ஆடம்பரத் தேவைக்கு கடன் பெற்றால் வறுமைக் கடன். இவர்கள் ஜாதகத்தில் தனஸ்தானம், தனகாரகன் குரு வலிமை குறைந்து பாவ தன்மையாக இருக்கும். இவர்களுக்கு திறமை குறைவால் வருமானம் குறைந்து வறுமை கடன் ஏற்படும். தன்னைப் பெற்ற தாய், தந்தை, கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தவறியவர்களுக்கும், கலப்படமான உணவுப் பண்டங்களை விற்பவர்களுக்கும், வட்டித் தொழில் செய்பவர்களுக்கும் மறுபிறவியில் வறுமைக் கடன் உண்டாகும் என சாஸ்திரங்கள் கூறுகிறது.

    வளர்ச்சி கடன்

    தொழிலுக்காக, தொழில் வளர்ச்சிிக்காக கடன் பெறுவது இதில் அடங்கும். ஆறாம் அதிபதி வலுத்து ஆறாமிடம் சுபத்தன்மை பெற்றால் கடன்களால் ஆதாயம் உண்டு. கடன் பெறும் வாய்ப்பு கிடைக்கும். அதைப் பெற்று வளர்ச்சிி அடையலாம். 6ம்மிடம், 6ம் அதிபதி வலுத்து சுபத் தன்மை பெற்று இருக்க ஜாதகன் கடன் அதிகம் வைத்திருப்பவன் என்று பொருள். ஆனால் கடன்காரன் என்று பொருள் இல்லை.ஆறாம் பாவகம் எனும் பொருள் கடன் இருந்தால் மட்டுமே தன் முயற்சியால் (3-ம் பாவகம்) தொழில் செய்து (10-ம் பாவகம்) லாபம் (11-ம் பாவகம்) எனும் இன்பத்தை அனுபவிக்க முடியும். இதையே வேறு விதமாக சொன்னால் பொருள் கடன் மிகுதியாக இருக்கும் ஒருவரே பொருளீட்ட,உழைக்க முயற்சி செய்து லாபம் ஈட்டுவார். ஒருவருக்கு எல்லாவிதமான வாழ்வியல் வெற்றியைப் பெற்றுத் தருவது ஆறாம் பாவகமே.

    கடன் ஏற்படும் காலம் ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் உள்ள செவ்வாய், கேது இருக்கும் இடத்திற்கு, கோட்சார சனி வரும் காலங்களில், ஜாதகரை கடன், வாங்க வைத்து, கடன் பிரச்சினைகளில் சிக்க வைப்பார். மேலும் அசிங்கம் அவமானம் எதிரிதொல்லை, விபத்து, உயிர் கண்டம் மருத்துவ செலவுகள், வம்பு, வழக்கு உருவாகும். குடும்பத்தினர், நண்பர்கள், சகோதர, சகோதரிகள், உறவினர்கள் ஜாதகரை வெறுப்பார்கள். இதனால் ஜாதகர் தனிமை படுத்தப்படுவார். மேலும் நஷ்டம், பணத்தடை , தொழில் வேலை தடை, வெறுப்புகள் அதிகரிக்கும். ஜாதகருக்கு இடம் மாற்றம் ஏற்பட்டு, ஊர் மாற்றம், வெளிமாநிலம், வெளிநாடு செல்ல நேரும். பலரை தனிமை சிறையில் வைக்கும்.

    இந்த காலகட்டத்தில் ராகு,கேது, சனி, செவ்வாய் தசைகள், 6, 8, 12 மற்றும் அதன் அதிபதிகள் தொடர்பு பெற்ற தசைபுத்திகள் நடந்தால் கடனால் சிரமம் உண்டாகும்.ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் லக்னாதிபதி,ராசி, ராசிஅதிபதி,தன, லாப ஸ்தானம் சுபத்தன்மையுடன் இருக்க வேண்டும். மேலும் லக்னாதிபதி, ராசிஅதிபதி, தன, லாப ஸ்தான அதிபதி ஆட்சி, உச்சிம், நட்பு, கேந்திரம் கோணத்தில் பலம் பெற்று இருந்தால், அந்த ஜாதகர் எவ்வளவு பெரிய கஷ்டம் பிரச்சினைகளை சந்தித்தாலும், எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் இறுதியில் வெற்றி பெறுவார். இவர்களுக்கு பெரிய சிக்கல் கூட சிறிதாக தெரியும். இதற்கு மாறாக லக்னமும் பலம் இழந்து, லக்னாதிபதி, ராசி அதிபதி, தன, லாப ஸ்தானம் பலம் குறைந்து இருந்தால், இவர்கள் வாழ்நாள் முழுவதும் சிக்கல், பிரச்சினை, கஷ்டங்களை அனுபவிப்பர். தினம் தினம் இவர்கள் வாழ்க்கை போராட்டமாகவே இருக்கும், இவர்களுக்கு சின்ன விசயம் கூட பெரிதாக தெரியும், சின்ன விசயத்தை கூட போராடித்தான் பெற வேண்டியது வரும்.

    கடன் தீரும் காலம் எது?

    ஒருவரின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்களை ஜாதகத்தையும், தசா புத்தியையையும் வைத்துதான் தெரிந்து கொள்ள முடியும். மேலும் ஒரு சம்பவம் எப்போது நடைபெறும் எப்படி நடைபெறும் என்பதை கோட்சார கிரகங்களே தீர்மானிக்கிறது. ஒருவரின் சுய ஜாதகத்தில் 2, 11-ம் அதிபதி 6-ம் அதிபதியை விட.வலுத்து இருந்தால் கடன் கண்டிப்பாக தீரும். 6-ம் அதிபதி தசை புத்தியில், 11-ம் அதிபதி அந்தரத்தில் கடன் தீரும்.கோட்சாரத்தில் அசுப கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, கேதுக்கள் 6-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் காலங்களில் கடன் நிவர்த்தியாகும். பரிகாரம் பிறவிக் கடனை குறைக்க முயல்பவர்களுக்கு பொருள் கடன் இருக்காது. எனவே பெற்றோர்களையும் பெரியோர்களையும் மதிக்க வேண்டும். கோட்சா ரத்தில் ராசிக்கு ஒன்பதாமிடத்துடன் கோட்சார குரு, சனி சம்பந்தம் பெறும் காலங்களில் ஆதரவில்லாத வயோதிக தம்பதிகளின் தேவையறிந்து உதவி செய்ய கெடு பலன்கள் குறையத்துவங்கும். தீராத தீர்க்க முடியாத பிறவிக்கடனில் அல்லல்படுபவர்கள் சனிக்கிழமை திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து சித்தர்களையும், அண்ணாமலையாரையும் வணங்க வேண்டும். மீள முடியாத பொருள் கடனில் தவிப்பவர்கள் செவ்வாய் கிழமை கிரிவலம் வந்து அணணாமலையாரை தரிசிக்க வேண்டும்.

    Next Story
    ×