என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

கர்ப்ப கால வைத்திய முறைகள்
- உணவுகளை குறைவாகவும் குறைந்த இடைவேளைகளிலும் வழங்க வேண்டும்.
- ஏலாதி சூரணம், அஷ்ட சூரணம் போன்ற சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.
பெண்கள் கர்ப்பமுற்ற காலம் முதல் பிரசவ காலம் வரை பல்வேறுவிதமான மாற்றங்களை உடல் அளவிலும் மனதளவிலும் எதிர்கொள்கின்றனர். அதிக வாந்தி, தலைசுற்றல், நீர்சுருக்கு, மலக்கட்டு, கால்வீக்கம், அதிகம் உணர்ச்சிவசப்படல் போன்ற பல்வேறு குறிகுணங்கள் ஏற்படுகின்றன. ஆனால் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஒரே மாதிரியான குறிகுணங்கள் ஏற்படுவதில்லை. இதுபோன்ற சவுகரியங்களை தடுக்க தமிழ் மருத்துவம் பெரிதும் துணை செய்யும். முடிந்த வரை கர்ப்ப காலத்தில் நம் முன்னோர்கள் கூறிய உணவுமுறை மற்றும் மருத்துவ முறையை பின்பற்றி ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பது மிகவும் நல்லது.
பொதுவாக கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் 'மசக்கை' என்னும் பிரச்சினையால் அதிகப்படியான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அடிக்கடி குமட்டல், வாந்தி, தலைவலி போன்றவை ஏற்படும். எனவே அதிக சோர்வாக காணப்படுவர். இது போன்ற நிலையில் மாதுளை பழச்சாற்றுடன் சிறிது தேன் மற்றும் கற்கண்டு சேர்த்து பருகி வர குமட்டல், வாந்தி படிப்படியாக குறையும்.
சித்த மருத்துவத்தில் உள்ள மாதுளை மணப்பாகு, நன்னாரி மணப்பாகு, வெட்டிவேர் மணப்பாகு, எலுமிச்சை மணப்பாகு போன்ற மருந்துகள் வாந்தி ஏற்படுவதை குறைப்பதுடன் உடம்பில் நீர்ச்சத்து குறையாமலும் பார்த்துக்கொள்ளும்.
பொதுவாக கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் இட்லி, இடியாப்பம், இருமுறை வடித்த சோறு போன்றவற்றை உண்ணலாம். உணவுகளை குறைவாகவும் குறைந்த இடைவேளைகளிலும் வழங்க வேண்டும். அதிகமான புரதங்கள், கொழுப்பு பொருட்கள், எண்ணையில் வறுத்த பொருள்கள் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
எளிதில் சீரணமாகாதவைகளையும், மாந்தம், கரப்பான், வெப்பம் இவைகளை உண்டாக்கும் உணவுகளையும், அதிக உப்பு, காரம் சேர்ந்த பொருள்களையும் நீக்க வேண்டும்.
போதுமான அளவு புரோட்டீன், கொழுப்பு, கார்போஹைட்ரேட், உயிர்சத்துகள், தாது உப்புகள் நிறைந்த பசும்பால், நெய், முட்டை, கீரை, பழ வகைகள் சேர்த்துக்கொள்ளலாம்.
அசீரணம் ஏற்படும் பட்சத்தில் ஏலாதி சூரணம், அஷ்ட சூரணம் போன்ற சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். முதல் மூன்று மாதங்கள் ஏற்படும் உடல் உபாதைகளை தடுக்க சித்த மருத்துவ "பரராசசேகரம்" என்னும் நூல் தாமரை பூவின் காய், சந்தனம், அதிமதுரம், இஞ்சி, அல்லி, சீந்தில்தண்டு போன்ற மூலிகைகளை தேவைகேற்ப எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறது. முதல் மூன்று மாதங்களில் சிலருக்கு உதிரபோக்கு ஏற்படும். அந்நிலையில் அதிமதுரம், சீரகம் சேர்த்து நீரிலிட்டு 8ல் ஒரு பாகமாக சுண்டி வரும்வரை கொதிக்க வைத்து 3 அல்லது 4 நாட்கள் கொடுக்க உதிரபோக்கு நிற்கும்.
கறிவேப்பிலை பொடியை தொடர்ந்து முதல் மூன்று மாதங்கள் உணவில் சேர்த்து வர இரும்புச்சத்து குறைவு ஏற்படுவதை தடுக்கலாம் இரும்பு சத்து குறைவு உள்ள பெண்கள் கறிவேப்பிலை ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, கற்கண்டு, சுக்கு சம அளவு எடுத்து கறிவேப்பிலை, முருங்கை ஈர்க்குடன் சேர்த்து, தண்ணீர் 400 மிலி விட்டு கொதிக்க வைத்து 100 மிலி ஆனவுடன் வடிகட்டி மாலை வேளைகளில் குடித்து வர இரத்த அளவு அதிகரிக்கும். இரத்த சோகையினால் ஏற்படும் உடல்சோர்வு, படபடப்பு, மூச்சு வாங்குதல் போன்ற குறிகுணங்களும் குறையும்.
இயற்கை மருத்துவர் நந்தினி
நெல்லிக்காய் லேகியம், அன்னபேதி செந்தூரம் போன்ற மருந்துகளை சித்த மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ப கருவுற்ற காலங்களில் எடுத்து வரலாம். ரத்த சோகையை சரிசெய்வதுடன் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் இது துணை செய்யும்.
கருவுற்ற நடு மூன்று மாதங்கள் பெரிதளவில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். உணவுடன் அதிக நார்ச்சத்துகள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழ வகைகளை சேர்த்து கொள்வதன் மூலமும், இரவு உறங்கும் முன் அதிக நீர் அருந்துவதன் மூலம் மலச்சிக்கலை தவிர்க்கலாம்.
மலச்சிக்கலை சரிசெய்ய வீட்டிலேயே நெல்லிக்காய் வற்றல் கைப்பிடி அளவு எடுத்து, அதில் 200 மிலி நீர் சேர்த்து கொதிக்க வைத்து, அது 50 மிலி ஆனவுடன் சம அளவு பசும்பால் சேர்த்துக் சாப்பிட்டு வரலாம். மேலும் மலக்குடார மெழுகு, குல்கந்து போன்ற மருந்துகளையும் தேவைக்கேற்ப மருத்துவர் அறிவுரைப்படி எடுத்து வரலாம்.
சில பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் உடல் மடிப்பு பகுதிகளில் தோல் நிறம் கருமையடையலாம். அந்த பகுதிகளில் பிண்டத்தைலம் தடவி, நலங்கு மா தேய்த்து குளித்து வர சிறிது நிறமாற்றம் ஏற்படும்.
கருவுற்ற கடைசி மூன்று மாதங்கள் குழந்தையின் எடை வேகமாக அதிகரிக்கும். அந்த நிலையில் வயிறு விரிவடைவதன் காரணமாக வயிற்றில் கோடுகள் ஏற்படும். சிலருக்கு அவ்வப்போது அடிவயிறு வலி, இடுப்பில் வலி ஏற்படுவதுண்டு.
இடுப்பு வலிக்கு உளுந்து தைலம் பயன்படுத்தி வரலாம். சிலருக்கு குழந்தையின் எடை அதிகரிக்கும் பொழுது கால்களில் வெரிகோஸ் வெயின் பாதிப்பு ஏற்படும். மேலும் கால் கெண்டை சதைகளில் இரவு நேரங்களில் பிடிப்பு ஏற்படும். மருதம்பட்டை சூரணத்தை மருத்துவரின் பரிந்துரை படி பாலில் கலந்து தினம் பருகி வர இப்பிரச்சினை குறையும்.
கால்களில் வீக்கம் ஏற்பட்டு, சிறுநீரில் சில பெண்களுக்கு புரதம் வெளியேறும். இந்த நிலையில் சிறுகண்பீளை எனப்படும் பொங்கல் பூவை கஷாயம் செய்து பருகி வரலாம். அல்லது சிறுகீரையை சூப் செய்து பருகலாம். மதுரை, விருதுநகர் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் சாரணை வேர் மற்றும் சுக்கு சேர்த்து இடித்து முடிச்சாக இட்டு அரிசியுடன் வேக வைத்து பின் நீக்கிவிட்டு மதிய உணவாக கடைசி மூன்று மாதங்கள் எடுத்துக்கொள்கின்றனர். இதன் மூலம் கால் வீக்கம் குறைவதுடன், நோய் தொற்றுகளில் இருந்தும் விடுதலை கிடைக்கிறது.
நீரிழிவு நோய் சில பெண்களுக்கு கர்ப்ப காலத்திலேயே தொடங்கி விடுகிறது. உடல் எடை அதிகரிப்பதாலும், இன்சுலின் உற்பத்தி குறைவுபடுவதாலும், இன்சுலின் எதிர்பொருள் உருவாகுவதன் காரணமாகவும் நீரிழிவு ஏற்படலாம். இந்நிலையில் ஒரு வெண்டைக்காயை எடுத்து வெட்டி இரவு நீரில் ஊறவைத்து மறுநாள் காலை அருந்தி வர கருவுற்றிருக்கும் காலத்தில் அதிகரித்த இரத்த சர்க்கரை அளவு குறையும்.
மேலும் கடைசி மூன்று மாதங்கள் பனிக்குட நீரின் அளவு குறையும் அபாயம் சிலருக்கு உள்ளது. அப்படி கணிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி சதாவேரி நெய் எடுத்து வர பனிக்குட நீரின் அளவு அதிகரிக்கும்.
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கருவுற்றிருக்கும் கடைசி மூன்று மாதங்கள் முடக்கற்றான் கைபிடி அளவு, சீரகம், தேங்காய்துருவல் தலா 10 கிராம் எடுத்து பிட்டவிப்பது போல் அவித்து சாறு எடுத்து 200 மிலி வாரம் இருமுறை ஒரு வேளை எடுத்து வருவார்கள். இதன் மூலம் பனிக்குட நீர் குறையாமல் தடுக்க முடியும்.
சில பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தையின் எடை குறைவாக இருக்கலாம். அந்நிலையில் பஞ்சமுடிச்சு கஞ்சி தினம் பருகி வரலாம்.
பச்சரிசி- 5 கிராம்
பச்சைபயிறு- 5 கிராம்
துவரம்பருப்பு - 5 கிராம்
கடலை பருப்பு - 5 கிராம்
உளுந்து- 5 கிராம்
அனைத்து பொருட்களையும் தனித்தனியாக லேசாக வறுத்து பின்னர் ஓர் சுத்தமான துணியில் வைத்து சிறு முடிச்சாக கட்டிக்கொள்ளவும். பின்னர் பாத்திரத்தில் 500 மிலி நீர் எடுத்து அதில் முடிச்சை இட்டு வேக வைக்கவும். தண்ணீரில் அனைத்து சத்துகளும் சேர்ந்து கலங்கலாக தோன்றும்போது (தண்ணீர் 100 மிலி ஆக வற்றி வரும்போது) முடிச்சை நீக்கி கஞ்சி தெளிவை அருந்தி வர குழந்தையின் எடை படிப்படியாக அதிகரிக்கும்.
கருவுற்றிருக்கும் காலத்தில் ஹைபோதைராய்டு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க சுடு சோறு வடித்த கஞ்சி தண்ணீரில் வெண்ணெய் சேர்த்து வாரம் இருமுறை அருந்தி வரலாம்.
பாவன பஞ்சாங்குல தைலம் என்னும் சித்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவில் கருவுற்ற பத்து மாதங்களும் எடுத்து வர, பிறக்கும் குழந்தை கர்ப்பசூடும் நோயுமின்றி திடமாகவும், அழகாகவும், புத்தி கூர்மையுடையதாகவும் இருக்கும் என நூல்கள் உரைக்கின்றன.
பிரசவ காலம் நெருங்கிய பின்னரும் சில பெண்களுக்கு குழந்தையின் தலை இறங்காமல் இருக்கும். சிலருக்கு கருவாய் திறக்காமல் இருக்கும். அந்த நிலையில் ஆடாதோடை வேரை கஷாயம் செய்து பருகலாம். இதன் மூலம் குழந்தை தலை இறங்குவதுடன் உயர் குருதி அழுத்தமும் குறையும். மேலும் சோம்பு, குங்குமப்பூ சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வர கருவாய் திறந்து சுகபிரசவம் ஏற்படும்.
இந்த முறைகளை சரியாக பின்பற்ற முடியாதவர்கள் அரசின் மகப்பேறு சஞ்சீவி திட்டத்தில் கிடைக்கும் சித்த மருந்துகளை பயன்படுத்தி கர்ப்பகால அவத்தைகளை தடுக்கலாம்.
பிரசவத்திற்கு பிறகு பெண்கள் போதுமான ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். சவுபாக்ய சுண்டி லேகியம் தினம் இரு வேளை எடுத்து வரலாம். தாய்ப்பால் சுரப்பை இது அதிகப்படுத்துவதுடன் பிரசவத்திற்கு பின் ஏற்படும் பலக்குறைவு, களைப்பு, சோர்வு, ஜீரணக்குறைவு, ரத்த சோகை போன்றவற்றை நீக்கும்.
பிரசவத்திற்கு பின் முதல் வாரம் முருங்கை, கத்தரி, அவரை இவைகளின் பிஞ்சு, கருணைகிழங்கு, அரைக்கீரை போன்றவைகளை உணவாக கொள்ளலாம். துவர்ப்பான அத்திபிஞ்சு, வாழைப்பிஞ்சு போன்றவைகளை சேர்க்கக்கூடாது. இவைகளினால் வெளிப்பட வேண்டிய அழுக்கு தடைப்படும். அதிக சூடான உணவை உட்கொள்ள கூடாது. கரப்பான், மாந்தம் இவைகளை உண்டாக்ககூடிய பொருள்களை உண்ண கூடாது. தாய்ப்பாலை அதிகமாக சுரப்பிக்க கூடிய பூண்டு, பாதாம் போன்றவற்றை உணவில் சேர்க்கலாம். சீரகம் மற்றும் அதிமதுரம் சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து 2 கிராம் அளவு நாட்டு சர்க்கரை அல்லது நெய்யுடன் கலந்து சாப்பிட பால் சுரப்பு அதிகரிக்கும். குழந்தைக்கு பால் ஊட்ட வேண்டிய காலம் வரை பத்தியமாகவே உணவு உட்கொள்ள வேண்டும். முடிந்தவரை குழந்தைகளுக்கு 12 மாதம் வரை தாய்ப்பால் புகட்டுவது நன்று.






