என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கண்டாந்த தோஷம்
    X

    கண்டாந்த தோஷம்

    • ஜோதிடத்தின் மூலம் ஒரு மனிதனுடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்கப் போகிற சம்பவங்களை எளிதாக அறிய முடியும்.
    • ஒருவரின் பிறந்த கால பலனை நிர்ணயம் செய்வதில் ராசி, லக்னம், நட்சத்திரம் மூன்றும் மிக முக்கியம்.

    ஒரு ஆன்மாவின் பயணத்தை எளிமையாக்கி தனது பிறப்பின் நோக்கத்தை அறியச் செய்து ஆன்மாவின் இலக்கை அடைய உதவும் உயர்ந்த சாஸ்திரம் ஜோதிடம். வானில் சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களால் மனித வாழ்க்கையில் உண்டாகும் மாற்றங்களை விளக்குவது ஜோதிட சாஸ்திரமாகும். ஜோதிடத்தின் மூலம் ஒரு மனிதனுடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்கப் போகிற சம்பவங்களை எளிதாக அறிய முடியும். அதற்கு ஜாதகம் மிகவும் அவசியம். மனிதனுக்கு பொருள் தேடும் விஷயத்திற்கு உதவியாகவும் ஆபத்து காலத்தை அறிய உதவும் கலங்கரை விளக்கமாகவும் சத்ருகளிடம் இருந்து வெற்றியடைய விரும்பும் சமயங்களில் ஒரு நல்ல மதிநுட்ப மந்திரியாகவும் ஜோதிடம் திகழ்கிறது. இத்தகைய சிறப்புடைய ஜோதிட சாஸ்த்திரம் பலருடைய வாழ்க்கையில் பல நல்ல திருப்பு முனையை தந்துள்ளது. ஒருவரின் பிறந்த கால பலனை நிர்ணயம் செய்வதில் ராசி, லக்னம், நட்சத்திரம் மூன்றும் மிக முக்கியம்.

    90 சதவீதம் பிறந்த ஆங்கில தேதி, நேரம், ஊர் சரியாக இருந்தால் சாப்ட்வேர் மூலம் எளிமையாக ஜாதகத்தை கணித்திட முடியும். பிறந்த நாள், நேரம் இல்லாதவர்களின் ஜாதகத்தை கணித்திட வேறு முறைகள் உள்ளது.

    அதனால் அதை பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்களாம். பிறந்த நாள், நேரம் தெரிந்தும் சிலரின் ஜென்ம ராசி, ஜென்ம நட்சத்திரம், ஜென்ம லக்னத்தை அறிந்து கொள்ள முடியாமல் மனக் குழப்பத்திற்கு ஆளாகுகிறார்கள். அதனால்

    அது அவர்களுக்கு ஜோதிடத்தின் மேல் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஒருவருக்கு சரியான ஜென்ம நட்சத்திரம், ஜென்ம ராசி, ஜென்ம லக்னம் கண்டறிய முடியாமல் போவதற்கான ஜோதிட ரீதியான விளக்கமே இந்த கட்டுரை.

    ஒருவருக்கு சரியான பிறந்த லக்னம், ராசி, நட்சத்திரம் மாறுவதற்கான காரணங்கள் பல இருந்தாலும் மூன்று விதமான காரணங்களை பிரதானப்படுத்த விரும்புகிறேன்.

    1. லக்ன சந்தியில் குழந்தை பிறப்பது

    2. நட்சத்திர சந்தியில் குழந்தை பிறப்பது

    3. கண்டாந்த தோஷம்

    1. லக்ன சந்தியில் குழந்தை பிறப்பது.

    முதலில் லக்னம் என்றால் என்ன? என்பதை காணலாம். லக்னம் என்பது சூரிய ஒளியின் பயணம். அதாவது சூரியன் உதயமான நேரத்தில் இருந்து தோராயமாக இரண்டு மணி நேரம் வீதம் சூரிய ஒளி ஒரு ராசியில் பயணிக்கும். குழந்தை பிறக்கும் நேரத்தில் சூரிய ஒளி நின்ற புள்ளியே குழந்தையின் ஜென்ம லக்னமாகும். ஜென்ம லக்னம் என்பது ஒரு ஆன்மாவின் உயிர்.

    லக்ன சந்தி என்பது ஒரு லக்னம் முடிந்து அடுத்த லக்னம் தொடங்கும் நேரமாகும். அதாவது இரண்டு லக்னங்களும் சந்திக்கும் குறிப்பிட்ட நேரத்தை லக்ன சந்தி என்று கூறுகிறோம். இந்த நேரத்தில் குழந்தை பிறக்கும் போது ஜாதகரின் லக்னத்தை தேர்வு செய்வதில் சிறிய கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. உதாரணமாக மேஷ லக்னம் முடிந்து ரிஷப லக்னம் துவங்கும் நேரத்தில் குழந்தை பிறந்தால் மேஷ லக்னமா? ரிஷப லக்னமா? என்ற மனத்தாங்கல் உருவாகுகிறது. இது போன்ற நேரத்தில் ஜாதகரின் குணாதிசயங்களை முன்னிலைப்படுத்தி லக்னத்தை நிர்ணயிப்பது சாலச் சிறந்தது.

    ஐ.ஆனந்தி

    2.நட்சத்திர சந்தியில் குழந்தை பிறப்பது.

    குழந்தை பிறந்த நேரத்தில் சந்திரன் நின்ற நட்சத்திரமே ஜென்ம நட்சத்திரமாகும். ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

    ஒரு ராசிக்கு ஒன்பது நட்சத்திர பாதமாகும். ஒரு நட்சத்திரத்தின் ஒன்பதாவது நட்சத்திர பாதம் முடியும் போதும் அடுத்த நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆரம்பமாகும் போதும் குழந்தை பிறந்தால் அது நட்சத்திர சந்தியாகும். உதாரணமாக மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தின் 4-ம் பாதம் முடிந்து பரணி நட்சத்திரம் 1-ம் பாதம் ஆரம்பிக்கும் போது குழந்தை பிறப்பது நட்சத்திர சந்தியாகும். இதனால் ஜாதகரின் தசா புத்தி பலன்களில் மாற்றம் ஏற்படும். இது போன்ற நேரத்தில் ஜாதகரின் குணாதிசயங்களை முன்னிலைப்படுத்தி லக்னத்தை நிர்ணயிப்பது சாலச் சிறந்தது.

    3. கண்டாந்த தோஷம்

    கண்டாந்தர நட்சத்திர தோஷம் கண்டாந்தம் என்றால் கண்டம் +அந்தம். ஒரு நட்சத்திரம் முடியும்போது கடைசியில் உள்ள 2 நாழிகையும், ஒரு நட்சத்திரம் ஆரம்பமாகும் போதும் உள்ள 2 நாழிகையும் கண்டாந்த நாழிகை எனப்படும். இந்த இரண்டும் சேர்ந்த 4 நாழிகையானது கண்டாந்த நாழிகை எனப்படும். இந்த கண்டாந்த தோஷமானது.

    ரேவதி -அசுவினி, ஆயில்யம்-மகம்,கேட்டை -மூலம் ஆகிய இந்த மூன்று ஜோடி நட்சத்திரங்களுக்கு மட்டுமே உண்டு.

    அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் 1-ம் பாதமும், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் 4-ம் பாதமும் கண்டாந்த தோஷம்.

    கண்டாந்த வேளைகளில் பிறந்தவர் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. மேலும் ஜாதகரை மட்டுமின்றி அவரது பெற்றோர் உறவினரைக் கூட பாதிக்க வல்லது.

    ஜென்ம லக்னம் மற்றும் ஜென்ம ராசி, நட்சத்திரம் எதுவென்று தெரியாத பல ஜாதகர்களின் மன வருத்தம் ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை குறைவை தருகிறது.

    லக்ன / நட்சத்திர சந்தியில் பிறப்பவர்களின் ஜாதக பலனை நிர்ணயிப்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதைதான். ஒரு குழந்தையின் ஜென்ம நட்சத்திரம் மற்றும் ஜென்ம லக்னத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நட்சத்திரம் என்பது உடல் . லக்னம் என்பது ஆன்மா உயிர் புள்ளி. உடலும் உயிரும் இணைந்ததே ஒருவருடைய வாழ்க்கை. உயிர் இல்லாத உடலால் தனித்து இயங்க முடியாது. அத்துடன் ஒருவரின் வாழ்க்கை சம்பவங்கள் தசாபுத்தியைக் கொண்டே முடிவு செய்யப்படுகிறது. நட்சத்திர பாதம் தவறாகும் போது தசாபுத்தி கணிதத்திலும் மாற்றம் ஏற்படும்.

    ஒரு உடலை இரண்டு உயிர் இயக்கினால் உடலால் செயல்பட முடியாது. உதாரணமாக மேஷ ராசி முடிந்து ரிஷப ராசி ஆரம்பிக்கும் போது அல்லது மேஷ லக்னம் முடிந்து ரிஷப லக்னம் ஆரம்பிக்கும் போது ஒருவர் பிறந்து இருந்தால் அவருடைய ஜாதக பலன் இரண்டு ராசி / இரண்டு லக்ன பலன்களுடன் இணைந்தே இருக்கும். இது தான் ஜோதிடருக்கு செக் பாயின்ட். தவறினால் ஜோதிட பலன்கள் ஜாதகரின் வாழ்க்கையோடு பொருந்தாமல் போகலாம். இது போன்ற லக்ன / நட்சத்திர சந்தியை முறைப்படுத்தாத ஒரு ஜாதகத்தை கொண்டு ஒருவருக்கு வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் போது, அது தவறாக அமைந்து ஜாதகரின் வாழ்க்கையே தடம் புரண்டு விடும்.

    எது எப்படி இருந்தாலும் இது போன்ற அமைப்பில் பிறந்தவர்களுக்கு தீர்வு கிடைக்க செய்ய முடியுமா? என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

    பெரும்பாலும் வாக்கியம்/திருக்கணிதம் என இரண்டு பஞ்சாங்கங்கள் நடைமுறையில் இருப்பதே இந்த நட்சத்திர / லக்ன சந்திக்கு முதல் காரணமாக அமைகிறது. வாக்கிய பஞ்சாங்கம் சிறந்ததா? திருக்கணிதப் பஞ்சாங்கம் சிறந்ததா? என்று ஆய்வு செய்தால் ஒரு ஜாதகருக்கு இந்த ஜென்மம் முழுவதும் தீர்வு கிடைக்க செய்ய முடியாது.

    எந்த பிரச்சினையாக இருந்தாலும் இரண்டு மாறுபட்ட முரண்பாடான கருத்து இருப்பது உலக இயல்பு. அதனால் ஜோதிடர்கள் சுய அனுபவத்தில் எந்த பஞ்சாங்க முறை சரியாக வருகிறதோ அதை பயன்படுத்தலாம். சர்ச்சைக்குரிய விசயத்திற்கு தீர்வு காண முயல்வது காலம், நேரத்தை வீணாக்கும் செயலாகும்.

    நாம் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட மேஷ / ரிஷப லக்ன, நட்சத்திர சந்தியில் பிறந்த ஒருவரின் பிரச்சினையை எவ்வாறு தீர்வு கொடுக்க முடியும் என்று பார்க்களாம்.

    ஒருவர் மேஷ லக்னத்தில் பிறந்து இருந்தால் தலை அல்லது முகத்தில் காயம்பட்ட தழும்பு அல்லது மச்சம் இருக்கும். உஷ்ண தேகம் உடைய வராக இருப்பார். எடுத்த காரியத்தை இறுதி வரை போராடி முடிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் உடையவராக இருப்பார். ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் அழகாக இருப்பார்கள். லவுகீக வாழ்வில் அதிக நாட்டம் உடையவர்கள். பிறருடன் இனிமையாக முகம் சுழிக்காமல் பழகுவார்கள். கல்வி, கலைத்திறமை, இசை ஞானம், நடனமாடுதல், நடிப்பு ஒவியம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

    இப்பொழுது உங்களுக்கு நன்றாக புரிந்து இருக்கும். ஒரு லக்னத்திற்கும் அடுத்த லக்னத்திற்கும் உள்ள குணாதிசயங்களை கொண்டு ஒருவரின் லக்னம் தொடர்பான பிரச்சினையை மிக எளிமையாக கொண்டு வந்து விடலாம்.

    இதே போல் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனி இயல்பு உண்டு. ஜாதகரின் குண இயல்புகள் எந்த நட்சத்தித்தோடு பொருந்தி வருகிறதோ அந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு ஜாதகரின் நடை, உடை, பாவனை, கடந்த கால, நிகழ்கால நிகழ்வுகள் ஆகியவற்றை தீர்மானித்து பலன் கூறினால் தீர்வு கிடைக்கும்.

    ராசி, நட்சத்திரம், லக்னத்தை குணாதிசயத்தோடு ஒப்பிட்டு தீர்வு கிடைக்கச் செய்வது காதைச் சுற்றி மூக்கை தொடுவதற்கு ஒப்பாகும். ஒரு பிரச்சினையை தரும் பிரபஞ்சம் அதற்கு எளிதான தீர்வையும் தந்து இருக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் ராசி, லக்னம் மாறினாலும் 100-க்கு 99 சதவீதத்தினருக்கு குரு, சனி, ராகு/கேதுக்கள் நிற்கும் இடம் மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது. இந்த 4 வருட கிரகங்களை கொண்டே ஜாதகருக்கு தீர்வு கிடைக்க செய்ய முடியும். இதற்கும் மேல் ஜாதகர் வந்த நேரத்தை கொண்டு பிரசன்னம் பார்த்தும் தீர்வு கொடுக்க முடியும்.

    மேலும் உளவியல் ரீதியாக இந்த பிரச்சினையை ஆராய்ந்தால் ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த கர்மாவின் அடிப்படையில் வாழ்வில் லாபம் மற்றும் நஷ்டங்களை சந்தித்து வருகிறார்கள். சாதகமான பலன்கள் நடைபெறும் போது மனது மகிழ்ச்சியாக உள்ளது. சில அசுப பலன்களை சந்திக்கும் போது மன சஞ்சலம் மிகுதியாகுகிறது.

    காலச்சக்ர பிடியில் சிக்கி தவிக்கும் மனிதர்கள் விதியின் பிடியில் இருந்து விடுபட்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலில் தான் அனுபவிக்க இருக்கும் பலன்களை மீறி சில திட்டமிடுதலைச் செய்து அவற்றை அடைய முயற்சிக்க வேண்டிய கட்டாயத்தில் மனித வாழ்க்கை உள்ளது. அந்த முயற்சியில் சில வெற்றிகளையும் பல தோல்விகளையும் சங்கடங்களையும் சந்திக்க நேருகிறது.

    வெற்றி கிடைக்கும் போது தன் திறமையை நினைத்து பெருமைப்படும் மனிதன் தோல்வியை சந்திக்கும் போது பலரின் கவனம் ஜோதிடத்தின் பக்கம் திரும்புகிறது. ஜோதிடத்தின் மூலம் தனது விதிப் பயனை மாற்றும் பரிகாரம் செய்து வாழ்வில் வளம் பெற முடியும் என்ற எண்ணம் மிகுதியா கிறது. வேதாகம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில பூஜை முறைகளை மேற்கொள்ளும் போது சில பலன்கள் மாற்றியமைக்கப்படலாம் என்றாலும் அது வெகு சிலருக்கு தற்காலிக தீர்வை தருகிறது.

    ஒருவன் தன் வாழ்வில் சந்திக்கின்ற அத்துணை அனுபவங்களுக்கும் காரணத்தை ஆராய்ந்தால் அவர்களுடைய ஊழ்வினையே முன் வந்து நிற்கும். இதைத் தான் நமது முன்னோர்கள் தீதும் நன்றும் பிறர் தர வாரா, ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அப்படி என்றால் இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தீர்வே கிடையாதா? என்ற ஆதங்க கேள்வி எழும். இது போன்ற தீராத பிரச்சினைகளால் மன உளைச்சலுக்கு எளிமையாக ஜோதிடத்தில் தீர்வு தர முடியும். கோச்சார குரு ஜனன கால சனிக்கும் சம்பந்தம் எற்படும் போது அல்லது கோச்சார சனி ஜனன கால குருவுக்கு சம்பந்தம் ஏற்படுத்தும் போது செய்யப்படும் வழிபாடு நிரந்தர தீர்வு தரும் என்ற உண்மை தெரியாமல் ஜோதிடத்தின் மேல் பலி சுமத்துகிறார்கள். உண்மையான பக்தி மற்றும் சரணாகதி ஒரு ஆன்மாவின் கர்மவினையை இல்லாமல் செய்துவிடும்.

    ஜோதிடம் என்பது பெரும் கடல். நிச்சயமாக ஜோதிடத்தின் மூலம் எதிர்கால வாழ்க்கையை நிம்மதியாகவும், ஒளிமயமாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

    பரிகாரம்:-

    லக்ன / நட்சத்திர சந்தியில் ஒரு ஜனனம் நிகழ்வது கர்ம வினை தோஷமே. உலக மக்கள் தொகையில் பத்து சதவீதத்தினருக்கு மட்டுமே இது போன்ற லக்ன / நட்சத்திர சந்தி பிரச்சினை ஏற்படுகிறது. இது சஞ்சித கர்மாவின் விளைவு. தினமும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரதோஷ வேளையில் சிவபுராணம் படித்து வர கர்ம வினை குறைந்து காரிய சித்தி கிட்டும்.

    கண்டாந்தத்தில் குழந்தை பிறந்தால் நவக்கிரக சாந்தி ஹோமங்கள் செய்து கொள்வது நல்லது.

    Next Story
    ×