search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கும்பிளேவின் சாதனையை சமன் செய்த அஸ்வின்
    X

    கும்பிளேவின் சாதனையை சமன் செய்த அஸ்வின்

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இது 5-வது முறையாகும்.
    • இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காதது இதுவே முதல்முறையாகும்.

    * ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் நேற்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவர் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்துவது இது 25-வது முறையாகும். இதன் மூலம் இந்திய மண்ணில் டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கும்பிளேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்து அவருடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார். சொந்த மண்ணில் இந்த வகையில் இவர்களை விட அதிகமாக இலங்கையின் முரளிதரன் 45 முறையும், ரங்கனா ஹெராத் 26 முறையும் 5 விக்கெட் வீழ்த்தி முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

    * நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 91 ரன்னில் சுருண்டது. இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய ஒரு இன்னிங்சில் எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு அந்த அணி 2004-ம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்டில் 93 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்சமாக இருந்தது. அத்துடன் நாக்பூர் டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா எடுத்தது டெஸ்டில் இந்திய அணிக்கு எதிராக 2-வது குறைந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 1981-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அந்த அணி 83 ரன்னில் ஆல்-அவுட் ஆனதே குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது.

    * ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இது 5-வது முறையாகும்.

    * நாக்பூர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 ஆஸ்திரேலிய வீரர்களும், 2-வது டெஸ்டில் 6 ஆஸ்திரேலிய வீரர்களும் என மொத்தம் 10 பேர் எல்.பி.டபிள்யூ.முறையில் ஆட்டம் இழந்தனர். ஒரு டெஸ்ட் போட்டியில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆஸ்திரேலியா இழந்த அதிகபட்ச விக்கெட் இதுவாகும். இதற்கு முன்பு அந்த அணி 2001-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்டிலும் (கொல்கத்தா), 2022-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்டிலும் (காலே) தலா 9 விக்கெட்டுகளை எல்.பி.டபிள்யூ. முறையில் பறிகொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    * இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஸ்சேன் 49 ரன்கள் எடுத்தார். இதுவே இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வீரரின் அதிகபட்ச ரன்னாகும். அந்த அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காதது இதுவே முதல்முறையாகும்.

    Next Story
    ×