என் மலர்
கிரிக்கெட் (Cricket)
1983 உலக கோப்பையை வென்ற முன்னாள் இந்திய வீரர்கள் வினோத் காம்ப்ளிக்கு நிதியுதவி
- தெண்டுல்கர் நண்பர் வினோத் காம்ப்ளியின் உடல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
- காம்ப்ளியின் சொந்த வாழ்க்கையில் ஏற்கனவே கட்டுக்கோப்பின்மை, ஆல்கஹால் பாதிப்பு இருந்தது.
தெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, பிரவீண் ஆம்ரே ஆகியோரது கிரிக்கெட் குருநாதர் ராமகண்ட் அச்ரேக்கரின் நினைவு தின நிகழ்ச்சிக்கு முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி வந்து இருந்தார். அங்கு அவரது உடல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் தனது பால்ய நண்பர் தெண்டுல்கரை அணைத்து கண்ணீர் விட்ட வீடியோ வைரலானது.
காம்ப்ளியின் சொந்த வாழ்க்கையில் ஏற்கனவே கட்டுக்கோப்பின்மை, ஆல்கஹால் பாதிப்பு இருந்தது. இவரது இந்தப் பழக்கம் நண்பர்களிடமிருந்து அந்நியப்பட வைத்தது.
இந்நிலையில் 1983 உலக கோப்பையை வென்ற முன்னாள் வீரர்கள் வினோத் காம்ப்ளிக்கு நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளனர். ஒரு நிபந்தனையுடன் உதவ முன்வந்துள்ளதாக முன்னாள் வீரர் பல்வீந்தர் சிங் சாந்து தெரிவித்துள்ளார்,
இது தொடர்பாக கூறும்போது "கபில்தேவ் என்னிடம் தெளிவாக ஒன்றைச் சொன்னார். மறுவாழ்வு சிகிச்சைக்கு வினோத் காம்ப்ளி தயார் என்றால் நிதிரீதியாக நாம் உதவுவோம். அவர் முதலில் மறுவாழ்வு சிகிச்சைக்கு தன்னை ஒப்படைக்க வேண்டும். என்ன செலவாகிறதோ அதைக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், சிகிச்சை எத்தனை நாட்களுக்கு நீடித்தாலும் கவலையில்லை" என்றார்.
இப்போதைக்கு காம்ப்ளி பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) அளிக்கும் ரூ.30,000 ஓய்வூதியத்தை மட்டும்தான் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளார்.
1983 உலகக்கோப்பை வெற்றி நாயகர்கள் ஏற்கனவே புற்று நோயால் பாதிக்கப்பட்டு மறைந்த கெய்க்வாட்டிற்கு உதவி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.