search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல். போட்டிக்காக டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்- சேப்பாக்கத்தில் விறுவிறுப்பான விற்பனை
    X

    ஐ.பி.எல். போட்டிக்காக டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்- சேப்பாக்கத்தில் விறுவிறுப்பான விற்பனை

    • சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத் தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • ரூ.1500 விலையிலான டிக்கெட்டுகள் கவுண்டரில் மட்டுமே விற்கப்பட்டன.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத் தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 3-ந் தேதி முதல் ஆட்டம் சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை தோற்கடித்தது.

    சேப்பாக்கம் எம்.ஏ.சிதம் பரம் ஸ்டேடியத்தில் 2-வது ஐ.பி.எல். ஆட்டம் வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிக்கு ரசிகர்களின் ஆர்வம் அதிகமாக இருந்தது. முதல் போட்டியில் சி.எஸ்.கே. வீரர்கள் சிறப்பாக ஆடியதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

    இதனால் டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் நேற்று இரவில் இருந்தே ஸ்டேடியம் முன்பு திரண்டனர். காலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். அவர்கள் டிக்கெட்டுகளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்றனர். ரசிகர்கள் கூட்டம் திரண்டு இருந்ததால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ஒருவருக்கு 2 டிக்கெட் வழங்கப்பட்டது.கவுண்டரிலும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட் விற்பனை நடந்தது.

    குறைந்தபட்ச டிக்கெட்டான ரூ.1500-யை வாங்குவதற்கு தான் ரசிகர்கள் பெரும் அளவில் வரிசையில் காத்திருந்தனர்.

    சி, டி, மற்றும் இ கேலரிகளுக்கான கீழ்தளத்தின் டிக்கெட் விலை ரூ.1500 ஆகும். இதுதவிர ரூ.2 ஆயிரம் (ஐ, ஜே, மற்றும் கே கேலரிகளின் மேல்தளம்), ரூ.2500 (ஐ, ஜே மற்றும் கே கேலரிகளின் கீழ்தளம்), ரூ.3000 (டி, இ கேலரிகளின் மேல்தளம்) டிக்கெட்டுகள் விற்பனையானது.

    ரூ.3 ஆயிரம் விலையிலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டும் விற்பனையாகின. ரூ.2 ஆயிரம், ரூ.2500 விலையிலான டிக்கெட்டுகள் கவுண்டர் மற்றும் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்பட்டது. ரூ.1500 விலையிலான டிக்கெட்டுகள் கவுண்டரில் மட்டுமே விற்கப்பட்டன.

    Next Story
    ×