என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
கேலோ இந்தியா: தடகளம், சைக்கிளிங், ஸ்குவாஷ் போட்டியில் பதக்கங்களை தட்டிச்சென்ற தமிழகம்
- 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் ஷரண் 48.42 வினாடியில் இலக்கை எட்டிப்பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
- கேலோ இந்தியா போட்டியில் ஸ்குவாஷ் நடப்பு ஆண்டில் அறிமுக விளையாட்டாக இடம் பிடித்துள்ளது கவனிக்கத்தக்கது.
சென்னை:
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடந்து வருகிறது. வருகிற 31-ந் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 26 வகையான போட்டிகளில் 5,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் 5-வது நாளான நேற்றும் தமிழகத்தின் பதக்க வேட்டை நீடித்தது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த தடகளத்தில் ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் விஷ்ணு 13.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மராட்டியத்தின் சந்தீப் கோன்ட் (13.89 வினாடி) வெள்ளிப்பதக்கமும், கேரளாவின் கிரண் (14.13 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
400 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் ஷரண் 48.42 வினாடியில் இலக்கை எட்டிப்பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கர்நாடக வீரர் துருவா பல்லால் (49.06 வினாடி) வெள்ளிப்பதக்கமும், தெலுங்கானாவின் ஷேக் அசாருதீன் (49.15 வினாடி) வெண்கலப்பதக்கமும் வென்றனர். போல்வால்ட் (கம்பூன்றி தாண்டுதல்) பந்தயத்தில் உத்தரபிரதேச வீரர் ஆர்ய தேவ் (4.40 மீட்டர்) தங்கப்பதக்கமும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த அமன் சிங் (4.40 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீரர் கவின் ராஜா (4.30 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.
சென்னை நேரு பார்க்கில் நடக்கும் ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தமிழக வீராங்கனை பூஜா ஆர்த்தி 11-6, 7-11, 11-8, 9-11, 11-6 என்ற என்ற செட் கணக்கில் மராட்டியத்தின் நிருபமா துபேயை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மேலும் தமிழகத்தை சேர்ந்த ஷமினா ரியாஸ், தீபிகா, அரிஹந்த், சந்தேஷ் ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்றனர். இரு அணிகள் பிரிவிலும் தமிழகம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. கேலோ இந்தியா போட்டியில் ஸ்குவாஷ் நடப்பு ஆண்டில் அறிமுக விளையாட்டாக இடம் பிடித்துள்ளது கவனிக்கத்தக்கது.
சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடந்த சைக்கிளிங் பந்தயத்தில் தமிழகத்திற்கு மேலும் 4 பதக்கங்கள் கிட்டியது.
சைக்கிளிங்கில் பெண்களுக்கான தனிநபர் பர்சுயிட் பிரிவில் (2 கிலோ மீட்டர்) தமிழக வீராங்கனையான கோவையைச் சேர்ந்த தன்யதா 2 நிமிடம் 52.333 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டர். 10 கிலோமீட்டர் ஸ்கிராச் பிரிவில் கோவை வீராங்கனை தமிழரசி தங்கப்பதக்கமும் (10 நிமிடம் 10.625 வினாடி), தன்யதா வெண்கலமும் (10 நிமிடம் 10.758 வினாடி) வசப்படுத்தினர். இதன் ஸ்பிரின்ட் பிரிவில் தூத்துக்குடி வீராங்கனை ஸ்ரீமதி வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
யோகாசனத்தில் ஆர்டிஸ்டிக் ஜோடி பிரிவில் உடலை வில்லாக வளைத்து சாகசம் காட்டிய தமிழக வீராங்கனைகள் மேனகா- பெட்ரா ஷிவானி 132.35 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கமங்கையாக உருவெடுத்தனர். மராட்டிய ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதில் மேனகா விருதுநகரையும், ஷிவானி மதுரையையும் சேர்ந்தவர்கள். இருவரும் பிளஸ்1 படிக்கிறார்கள்.
நேற்றைய முடிவில் பதக்கப்பட்டியலில் தமிழகம் 2-வது இடத்திற்கு சரிந்தது. 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கத்துடன் 2-வது இடத்தில் இருக்கிறது. மராட்டியம் 14 தங்கம் உள்பட 45 பதக்கங்கள் குவித்து முதலிடத்துக்கு முன்னேறியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்