என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக 90 மீட்டர் இலக்கை எட்டுவேன்- நீரஜ் சோப்ரா
- டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு எனது தன்னம்பிக்கை அதிகரித்து இருக்கிறது.
- எல்லாமே சரியாக அமைந்தால், 90 மீட்டர் இலக்கை பார்க்க மக்கள் ஒலிம்பிக் வரை காத்திருக்க வேண்டாம்.
புதுடெல்லி:
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிலும், அதைத் தொடர்ந்து உலக தடகளத்திலும் தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். இப்போது ஜூலை - ஆகஸ்டு மாதத்தில் பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக்கில் மீண்டும் மகுடம் சூடும் உத்வேகத்துடன் தன்னை தீவிரமாக தயார்படுத்தி வருகிறார். அரியானாவைச் சேர்ந்த 26 வயதான நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்துள்ளார்.
இந்த நிலையில் தனது அடுத்தக்கட்ட இலக்கு குறித்து ஆன்லைன் மூலம் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக 90 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டி எறிய முயற்சிப்பேன். எல்லாமே சரியாக அமைந்தால், 90 மீட்டர் இலக்கை பார்க்க மக்கள் ஒலிம்பிக் வரை காத்திருக்க வேண்டாம். அதற்கு முன்பாகவே நடந்து விடும் என்று நம்புகிறேன். அதற்கு ஏற்ப தயாராகி உள்ளேன்.
இந்த சீசன் தொடங்கிய போது உடல்தகுதி மற்றும் உடல் வலிமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினேன். ஈட்டி எறிதலுக்கு என்று பிரத்யேகமாக எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் தொழில்நுட்பத்தில் நான் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளேன். மேலும் தென்ஆப்பிரிக்கா மற்றும் துருக்கியில் மேற்ெகாண்ட பயிற்சிகள் நல்லவிதமாக அமைந்தது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு எனது தன்னம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. அதன் பிறகு இரண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ளேன். அவற்றில் ஒன்றில் வெள்ளியும், மற்றொன்றில் தங்கமும் வென்றேன். டைமண்ட் லீக் தடகளத்தில் கோப்பையை கைப்பற்றினேன். ஆசிய விளையாட்டில் பட்டத்தை தக்க வைத்தேன். டோக்கியோ மற்றும் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு இடைப்பட்ட காலத்தில் கிடைத்த இந்த வெற்றிகள் நிறைய நம்பிக்கையை தந்திருக்கிறது. எந்த நிலையிலும், எத்தகைய போட்டியிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும்.
அடுத்த மாதத்தில் தோகா டைமண்ட் லீக் மற்றும் ஜூன் மாதத்தில் பாவோ நூர்மி விளையாட்டில் பங்கேற்க உள்ளேன். ஒலிம்பிக்குக்கு முன்பாக 3-4 போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்.
ஜெர்மனி இளம் வீரர் குறித்து...
ஜெர்மனியின் இளம் வீரர் மேக்ஸ் டெனிங் சமீபத்தில் 90.20 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தது குறித்து கேட்கிறீர்கள். மேக்ஸ் டெனிங்குடன் இதற்கு முன்பு நான் விளையாடியதில்லை. பாவோ நூர்மி விளையாட்டில் அவரை எதிர்கொள்ள ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.
டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் உலக தடகளத்தில் என்னுடன் 90 மீட்டர் தூரத்திற்கு மேல் ஈட்டி எறிந்தவர்களும் களம் கண்டனர். அதில் அவர்களை தோற்கடித்தேன். அதனால் இது போன்று அதிக தூரம் ஈட்டி எறிந்தவர்களுடன் மோதுவது எனக்கு புதிதல்ல. அது ஒரு பெரிய விஷயமே இல்லை. குறிப்பிட்ட நாளில் நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதே முக்கியம்.
சக நாட்டவரான கிஷோர் ஜெனா உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும், ஆசிய விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட்டார். அவரது முன்னேற்றத்தை பார்க்கும் போது, எனக்கு முன்பாக 90 மீட்டர் இலக்கை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஊக்கத்தொகை அறிவிப்புக்கு வரவேற்பு
பாரீஸ் ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு ஊக்கத்தொகை (ரூ.41½ லட்சம்) வழங்கப்படும் என்ற உலக தடகள சம்மேளனத்தின் அறிவிப்பு ஒரு சிறப்பான தொடக்கமாகும் இதேபோல் டைமண்ட் லீக் போன்ற மற்ற பெரிய போட்டிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கினால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்