search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு (Sports)

    ஹாக்கி அரை இறுதியில் இந்தியா- ஜெர்மனி நாளை பலப்பரீட்சை
    X

    ஹாக்கி அரை இறுதியில் இந்தியா- ஜெர்மனி நாளை பலப்பரீட்சை

    • இந்தியா-ஜெர்மனி ஆட்டம் நாளை (6-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு நடக்கிறது.
    • மற்றொரு அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதுகிறது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டியில் நேற்று கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. ஹர்மன் பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி கால் இறுதியில் இங்கிலாந்துடன் விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. 22-வது நிமிடத்தில் இந்திய அணிக்காக கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். 27-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்டன் கோல் அடித்தார்.

    இதனால் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

    ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் இந்தியவீரர் அமித் ரோஹிதாஸ் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்தனர். இதனால் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. 10 வீரர்களுடன் விளையாடி இந்தியா பெற்ற இந்த வெற்றி சிறப்பானது.

    இந்திய அணி அரை இறுதியில் ஜெர்மனியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் நாளை (6-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அரை இறுதியில் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்து விடும். ஜெர்மனியை வீழ்த்துவது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். அந்த அணி ஸ்பெயினிடம் மட்டுமே தோற்று இருக்கிறது. இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜெர்மனி அணி கால் இறுதியில் அர்ஜென்டினாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

    நாளை நடைபெறும் மற்றொரு அரை இறுதியில் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. மாலை 5.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பெல்ஜியமும், வெள்ளி பதக்கம் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவும் கால் இறுதியிலேயே வெளியேறி விட்டன. வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணி மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

    பெண்கள் பிரிவில் இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-சீனா (பிற்பகல் 1.30 மணி), அர்ஜென்டினா-ஜெர்மனி (மாலை 4 மணி ) , நெதர்லாந்து-இங்கிலாந்து (இரவு 9 மணி), பெல்ஜியம்-ஸ்பெயின் (இரவு 11.30 மணி) மோதுகின்றன.

    Next Story
    ×