என் மலர்
விளையாட்டு
புரோ கபடி லீக்: செப்டம்பர் மாதத்தில் வீரர்கள் ஏலம்
- 10-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மும்பை:
நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன், பெங்களூரு புல்ஸ், உ.பி.யோத்தா, தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி உள்பட 12 அணிகள் பங்கேற்கும் 10-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த ஏலப் பட்டியலில் கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இரு அணியினர் உள்பட மொத்தம் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம்பெறுகிறார்கள். ஏலத்தில் பங்கேற்கும் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் 4 பிரிவாக (ஏ, பி, சி, டி) பிரிக்கப்படுவார்கள். 'ஏ' பிரிவு வீரர்களுக்கு ரூ.30 லட்சமும், 'பி' பிரிவு வீரர்களுக்கு ரூ.20 லட்சமும், 'சி' பிரிவு வீரர்களுக்கு ரூ.13 லட்சமும், 'டி' பிரிவு வீரர்களுக்கு ரூ.9 லட்சமும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். ஒரு அணியில் 18 முதல் 25 வீரர்கள் வரை இடம் பெறுவார்கள். ஒவ்வொரு அணியும் வீரர்களை ஏலத்தில் எடுக்க செலவிடும் தொகை தற்போது ரூ.4.4 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.