search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பிரச்சனை என்றால் இந்தியாவில் இருந்திருக்க மாட்டேன்.. முகமது ஷமி ஆவேசம்
    X

    பிரச்சனை என்றால் இந்தியாவில் இருந்திருக்க மாட்டேன்.. முகமது ஷமி ஆவேசம்

    • மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
    • இந்திய வீரர்கள் யாரும் அதுவரை செய்யாத சாதனை.

    ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அபாரமாக செயல்பட்டார். தொடரில் தான் விளையாடிய ஏழு போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது 2023 உலகக் கோப்பை தொடரில் மற்ற பந்துவீச்சாளர்களை விட அதிகம் ஆகும். இதில் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    ஒரே உலகக் கோப்பை தொடரில் பல சாதனைகளை தகர்த்த முகமது ஷமி நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் யாரும் அதுவரை செய்யாத சாதனையாக அமைந்தது. இலங்கை அணிக்கு எதிராக முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய சம்பவம் தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.


    வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் போது தனது ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்திய முகமது ஷமி தரையில் முழங்காலிட்டு அமர்ந்தார். இதனை நெட்டிசன்கள் வேறு விதத்தில் புரிந்து கொண்டு, அதனை சர்ச்சையாக்கும் செயலில் தீயாக ஈடுபட்டனர்.

    அதன் படி, "ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய போட்டி ஒன்றில் நீங்கள் தரையில் முழங்கால் வைத்தீர்கள். உடனே பாகிஸ்தானை சேர்ந்த சிலர், முகமது ஷமி ஒரு இந்திய முஸ்லீம், அவர் சஜ்தா (பிரார்த்தனை) செய்ய முற்பட்டார், ஆனால் இந்தியாவில் இதை செய்ய அவர் அஞ்சுகிறார்," என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் முகமது ஷமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த முகமது ஷமி, "யாராவது சஜ்தா செய்ய நினைத்தால், யார் தடுக்க முடியும். நான் மற்ற மதத்தை சேர்ந்த யாரையும் அப்படி தடுக்க மாட்டேன், நீங்களும் மற்ற மதத்தை சார்ந்த யாரையும் அப்படி தடுக்க மாட்டீர்கள். எனக்கு சஜ்தா செய்ய வேண்டுமெனில், நான் அதை செய்வேன். அதில் என்ன பிரச்சனை இருக்க போகிறது? நான் ஒரு முஸ்லீம் என்பதை பெருமையுடன் கூறுவேன். நான் ஒரு இந்தியன் என்று கூறுவதில் நான் பெருமை கொள்கிறேன்."


    "எனக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், நான் இந்தியாவில் வசித்து இருக்க மாட்டேன். நான் சஜ்தா செய்ய யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டும் என்றால், நான் ஏன் இங்கு வாழ வேண்டும். நானும் அத்தகைய கருத்துக்களை சமூக வலைதளத்தில் பார்த்தேன். நான் எப்போதாவது மைதானத்தில் சஜ்தா செய்திருக்கிறேனா? நான் ஏற்கனவே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறேன். நான் சஜ்தா செய்ய வேண்டுமெனில், நான் அதை எங்கு செய்ய வேண்டும் என சொல்லுங்கள், நான் அதை செய்வேன்."

    "இந்தியாவின் ஒவ்வொரு மேடையிலும் நான் அதை செய்வேன். யாரும் என்னை தடுக்க முடியாது. இவர்கள் தடுக்க முயற்சிக்கிறார்கள். இவர்கள் உங்களுடனோ அல்லது என்னுடனோ இல்லை. அவர்கள் யாரையும் விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு பிரச்சனை மட்டுமே ஒரே குறிக்கோள். நான் எனது உடலை வருத்திக் கொண்டு பந்துவீசியதால் முழங்காலிட்டேன். எனக்கு சோர்வாக இருந்தது. மக்கள் அந்த செய்கையை வேறு மாதிரி நினைத்து கொண்டனர்," என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×