search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வெள்ளி பதக்கம் வென்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    X

    வெள்ளி பதக்கம் வென்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    • காமன்வெல்த் விளையாட்டில் முதல் முறையாக கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது.
    • கிரிக்கெட்டும், இந்தியாவும் பிரிக்க முடியாதது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    காமன்வெல்த் விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட் 20 ஓவர் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. தங்கப் பதக்கத்துக்கான இப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்தது. பெத்மூனி 61 ரன்னும், கேப்டன் லானிங் 36 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா தரப்பில் ரேணுகாசிங், சினே ரானா தலா 2 விக்கெட்டும், தீப்தி சர்மா, ராதாயாதவ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் இலக்கை நோக்கி இந்தியா விளையாடியது. தொடக்க வீராங்கனைகள் மந்தனா 6 ரன்னிலும், ஷபாலி வர்மா 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    பின்னர் ரோட்ரிக்ஸ்-கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் ஜோடி தாக்குபிடித்து விளையாடியது. ஸ்கோர் 118 ரன்னாக (14.3 ஓவர்) இருந்தபோது அந்த ஜோடி பிரிந்தது. ரோட்ரிக்ஸ் 33 ரன்னில் ஆட்டம் இழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தனர்.

    சிறப்பாக விளையாடிய ஹர்மன்பிரீத்சிங் அரை சதம் அடித்தார். அவர் 65 ரன்னில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 121 ரன்னாக (15.5 ஓவர்) இருந்தது. வெற்றிக்கு 25 பந்தில் 41 ரன் தேவையாக இருந்தது. ஆனால் இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

    கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட் இருந்தது. முதல் பந்தில் ரன் எடுக்கவில்லை. 2-வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டாலும் மேனகா சிங் ரன்-அவுட் ஆனார். 3-வது பந்தில் யாஸ்திகா பாட்டியா (2 ரன்) எல்.பி.டபிள்யு. ஆனார். இந்தியா 19.3 ஓவரில் 152 ரன் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா 9 ரன் வித்தியாசத்தில் வென்று தங்கப்பதக்கத்தை தட்டி சென்றது. தோல்வி அடைந்த இந்திய பெண்கள் அணி வெள்ளிபதக்கத்தை கைப்பற்றியது.

    காமன்வெல்த் விளையாட்டில் முதல் முறையாக கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இந்திய பெண்கள் அணி வெள்ளி வென்று அசத்தியுள்ளது.

    வெள்ளி வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, "கிரிக்கெட்டும், இந்தியாவும் பிரிக்க முடியாதது. நமது பெண்கள் கிரிக்கெட் அணி காமன் வெல்த்தில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளனர்.

    கிரிக்கெட்டில், முதல் காமன்வெல்த் பதக்கம் என்பதால் இது எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அணியின் அனைவருக்கும் பிரகாசமான எதிர் காலம் அமைய வாழ்த்துக்கள்" என்றார்.

    இதேபோல் நேற்று பதக்கம் வென்றவர்களுக்கும் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×