search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10 நினைவரங்கங்கள் - 36 சிலைகள்: தியாகிகளை போற்றும் திராவிட மாடல் அரசு
    X

    10 நினைவரங்கங்கள் - 36 சிலைகள்: தியாகிகளை போற்றும் திராவிட மாடல் அரசு

    • பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் சிலை.
    • சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் அருங்காட்சியகத்துடன் கூடிய கலைஞரின் நினைவிடம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய பணிகளில் பல்லாயிரக்கணக்கான தலைமுறைகளுக்கும் தனித்தோங்கி நிற்கும் பணி, குமரியில் அய்யன் திருவள்ளுவருக்கு உலகமே கண்டு வியக்கும் வண்ணம் 133 அடி உயரம், 7000 டன் எடை கொண்ட மாபெரும் கற்சிலையை 9 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் நிறுவி 2000, ஜனவரி-1 அன்று திறந்துவைத்த திருப்பணியாகும். அவர் அய்யன் திருவள்ளுவர் சிலை போல எண்ணற்ற சிலைகள் மற்றும் மணி மண்டபங்கள் நிறுவி தியாகிகளைப் போற்றியுள்ளார்.

    அவரது வழியில், திராவிட மாடல் ஆட்சியைப் பார்முழுதும் பாராட்டும் வண்ணம் நடத்திவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய இந்தியத் திருநாட்டின் எழுச்சிக்கு விதையாக வித்தாக அமைந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அன்னைத் தமிழ் மொழியைக் காத்திட ஆரூயிர்கள் தந்து போராடிய அற்புதத் தியாகிகள் அனைவரையும் போற்றிப் பாராட்டும் பெருமைக்குரிய சின்னங்களாக சிலைகளையும், மணிமண்படங்களையும் தமிழ்நாட்டில் ஏராளமாக எழுப்பி வருகிறார். இவை அனைத்தும் வருங்கால இளைஞர்களுக்கு நல்வழி காட்டி உணர்வூட்டிடும் உயிரோவியங்களாகும். அவற்றுள் சில வருமாறு:-

    எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உத்தமர் காந்தியடிகளின் சிலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சிலை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் க.அன்பழகன் சிலை, நாவலர் ரா.நெடுஞ்செழியனுக்கு சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில், வெண்கலச் சிலை, அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் அம்பேத்கர் சிலை.

    கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த கி.ராஜ நாராயணனுக்கு கோவில் பட்டியில் சிலையுடன் நினைவரங்கம், காசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக்கப்பட்டு பாரதியாரின் மார்பளவுச் சிலை, நாமக்கல் ஜேடர் பாளையத்தில் அல்லாள இளைய நாயகர் சிலை, பெருங்காம நல்லூர் தியாகிகள் நினைவு மண்டபம், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்ட சிலைகள் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டிய சகோதரர்கள், வ.உ.சி., ஆகியோருக்கு சிலைகள், கிண்டியில் வ.உ.சி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவை வ.உ.சி. பூங்காவில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பர னாருக்கும், மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும், புதுக்கோட்டையில் சமூகச் சீர்திருத்த வேங்கை டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் சிலை, டாக்டர் ப.சுப்பராயனுக்கு சென்னை காந்தி மண்டப வளாகத்தில் சிலை, ராணி மேரி கல்லூரி வளாகத்தில் வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை, அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமுக்கு சிலை.

    கடலூர் காந்தி பூங்காவில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு சிலை, தூத்துக்குடியில் தராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் குவி மாடத்துடன் கூடிய சிலை சென்னையில் முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங்குக்கு சிலை.

    சென்னை காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதர் சிலையுடன் கூடிய மணிமண்டபம், காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவர் சிலையுடன் மணிமண்டபம், நாமக்கல் கவிஞர் சிலை.

    சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் அருங்காட்சியகத்துடன் கூடிய கலைஞரின் நினைவிடம், திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் மணிமண்டபங்கள், இரட்டைமலை சீனிவாசன், அண்ணல் தங்கோ-டாக்டர் மு.வ.வீரன் சுந்தரலிங்கம் சிலைகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

    தென்காசி விசுவநாதப் பேரியில் வெண்ணி காலாடி சிலை, சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலியின் சிலை, சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலை யாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் சிலை மற்றும் அரங்கம் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை 10 நினைவரங்கங்கள் 36 சிலைகள் அமைத்துள்ளார். மேலும் பல தியாகிகளுக்குரிய நினைவுச் சின்னங்களையும் அமைத்து வருகிறார்கள். இவை இந்தியாவிற்கே வழிகாட்டத் தக்கவையாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×