search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    17 பஸ்கள் உடைப்பு எதிரொலி: கடலூர் மாவட்டத்தில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
    X

    கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதமான பஸ்களை காணலாம்.

    17 பஸ்கள் உடைப்பு எதிரொலி: கடலூர் மாவட்டத்தில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

    • விவசாயிகள் மற்றும் பா.ம.க.வினர் போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
    • வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணி இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

    சேத்தியாத்தோப்பு:

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2-வது சுரங்கப்பணிக்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கற்றாழை, கரி வெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலங்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் இழப்பீடு வழங்கி உள்ளது. இந்த இழப்பீடு தொகையை முழுமையாக வழங்கவில்லை. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.

    இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இதில் என்.எல்.சி. நிர்வாகம் கூறியதை ஒரு தரப்பு ஏற்றுக்கொண்டது. மற்றொரு தரப்பு மறுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் என்.எல்.சி. 2-ம் சுரங்க விரிவாக்கப்பணியின் ஒரு பகுதியாக நேற்று காலை சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்க வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கியது. சுமார் 1½ கிலோ மீட்டர் நீளத்துக்கு வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

    விரிவாக்கம் செய்யப்படும் வாய்க்கால் வழியாக என்.எல்.சி. சுரங்க நீர் பரவனாற்றுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக என்.எல்.சி. நிறுவனத்துக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாய்க்கால் வெட்டும் பணி நடந்து வருகிறது.

    தற்போது அந்த பகுதியில் விவசாயிகள் நெற்பயிரிட்டுள்ளனர். பச்சை பசேலென்று செழித்து வளர்ந்துள்ள நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டுவதை அறிந்த விவசாயிகள் வேதனை அடைந்தனர். அவர்கள் வாய்க்கால் வெட்டும் பணியை தடுக்க முயன்றனர்.

    ஆனால், 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் விவசாயிகள் அந்த பணியை தடுக்க முடியவில்லை.

    விளை நிலங்களில் நெற்பயிர்களை அழித்து வருவதை கண்டித்து சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், என்.எல்.சி.க்கு இடம் கையகப்படுத்துவதை எதிர்த்தும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன.

    பண்ருட்டி, விருத்தாசலம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 17 பஸ்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டது. இதனால் நேற்று இரவு ஒரு சில பஸ்கள் இயக்கப்படாமல் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை முதல் பஸ்கள் வழக்கம்போல் இயங்கியது.

    விவசாயிகள் மற்றும் பா.ம.க.வினர் போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வளையமாதேவி கிராமத்தில் நேற்று 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    போராட்டம் தீவிரம் அடைய கூடும் என்பதால் வெளிமாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சூப்பிரண்டு தலைமையில் 750 போலீசார் இன்று கடலூர் வந்தனர். அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    குறிப்பாக சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணி இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×