என் மலர்
கடலூர்
- சோதனையில் ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுன்டிங் மிஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
- விளைநிலத்தில் தற்காலிகமாக செட் அமைத்து கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் அதர்நத்தம் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் விளைநிலத்தை வாடகைக்கு எடுத்த நபர்கள் அங்கு கள்ளநோட்டுகள் அச்சடித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு அதிரடியாக நுழைந்து போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுன்டிங் மிஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவ இடத்தில் காவல்துறை சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரை உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளைநிலத்தில் தற்காலிகமாக செட் அமைத்து கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
நிலத்தின் உரிமையாளரான வி.சி.க. நிர்வாகி செல்வம் தலைமறைவானதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
- முந்திரி மரங்கள் அழிக்கப்பட்டதை கண்டித்து அதே இடத்தில் முந்திரி நடும் போராட்டத்தை நடத்தினர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் மலையடிகுப்பத்தில் தோல் ஆலைக்கு நிலம் எடுத்ததற்கு எதிராக விவசாயிகள், கம்யூனிஸ்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முந்திரி மரங்கள் அழிக்கப்பட்டதை கண்டித்து அதே இடத்தில் முந்திரி நடும் போராட்டத்தை நடத்தினர்.
விவசாயிகளின் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பங்கேற்றார். இதையடுத்து விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
அப்போது மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டி அளித்து கொண்டிருந்தபோது சண்முகத்தை தள்ளிக்கொண்டு மற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் 27 வழிப்பறி மற்றும் குற்ற வழக்குகள் உள்ளது.
- கொள்ளையன் ஸ்டீபன் பகல் நேரத்தில் மட்டுமே திருடும் பழக்கம் உள்ளவர்.
சிதம்பரம்:
துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட கொள்ளையனிடம் விசாரணை நடத்த பல்வேறு மாவட்ட போலீசார் கடலூர் வருகிறார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம் படுகையை சேர்ந்தவர் கஜேந்திரன். சாப்ட்வேர் ஊழியர்.
இவர் கடந்த 18-ந் தேதி தனது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 20 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கஜேந்திரன் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அண்ணாமலை நகர் மெயின் ரோட்டில் வாகன சோதனையின் போது ஒருவர் சிக்கினார். அவரிடம் விசாரித்த போது கஜேந்திரன் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.
அவரது பெயர் ஸ்டீபன் (வயது30). கன்னியாகுமரி மாவட்டம் காட்டுவிளையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்த போது கஜேந்திரன் வீட்டில் கொள்ளையடித்த நகைகளை சிதம்பரம் அடுத்துள்ள சித்தலப்பாடி சாலையோராம் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
அதனை பறிமுதல் செய்வதற்காக அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், போலீஸ்காரர் ஞானப்பிரகாசம் உள்ளிட்ட போலீசார் ஸ்டீபனை சித்தலப்பாடிக்கு அழைத்து சென்றனர்.
சித்தலப்பாடி சாலையில் சென்ற போது ஸ்டீபன் அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் ஞானப்பிரகாசத்தை கையில் வெட்டினார். மேலும் இன்ஸ்பெக்டரையும் தாக்க முயன்றார். இதனால் சுதாரித்து கொண்ட இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் ஸ்டீபன் காலில் சுட்டார்.
இதில் அவரது கால் முட்டியில் குண்டு பாய்ந்து ஸ்டீபன் சுருண்டு விழுந்தார். அவர் அண்ணாமலைநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே மருத்துவமனையில் கொள்ளையன் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் ஞானப்பிரகாசமும் சேர்க்கப்பட்டு உள்ளார்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைது செய்யப்பட்ட ஸ்டீபன் மீது தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் 27 வழிப்பறி மற்றும் குற்ற வழக்குகள் உள்ளது. மேலும் அவர் கேரளாவிலும் கைவரிசை காட்டி உள்ளார்.
கொள்ளையன் ஸ்டீபன் பகல் நேரத்தில் மட்டுமே திருடும் பழக்கம் உள்ளவர். திருடும் நகைகளை உடனடியாக விற்பனை செய்து அந்த பணத்தில் அழகிகளுடன் உல்லாசமாக இருப்பது வழக்கம் என போலீசார் தெரிவித்தனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பெண்ணை மனைவியாக வைத்திருந்தததாகவும் போலீசார் தெரிவித்தனர். பிரபல கொள்ளையன் ஸ்டீபன் பிடிபட்டதை தொடர்ந்து அவரிடம் விசாரிக்க பல்வேறு மாவட்ட போலீசார் கடலூருக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். ஸ்டீபனிடம் அதிரடி விசாரணை நடத்த உள்ளனர்.
- கோயம்பேடு பஸ் நிலையம் பூங்காவாக மாற்றப்படும்.
- 158 நிதிநிலை அறிக்கையை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களை வகுப்பதிலும், நிதி நிலை அறிக்கையை தயாரிப்பதிலும் அரசுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற 2003-2004-ம் ஆண்டு முதல் பா.ம.க. சார்பாக பொது நிழல் நிலை அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று பொது நிழல் நிதி நிலை அறிக்கையை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டனர்.
இந்த அறிக்கையில் மொத்தம் 109 தலைப்புகளில் 359 யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.5,43,442 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,91,602 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப் பான முறையில் கையாளு வதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,02,010 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்ப தால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.
நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.5,68,978 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4,97,123 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்ப தற்காக அசலாக செலுத்தப் படும்.
தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் 6.5 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ள நிலையில், அவற்றை நிரப்ப நடப்பாண்டில் 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும்.
அடுத்த 4 ஆண்டுகளில் தமிழக அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு மொத்தம் 7.5 லட்சம் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்
தொழில், உற்பத்தி, தளவாட மேலாண்மை, உள்ளிட்டவற்றின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
தமிழ்நாட்டில் ஜூலை 25-ந்தேதி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். இதற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்படும்.
உள்ளாட்சி அமைப்பு களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஜனவரி 25-ந்தேதி உலக தமிழ் மொழி நாளாக கடைபிடிக்கப்படும். ஏப்ரல் 1-ந்தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்படும்.
மே 1-ந்தேதி முதல் மது விலக்கு அமுலுக்கு வரும். மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும். புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும். சமையல் கியாஸ் ரூ.318-க்கு வழங்கப்படும்.
பெண்கள் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். வேலையில்லாத இளைஞர் களுக்கு 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்து இருந்தால் ரூ.1000, தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.2000, பிளஸ்-2 தேறியிருந்தால் ரூ.3 ஆயிரம், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.4 ஆயிரம், பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
சென்னையில் அனைத்து பஸ்களிலும் இலவச பயணம், கோயம்பேடு பேருந்து நிலையம் பூங்கா வாக மாற்றப்படும். விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்படும். மின்சார கட்டணம் குறைக்கப்படும்.
- 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வழிபட்டனர்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே காட்டு நெமிலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா நடைபெற்றது.
கோவிலில் இருந்து அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு சிங்க வாகனத்தில் மயானம் நோக்கி புறப்பட்ட போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து அங்காளம்மன் மயானத்திற்கு சென்ற பின்னர் அங்கு ஆடு மற்றும் கோழி பலியிடப்பட்டது. பின்னர் படையல் இடப்பட்ட சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மயானத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான திருமணமான புதுமண பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் முட்டிப்போட்டு குழந்தை வரம் கேட்டு வழிபட்டனர்.
அவர்களுக்கு கோவில் பூசாரி எலுமிச்சை பழம் மற்றும் அங்காளம்மனுக்கு படையலிடப்பட்ட ரத்த சோறு ஆகியவற்றை வழங்கினார்.
இதே போல் கடந்த வருடங்களில் குழந்தை இல்லாமல் வேண்டிக் கொண்ட பெண்கள் குழந்தை பிறந்தவுடன் மயானத்திற்கு வந்து குழந்தை வரம் கொடுத்த அங்காளம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குழந்தையை சூறை விட்டு பின்னர் கோவில் பூசாரியிடம் காணிக்கை வழங்கி தங்களது குழந்தைகளை பெற்று சென்றனர்.
இதேபோல் சுடுகாட்டில் தங்களது முன்னோர்களுக்கு அவர்கள் உயிரோடு இருந்த போது விரும்பி சாப்பிட்ட பழங்கள், கொழுக்கட்டை, சுண்டல், கிழங்கு உணவு பொருட்கள் மட்டுமின்றி குவாட்டர் பாட்டில்கள் , குளிர்பானங்கள், பீடி, சிகரெட் உள்ளிட்டவைகள் வைத்தும் குடும்பத்தோடு வழிப்பட்டனர்.
மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு விழாக் குழுவின் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
- சிக்னல் ஒயர் கட்டானதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
- ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென் பசியார் ரெயில்வே பாலம் கீழ் பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தவறுதலாக சிக்னல் ஒயர் கட்டானதால் (டெலி கம்யூனிகேஷன் ஒயர்) சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரெயில்களை இயக்க முடியவில்லை.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிக்னல் கோளாறை சரி செய்தனர். அதன் பின்னரே ரெயில்கள் இயக்கப்பட்டது.
சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களும், சென்னை மார்க்கமாக செல்லும் ரெயில்களும் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- முறை தவறிய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- காதலனின் செல்போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர்:
அண்ணன்-தங்கை உறவு முறை என கூறி காத லுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்தேன் என கைதான கல்லூரி மாணவி தெரி வித்துள்ளார்.
விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயதுடைய வாலிபர் ஒருவர், ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் தனது வீட்டிலேயே இ-சேவை மையமும் வைத்துள்ளார்.
இவருக்கும், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் 20 வயதுடைய மாணவிக்கும் 2 ஆண்டுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இவர்களது காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கு தெரிந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருவரும் அண்ணன், தங்கை உறவு முறை என்று தெரிந்ததும் முறை தவறிய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே கடந்த சில நாட்களாக வாலிபர், தனது காதலியுடன் பேசுவதை தவிர்த்தார். இருப்பினும் அந்த மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார்.
இந்த நிலையில் மாணவி, தனது காதலனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து காலாவதியான எலி மருந்தை 'டீ'யில் கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மாணவரின் தந்தை, திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மாணவியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்து அவர் காதலனுடன் பேசிய வாட்ஸ்-அப் உரையாடல் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் காதலனின் செல்போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மனைவியை பழிவாங்க குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த அவலம்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள கருவேப்பிலம்பாடியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் கலையரசன் (வயது30). இவரது மனைவி ஷாலினி (26) இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கலையரசன் விஷம் குடித்த நிலையில் குறிஞ்சிப்பாடி ஆரம்ப சுகாதரா நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து புதுச்சத்திரம் போலீசாரிடம் கலையரசன் அளித்த வாக்குமூலத்தில் மனைவி ஷாலினிக்கு என்னை பிடிக்கவில்லை அவர் வேறொரு வாலிபரை காதலித்து வந்தார். ஷாலினி பெற்றோர் வற்புறுத்தலின் பேரிலே அவர் தன்னை திருமணம் செய்தார். வாலிபர் மீது உள்ள காதலால் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து தனக்கு கொடுத்து விட்டார் என கூறியிருந்தார்.
ஆனால் போலீசாரின் விசாரணையில் கலையரசன் தனக்கு தானே குளிர்பானத்தில் பூச்சி மருத்து கலந்து குடித்தது தெரிய வந்தது.
கடந்த மாதம் 13-ந் கலையரசனுக்கு ஷாலினிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த ஷாலினி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் அவரை கடந்த 16-ந் தேதி கலையரசன் சமரசம் செய்து அழைத்து வந்துள்ளார்.
தன்னை அசிங்கபடுத்திய மனைவியை பழிவாங்கவே கலையரசன் தனக்கு தானே குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்ததும், கலையரசன் தனது நண்பர்களிடம் மனைவியை கண்டிப்பாக பழிவாங்க வேண்டும் என கூறியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் கலையரசன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் புதுச்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மனிதநேய கட்சியினர் அனைவரையும் கைது செய்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.
- மறியலில் ஈடுபட்ட 76 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில்:
மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்யக்கோரி பா.ஜ.க. வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க.வினர் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து காட்டுமன்னார் கோவில் போலீசார் மனிதநேய மக்கள் கட்சியினர் 5 பேரை கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி காட்டுமன்னார் கோவில் பஸ் நிலையம் அருகே பா.ஜ.க.வினர் மாவட்ட தலைவர் தமிழழகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதை கேள்விபட்டதும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், மனிதநேய கட்சியினர் அனைவரையும் கைது செய்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.
இந்த நிலையில் பா.ஜ.க.வினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும் முடியவில்லை.
இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 76 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் காட்டுமன்னார் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக் கூடிய 2 ஆயிரம் கோடி வழங்கப்படும்.
- சிறுமி நிதி வழங்கிய தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூரில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீர்வரிசை கொண்டு வந்து வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக் கூடிய 2 ஆயிரம் கோடி வழங்கப்படும். இதன் மூலம் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலையில், தமிழக அரசு நிதி மூலம் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் கடலூரை சேர்ந்த எல்.கே.ஜி படித்து வரும் நன்முகை என்ற சிறுமி தான் சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து ரூபாய் 10 ஆயிரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டத்திற்காக நிதி வழங்கி உள்ளார்.
மேலும் சிறுமி நிதி வழங்கிய தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு ஆதரவாக கடலூரை சேர்ந்த எல்.கே.ஜி படிக்கும் சிறுமி 10 ஆயிரம் ரூபாய் வழங்கிய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பழனிமுத்து மற்றும் அவரின் தாய் தெய்வ நாயகி வீட்டின் முன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் நகரம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் மகன்கள் செல்வகுமார் (வயது 33) மற்றும் சேகர்(30) இவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று சகோதரர்கள் 2 பேருக்கும் மீண்டும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது.
இதனைக் கண்ட அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பழனிமுத்து (38) என்பவர் சண்டையை விலக்க முற்பட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சகோதரர்கள் பழனிமுத்துவிடம் எங்களது குடும்ப சண்டையில் தலையிட நீ யார்? என்று கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இருவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணி அளவில் சண்டையை விலக்க சென்ற முத்துவின் வீட்டின் முற்பகுதியில் மர்ம நபர்கள் அதிகாலை மண்ணெண்ணை நிரப்பிய 2 பாட்டில்களில் தீ வைத்து பழனிமுத்துவின் வீட்டின் முன்பு வீசியுள்ளனர்.
இதில், வீட்டின் முன்புறம் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இந்நிலையில் வெடி சத்தம் கேட்டு வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த வீட்டின் உள் பகுதியில் படுத்திருந்த பழனிமுத்து மற்றும் அவரின் தாய் தெய்வ நாயகி வீட்டின் முன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கொழுந்து விட்டு எறிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து விருத்தாசலம் அனைத்துமகளிர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெ க்டர் சிவகாமி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண்ணெண்ணை குண்டு வீசிய இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- தென்பெண்ணை ஆற்று படுகையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு வெளிப்படுத்தி வருகிறார்கள்.
- ஈரோடு அருகே உள்ள கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளோடு ஒத்துள்ளதை காண முடிகிறது.
புதுப்பேட்டை:
பண்ருட்டி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்று படுகையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் ராஜராஜ சோழன் காலத்து செப்புநாணயம், 1,200 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்து விநாயகர் சிற்பம் மற்றும் அகல் விளக்குகள், கீரல் ஓடுகள், சுடுமண் புகை பிடிப்பான் உள்ளிட்ட பொருட்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது நடத்திய கள ஆய்வில் சுடுமண் குடுவை, குறியீடு ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி வரலாற்று துறை 2-ம் ஆண்டு மாணவர் ராகுல், வரலாற்று ஆர்வலர் பிரதாப் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது பழங்கால மக்கள் பயன்படுத்திய குறியீடு பொறித்த சிவப்பு நிற சுடுமண் குடுவை மற்றும் சிவப்பு, வெள்ளை நிற குறியீடு ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இதில் கண்டெடுக்கப்பட்ட குறியீடு ஓடுகள், ஏற்கனவே ஈரோடு அருகே உள்ள கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளோடு ஒத்துள்ளதை காண முடிகிறது.
அதாவது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இந்த குறியீட்டு காலத்தை கணிக்க முடிகிறது என்று கூறிய தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், தொடர்ந்து எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.