என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட பிரபல கொள்ளையனிடம் விசாரணை நடத்த படையெடுக்கும் வெளி மாவட்ட போலீசார்
    X

    துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட பிரபல கொள்ளையனிடம் விசாரணை நடத்த படையெடுக்கும் வெளி மாவட்ட போலீசார்

    • தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் 27 வழிப்பறி மற்றும் குற்ற வழக்குகள் உள்ளது.
    • கொள்ளையன் ஸ்டீபன் பகல் நேரத்தில் மட்டுமே திருடும் பழக்கம் உள்ளவர்.

    சிதம்பரம்:

    துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட கொள்ளையனிடம் விசாரணை நடத்த பல்வேறு மாவட்ட போலீசார் கடலூர் வருகிறார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம் படுகையை சேர்ந்தவர் கஜேந்திரன். சாப்ட்வேர் ஊழியர்.

    இவர் கடந்த 18-ந் தேதி தனது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 20 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து கஜேந்திரன் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அண்ணாமலை நகர் மெயின் ரோட்டில் வாகன சோதனையின் போது ஒருவர் சிக்கினார். அவரிடம் விசாரித்த போது கஜேந்திரன் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

    அவரது பெயர் ஸ்டீபன் (வயது30). கன்னியாகுமரி மாவட்டம் காட்டுவிளையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் விசாரித்த போது கஜேந்திரன் வீட்டில் கொள்ளையடித்த நகைகளை சிதம்பரம் அடுத்துள்ள சித்தலப்பாடி சாலையோராம் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

    அதனை பறிமுதல் செய்வதற்காக அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், போலீஸ்காரர் ஞானப்பிரகாசம் உள்ளிட்ட போலீசார் ஸ்டீபனை சித்தலப்பாடிக்கு அழைத்து சென்றனர்.

    சித்தலப்பாடி சாலையில் சென்ற போது ஸ்டீபன் அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் ஞானப்பிரகாசத்தை கையில் வெட்டினார். மேலும் இன்ஸ்பெக்டரையும் தாக்க முயன்றார். இதனால் சுதாரித்து கொண்ட இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் ஸ்டீபன் காலில் சுட்டார்.

    இதில் அவரது கால் முட்டியில் குண்டு பாய்ந்து ஸ்டீபன் சுருண்டு விழுந்தார். அவர் அண்ணாமலைநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே மருத்துவமனையில் கொள்ளையன் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் ஞானப்பிரகாசமும் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைது செய்யப்பட்ட ஸ்டீபன் மீது தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் 27 வழிப்பறி மற்றும் குற்ற வழக்குகள் உள்ளது. மேலும் அவர் கேரளாவிலும் கைவரிசை காட்டி உள்ளார்.

    கொள்ளையன் ஸ்டீபன் பகல் நேரத்தில் மட்டுமே திருடும் பழக்கம் உள்ளவர். திருடும் நகைகளை உடனடியாக விற்பனை செய்து அந்த பணத்தில் அழகிகளுடன் உல்லாசமாக இருப்பது வழக்கம் என போலீசார் தெரிவித்தனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பெண்ணை மனைவியாக வைத்திருந்தததாகவும் போலீசார் தெரிவித்தனர். பிரபல கொள்ளையன் ஸ்டீபன் பிடிபட்டதை தொடர்ந்து அவரிடம் விசாரிக்க பல்வேறு மாவட்ட போலீசார் கடலூருக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். ஸ்டீபனிடம் அதிரடி விசாரணை நடத்த உள்ளனர்.

    Next Story
    ×