search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2 ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து வீடு சேதம்- குடும்பத்துடன் உயிர் தப்பிய தொழிலாளி
    X

    பாறை உருண்டு சேதமடைந்துள்ள வீட்டை படத்தில் காணலாம்.

    2 ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து வீடு சேதம்- குடும்பத்துடன் உயிர் தப்பிய தொழிலாளி

    • பலத்த மழை காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டு 2 ராட்சத பாறைகள் திடீரென கிருஷ்ணமூர்த்தி வீட்டின் மீது உருண்டு விழுந்தது.
    • மக்கள் எந்த நேரத்திலும் பாறைகள் உருண்டு விழலாம் என்று பீதி அடைந்து உள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இரட்டை கரடு பகுதியில் மலை அடிவாரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த மலைப்பகுதியில் பெரிய, பெரிய ராட்சத பாறைகள் உள்ளன.

    மலை அடிவாரத்தில் கிருஷ்ணமூர்த்தி (வயது 48) என்பவர் வீடு உள்ளது. கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி தமிழ்ச்செல்வி, மகன் ஸ்ரீதருடன் வீட்டில் வசித்து வருகிறார். கிருஷ்ண மூர்த்தி கூலி தொழிலாளி.

    இந்நிலையில் இரட்டைக்கரடு பகுதியில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ண மூர்த்தி தனது மனைவி, மகனுடன் வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    பலத்த மழை காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டு 2 ராட்சத பாறைகள் திடீரென கிருஷ்ணமூர்த்தி வீட்டின் மீது உருண்டு விழுந்தது.

    ஒரு பாறை வீட்டின் சமையல் அறையிலும், மற்றொரு பாறை வீட்டின் ஹாலிலும் உருண்டு விழுந்தது. இதில் சமையல் அறையின் ஒரு பகுதி மற்றும் வீட்டின் ஹால் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. சமையலறையில் இருந்த ஸ்டவ், பாத்திரம், குடம் போன்றவை முற்றிலும் சேதமடைந்தது.

    இரவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் கிருஷ்ணமூர்த்தி எழுந்து வந்து பார்த்தார். அப்போது பாறைகள் வீட்டின் மீது உருண்டு விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    நல்ல வாய்ப்பாக பாறைகள் கிருஷ்ணமூர்த்தி தூங்கிக் கொண்டிருந்த அறையில் விழாததால் அவர் குடும்பத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும் அப்பகுதி மக்கள் எந்த நேரத்திலும் பாறைகள் உருண்டு விழலாம் என்று பீதி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×