search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரெயில் நிலையங்களில் வயதான பெற்றோர்களை விட்டு செல்லும் பிள்ளைகள்- காப்பகங்களில் பராமரிப்பு
    X

    ரெயில் நிலையங்களில் வயதான பெற்றோர்களை விட்டு செல்லும் பிள்ளைகள்- காப்பகங்களில் பராமரிப்பு

    • மனைவிக்கு பயந்து தன்னை பார்ப்பதற்கும், பேசுவதற்கும்கூட முடியாமல் ஓடிச்செல்கின்றானே என்று வருந்தும் பெற்றோர்களும் ஏராளம்.
    • அனாதையாக விடப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    பெற்றெடுத்தது முதல் குழந்தைகளை படிக்க வைத்து, ஆளாக்கி நல்ல பணியில் அமரச் செய்து திருமணமும் செய்து வைத்து தனது குழந்தைகளுக்காகவே வாழ்ந்து வந்த எத்தனையோ பெற்றோர் இன்று மகனிடமும், மருமகளிடமும் ஒரு ஊதியமில்லாத ஊழியராக வாழ்ந்து வருகின்றனர்.

    மனைவியின் சொல்லை கேட்டு அப்பா வெளியே போய் வரலாம் என்று கூட்டிக்கொண்டு போய் ரெயில் நிலையத்திலோ, கோவில் அருகிலோ நிற்க வைத்து விட்டு இதோ வருகிறேன் என்று சொல்லி சென்று விடுகின்றனர். இப்படி சென்றுவிட்ட தனது மகனை நினைத்து முதியோர்கள் அலைந்து திரிகின்றனர். அப்பா, அம்மா என்று பின்னாலேயே அலைந்த மகன் இன்று மனைவிக்கு பயந்து தன்னை பார்ப்ப தற்கும், பேசுவதற்கும்கூட முடியாமல் ஓடிச்செல்கின்றானே என்று வருந்தும் பெற்றோர்களும் ஏராளம்.

    ஆட்டை விற்று, மாட்டை விற்று, நகைகளை நிலங்களை பிள்ளைக்காக விற்று படிக்க வைத்து உயரச் செய்து எனது மகன் இப்படி இருக்கிறான், அப்படி இருக்கிறான் என்று கர்வம் கொண்டு பெருமையடையும் பெற்றோர்கள் பலர் தற்போது முதியோர் இல்லத்தில் உள்ளனர். உணவிலிருந்து உறக்கம் வரை குழந்தைகளுக்காகவே வாழ்பவர்கள் பெற்றோர்கள்.

    தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தன்மானத்தைகூட தூக்கி எறிபவர்கள்தான் பெற்றோர்கள். அப்படிப்பட்ட பெற்றோர் இன்று வீட்டிலிருந்து தூக்கி எறியப்படுகின்றனர்.

    அவ்வாறு அனாதையாக விடப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    1 மாதத்திற்கு குறைந்தது 30 பேர் அனாதையாக விடப்பட்டு மீட்கப்பட்டு காப்பகத்தில் அரவணைக்கப்படுகின்றனர். அதிகம் பாதிக்கப்படுவது விதவை பெண்கள்தான். கணவன் இருக்கும்வரை அவர் ஆதரவுடன் இருந்த பல பெண்கள் கணவன் இறந்த பின்னர் நிர்கதியாக நிற்பது அதிகமாகி வருகிறது.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் சுற்றித்திரிந்த கமலேஷ் குமாரி (75), சமீரா அப்ரோஜ் (70), புஷ்பா (60), சுரேந்தர் சவுத்ரி (57), சவ்ஹான் (50) ஆகிய 5 முதியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சென்னை கோட்ட சீனியர் கமாண்டர் முத்துக்கும் ரேசன் மற்றும் அதிகாரிகள் ரோகித்குமார், சைனி, போலீஸ் ஏட்டு பாண்டி தலைமையில் ரெயில்வே போலீசாரால் மீட்கப்பட்டு இவர்கள் முதியோர் காப்பகத்தில் விடப்பட்டுள்ளனர்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தவித்தவர்களில் எண்ணூரை சேர்ந்த 75 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை கமலேஷ் குமாரியும் ஒருவர். இவர் இரண்டு முதுகலை பட்டங்களை படித்தவர். 7 மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர். சென்னையில் உள்ள இவரது சொத்தை யாரோ ஏமாற்றி அபகரித்துவிட்டதாலும், உறவினர்கள் யாரும் இவரை கண்டு கொள்ளாததாலும் ரெயில் நிலையத்தில் ஆதரவின்றி தவித்தார். அவர் மீட்கப்பட்டு ஒரு முதியோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட் டுள்ளார்.

    இதுகுறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஊருக்கு சென்று வருவோம் என தந்தையையோ, தாயையோ ரெயிலில் கூட்டி வந்து ரெயில் நிலையங்களில் விட்டு செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலும் பெண்களே அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சமீபத்தில் பெண் ஒருவர் 3 நாட்களாக ரெயில் நிலையத்தில் ஒரு ஓரத்தில் சாப்பாடு இல்லாமல் தவித்து கொண்டிருப்பதை அறிந்து மீட்க சென்றோம்.

    எங்களை கண்டதும் கதறி அழுத மூதாட்டி ஏதோ தெரியாமல் செய்துவிட்டான் என் மகன்... அவனை ஒன்னும் செஞ்சிடாதீங்க என்று கெஞ்சி கேட்டு கதறினார்.

    அவரை சமாதானப்படுத்தி வாருங்கள், நாங்கள் அழைத்து செல்கிறோம் என்று அழைத்து சென்று அவருக்கு உணவளித்து உடைகளை வழங்கி அருகில் உள்ள காப்பகத்தில் சேர்த்தோம். நன்றாக வாழ்ந்தவர். அவர் முகவரியை கூட சொல்ல மறுத்துவிட்டார் என்றார்.

    வருடத்திற்கு கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கானோர் அனாதையாக ஆதரவின்றி தவிக்கவிடப்படுகின்றனர்.

    தள்ளாத சூழ்நிலையில் விடப்பட்ட முதியோர்களை காப்பகங்கள் அரவணைத்து பாதுகாக்கின்றன. பெரிய மேட்டில் சென்னை மாநகராட்சி மற்றும் இந்திய சமுதாய நிறுவனம் இணைந்து ஆதரவற்ற வர்களை பாதுகாத்து வருகிறது. இங்குள்ள காப்பக நிர்வாகி கிருத்திகா கூறியதாவது:-

    உறவுகளால் அதிகம் கைவிடப்படுபவர்களில் 55 வயதில் இருந்து 85 வயதானவர்களே அதிகம். குடும்பத்தினரின் கடும்சொல் தாங்காமல் கண்ணீர் ததும்ப வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தங்கியிருந்தோரை மீட்டு எங்கள் காப்பகத்தில் வைத்து பாதுகாத்து வருகிறோம். உணவு, உடை வழங்கி மருத்துவ வசதி முதல் அனைத்து வசதிகளையும் செய்து அவர்களின் கடந்த கால நிகழ்வுகளை மறந்து காப்ப கத்தில் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் பொழுதை கழிக்க ஏற்பாடு செய்கிறோம்.

    முடிந்தளவு அவர்களின் உறவுகளுடன் பேசி கவுன்சிலிங் கொடுத்து சேர்த்தும் வைக்கிறோம்.

    பெரியமேடு ஸ்டிரிஸ்கர்ஸ் தெரு காப்பகத்தில் 25 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆதரவின்றி வந்தவர்கள் தான் என்றார்.

    தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்தான் அதிகமாக ஆதரவற்றோர் விடப்படுகின்றனர். அதிகமாக சென்னையில் வருடத்திற்கு 2000-க்கும் மேற்பட்டோர் ஆதரவின்றி கோவில்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் காணப்பட்டு மீட்கப்படுவதாக முதியோர் காப்பகங்கள் தெரிவிக்கின்றன.

    கண் விழித்து இரவு பகலாக நமக்காக உழைத்த பெற்றோரை கண் கலங்க வைத்து ஏதோ அறியாத புது இடத்தில் தவிக்கவிட்டு செல்லும் இவர்களை கல் நெஞ்சம் கொண்டவர் என்பதா? இல்லை பிறர் கண் கலங்குவதை வேடிக்கை பார்க்கும் நன்றி கெட்ட மனிதர் என்பதா? காலமே பதில் சொல்லும்.

    Next Story
    ×