search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆன்லைன் மூலம் 2 பேரிடம் ரூ.23 லட்சம் பணமோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
    X

    ஆன்லைன் மூலம் 2 பேரிடம் ரூ.23 லட்சம் பணமோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    • பாலசுப்பிரமணியன் வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.7 லட்சத்து 9 ஆயிரத்து 329-யை செலுத்தியுள்ளார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்த வண்ணமாக உள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம், கமிஷன் பெறலாம் என்று மெசேஜ் அனுப்பி மீண்டும் 2 பேரிடம் ரூ.23 லட்சம் வரை மர்ம நபர்கள் பணமோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணியன். இவரது மனைவிக்காக செல்போன் மூலம் பகுதி நேர வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனில் டெலிகிராம் என்ற சமூக வலைதளத்தில் பகுதிநேரம் வேலை இருப்பதாகவும், அதில் குறைந்த முதலீடு செய்தால், அதிக சம்பளமும், கமிஷனும் கிடைக்கும் என்று குறுந்செய்தி வந்தது. அதனை நம்பிய பாலசுப்பிரமணியன் அந்த லிங்கை கிளிக் செய்ததன் மூலம் வந்த செல்போன் எண்ணில் மர்ம நபர் ஒருவரை தொடர்பு கொண்டார். அந்த மர்ம நபர் கூறியபடி பாலசுப்பிரமணியன் வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.7 லட்சத்து 9 ஆயிரத்து 329-யை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் அந்த மர்மநபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் என்று வந்தது. இதனால் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று கிருஷ்ணகிரி சாமந்தமலை அருகே தளவாய் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமாருக்கு செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு குறுந்செய்தி வந்தது. அதில் அதிக லாபம் மற்றும் கமிஷனுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக இருந்தது. இதனை நம்பிய அருண்குமார் மர்ம நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அவர் கூறியபடி வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சத்து 59 ஆயிரத்து 470-யை செலுத்தியுள்ளார்.

    அதன்பின்னர் அந்த மர்ம நபரை அருண்குமார் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. அதன்பின்னர் அருண்குமார் தன்னை மர்மநபர் ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் 2 பேரிடம் ரூ.23 லட்சம் வரை மர்ம நபர் பணமோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×