search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    280 தொழில்முனைவோர்களின் தொழில் மனைகளுக்கு பட்டா- அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
    X

    280 தொழில்முனைவோர்களின் தொழில் மனைகளுக்கு பட்டா- அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

    • பட்டா வழங்க பரிந்துரைத்து அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
    • 1,245 ஏக்கர் நிலம் பட்டா வழங்குவதற்காக தமிழ்நாடு சிட்கோ பெயரில் நில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று சென்னை, கிண்டி, சிட்கோ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 208 தொழில் முனைவோர்களுக்கு பட்டா வழங்கி பேசியதாவது:-

    தொழில் முனைவோர்கள் நிலத்தினை வைத்து கடன் பெறுவதும், தொழிலை விரிவுபடுத்தவும் முடியாமல் பல சிக்கல்களை சந்தித்து வந்தனர். கழக அரசு பொறுப்பேற்றவுடன், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென அரசிடம் தொழில் முனைவோர்கள் கோரிக்கை வைத்தனர்.

    முதல்கட்டமாக 32 தொழிற் பேட்டைகளில் 1,569 ஏக்கர் நிலங்களுக்கான வகைப்பாட்டினை மாற்றி, பட்டா வழங்க பரிந்துரைத்து அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில், 1,245 ஏக்கர் நிலம் பட்டா வழங்குவதற்காக தமிழ்நாடு சிட்கோ பெயரில் நில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து, 28.3.2023 அன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் கிண்டி, அம்பத்தூர் தொழிற் பேட்டையை சேர்ந்த 5 தொழில் முனைவோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக, இன்று 9 தொழிற்பேட்டைகளில் உள்ள 280 தொழில் முனைவோர்க ளுக்கு 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்திற்கான பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஏனையோர்க்கு படிப்படியாக பட்டா வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்".

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான இரு பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், சிட்கோ தொழிற் பேட்டையில் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் 25 தூய்மை பணியாளர்களுக்கு சீருடையும் அமைச்சரால் வழங்கப்பட்டது.

    Next Story
    ×