search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    44 மின்சார ரெயில்கள் ரத்து: சென்னையில் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
    X

    44 மின்சார ரெயில்கள் ரத்து: சென்னையில் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது

    • இன்று காலை 11 மணிக்கு தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கின.
    • பயணிகள் மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாக அன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்றும், அந்த நேரத்தில் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கின.

    இதையடுத்து சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை-அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும், மறுவழித்தடத்தில் தாம்பரம்-கடற்கரை, செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும் என 44 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்தனர். இதையடுத்து பயணிகள் மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதன் காரணமாக இன்று மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. எனவே பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 3.15 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் பஸ்கள் விடப்பட்டுள்ளன.

    பாரிமுனையில் இருந்து அண்ணாசாலை வழியாக தாம்பரம் வரை 60 பஸ்களும், பாரிமுனையில் இருந்து தி.நகர், எழும்பூர் வழியாக தாம்பரம் வரை 20 பஸ்களும், கிண்டியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 10 பஸ்களும், கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரம் வரை 30 பஸ்களும், பாரிமுனையில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 20 பஸ்களும், தி.நகரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 10 பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன. இதையடுத்து அந்த பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்தனர்.

    மேலும், பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.55, பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55, பிற்பகல் 2.40, பிற்பகல் 2.55 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. மறு வழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, பகல் 12, பகல் 1 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

    Next Story
    ×