search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு 5 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கீடு
    X

    ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு 5 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கீடு

    • ரஷ்யாவில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்களிடையே மருத்துவம் மிகவும் பிரபலமான படிப்பாக உள்ளது.
    • ரஷ்ய மருத்துவ படிப்புகள் மாணவர்களுக்கு கோட்பாட்டு அறிவு, நடைமுறை திறன்களில் வலுவான அடித்தளத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    மருத்துவ கல்வி படிப்பில் உலக அளவில் ரஷியா 8- வது இடத்தை பெற்று திகழ்கிறது.

    இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை ரஷ்யா கடைப்பிடித்து வருவதாலும், மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதாலும், மருத்துவக் கல்வியைப் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா விருப்பமான தேர்வுகளில் முதன்மையாக உள்ளது.

    2023-24-ம் கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு 5000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் ஒதுக்கி உள்ளன.

    இந்த மருத்துவப் படிப்புகளுக்கான நேரடி மாணவர்கள் சேர்க்கை இன்றும் நாளையும் சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது.

    இதையொட்டி அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சி நடந்தது. இந்தக் கண்காட்சியில் ரஷ்யாவின் முன்னணி கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. இதில் எம்.பி.பி.எஸ். மட்டுமல்லாது பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

    இன்று நடந்த கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அதிகாரிகள் ரஷியாவில் மருத்துவ படிப்பு படிப்பதினால் கிடைக்கும் நன்மைகள், சலுகைகள் குறித்து விளக்கி கூறினார்கள்.

    இது தொடர்பாக ரஷ்யாவின் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் (நீட் ) தேர்ச்சி பெற்ற, 12-ம் வகுப்பில் முக்கிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்ற இந்திய மாணவர்கள் (எஸ்.சி./எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40 சதவீதம் மட்டுமே), ரஷ்யா மருத்துவத்தில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    தமிழ் வழியில் படித்த மாணவர்களும் எம்.பி.பி.எஸ்., பி.இ. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு முன் தகுதித் தேர்வுகள் தேவை இல்லை.

    ஆங்கிலம் வழியிலான படிப்புகளுக்கு பல்கலைக்கழகம் மற்றும் படிக்கும் ஊரைப் பொறுத்து, படிப்புக் கட்டணம் ஆண்டுக்கு 3500 முதல் 6000 அமெரிக்க டாலர் வரை செலவாகும். இருந்தாலும் கடந்த காலங்களைப் போலவே, ரஷ்ய அரசாங்கத்தின் வருடாந்திர உதவித்தொகை திட்டம் வழியாக இந்த ஆண்டும் 100 இந்திய மாணவர்களுக்கு 100 சதவீதம் உதவித்தொகை வழங்கப்படும். இதன் மூலம் ரஷ்யாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை, பட்ட மேற்படிப்புத் திட்டங்களை இலவசமாக அவர்கள் படிக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இது குறித்து சென்னையில் உள்ள தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் அவ்தீவ் ஓலெக் நிகோலயேவிச் கூறுகையில், "உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர்தர மருத்துவக் கல்வியை வழங்குவதில் ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் நீண்டகாலமாக நற்பெயரை பெற்றுள்ளன. விரிவான பாடத்திட்டம், அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள், மேம்பட்ட வசதிகள் ஆகியவற்றின் மூலம் தங்கள் நாட்டில் மருத்துவக் கல்வியை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு வலுவான கற்றல் சூழலை ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. கடந்த 60 ஆண்டுகளாக இந்திய மாணவர்கள் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் படித்து வருகிறார்கள்.

    ரஷ்யாவில் உயர் கல்விக்கான செலவு ஒப்பீட்டளவில் குறைவு. ஏனென்றால் ரஷ்யக் கூட்டமைப்பு அரசாங்கத்தால் கல்விக்கு அதிக மானியம் வழங்கப்படுகிறது. சர்வதேச விண்ணப்பதாரர்களுக்கான அரசாங்க ஆதரவு, தகவமைப்புத் திட்டங்களை ரஷ்ய அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இந்திய மாணவர்களுக்கான சிறப்புத் தகவமைப்பு திட்டங்கள் மூலம் பல்கலைக்கழகங்களும் பல உதவிகளை வழங்கி வருகின்றன"என்றார்.

    ரஷ்யாவில் மருத்துவக் கல்வி பற்றி ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சி. ரவிச்சந்திரன் கூறுகையில், "ரஷ்யா முழுவதும் உள்ள 600-க்கும் மேற்பட்ட அரசுப் பல்கலைக்கழகங்களில் 200 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர். ரஷ்யாவில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்களிடையே மருத்துவம் மிகவும் பிரபலமான படிப்பாக உள்ளது. தற்போது, 70 ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்தியாவில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இணையான அந்நாட்டு எம்.டி. படிப்பை அனைத்து ரஷ்யப் பல்கலைக்கழகங்களும் வழங்கி வருகின்றன. இந்திய தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ள சமீபத்திய வழிகாட்டுதல்களையும் கடைபிடித்து வருகின்றன.

    உலகக் கல்வி தரவரிசையில் ரஷ்ய உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. ரஷ்ய மருத்துவ படிப்புகள் மாணவர்களுக்கு கோட்பாட்டு அறிவு, நடைமுறை திறன்களில் வலுவான அடித்தளத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேகமாக வளர்ந்து வரும் சுகாதாரத் துறை சார்ந்த சவால்களை எதிர்கொள்ளவும் அவர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள்.

    2023-24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை / முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு தாங்கள் பெற்றுள்ள தகுதி சார்ந்த சான்றுகளையும் அவர்கள் கொண்டு வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையை தொடர்ந்து வருகிற 16-ந்தேதி மதுரையிலும், 17-ந்தேதி திருச்சியிலும், சேலத்தில் 18-ந்தேதியும், கோவையில் 19-ந்தேதியும் ரஷிய கல்வி கண்காட்சி நடைபெற உள்ளது.

    Next Story
    ×