search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விஷவாயு தாக்கி 7ம் வகுப்பு மாணவர் பலி- சாக்கடையில் தங்க துகள்கள் சேகரித்த போது பரிதாபம்
    X

    விஷவாயு தாக்கி 7ம் வகுப்பு மாணவர் பலி- சாக்கடையில் தங்க துகள்கள் சேகரித்த போது பரிதாபம்

    • சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    நாமக்கல் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்தவர் பாலன் (வயது 40).

    இவர் கோவை உக்கடம் பகுதியில் தங்கியிருந்து தங்க துகள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சாக்கடை கால்வாயில் மண்ணை அள்ளி அதில் தங்க துகள்கள் இருந்தால் அதனை பிரித்து எடுத்து விற்பனை செய்கிறார்.

    கடந்த சில நாட்களாக பாலனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தங்க துகள்கள் சேகரிக்க செல்லவில்லை என தெரிகிறது.

    இதனையடுத்து தனது தந்தைக்கு உதவி செய்வதற்காக பாலனின் மகன் விக்னேஷ் (13)நாமக்கல்லில் இருந்து கோவை வந்தார்.

    இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், விக்னேஷ் இன்று காலை தனது உறவினர்கள் சிலருடன் வெரைட்டிஹால் ரோடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் மண்ணை அள்ளி தங்க துகள்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சாக்கடையில் இருந்து விஷவாயு தாக்கியது. இதில் விக்னேஷ் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் சிறுவனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    விசாரணையில், தங்க நகை பட்டறைகளில் பயன்படுத்தப்படும் சிலவகை கெமிக்கல்கள் சாக்கடை நீரில் கலந்ததால் அதன் மூலம் விஷவாயு பரவி சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×