என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழ்நாடு முழுவதும் கூலிப்படை-ரவுடிகளை ஒழிக்க அதிரடி நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் அருண்
- ரவுடி ஒழிப்பு நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.
- சென்னையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரவுடி ஒழிப்பு நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.
தமிழகம் முழுவதும் 21 ஆயிரம் ரவுடிகள் இருப்பதாக கணக்கிட்டு போலீசார் ஏற்கனவே தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட உள்ளன.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரை ஒழித்துக்கட்ட புதிய போலீஸ் கமிஷனர் அருண் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உள்ள சரித்திர பதிவேடுகளை தூசு தட்டுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார். போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வரும் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றவர்களில் யார்-யார் எங்கு இருக்கிறார்கள்? அவர்களின் தற்போதைய நிலை என்ன? என்பது பற்றிய விவரங்களை புள்ளி விவரத்தோடு பட்டியல் போட்டு வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏ.பிளஸ், ஏ, பி, சி என 4 பிரிவுகளாக ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தயார் நிலையில் உள்ளது. தாதாக்கள் போல செயல்படும் ரவுடிகள் ஏ.பிளஸ், பிரிவிலும், அவர்களுக்கு கீழே ரவுடி கும்பலுக்கு தலைமை தாங்கும் ரவுடிகள் ஏ பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர்.
சிறிய குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் பி மற்றும் சி பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரை பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரித்து வைத்திருக்க வேண்டும் என்கிற உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் 6 ஆயிரம் ரவுடிகள் போலீசாரின் சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 750-க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். போலீசுக்கு பயந்து ரவுடிகள் பலர் வெளி மாநிலங்களுக்கும் தப்பிச் சென்றிருந்தனர்.
இவர்களில் சிலர்தான் வெளிமாநிலங்களில் இருந்து வந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதையும் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இதுபோன்ற நபர்களையெல்லாம் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ரவுடிகளை ஒழித்துக்கட்டுவதற்காக சென்னை மாநகர காவல் துறையில் உருவாக்கப்பட்டுள்ள 'பருந்து செயலி'யை போலீசார் முறையாக பராமரித்து ரவுடி ஒழிப்பில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் மற்றும் 12 துணை கமிஷனர்கள் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை மத்திய குற்றப் பிரிவில் ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுறுசுறுப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் ரவுடிகளை ஒழிப்பதில் தீவிரம் காட்டி செயல்பட்டனர். சிறையில் உள்ள ரவுடிகள் வெளி வந்ததும் அவர்களை தீவிரமாக கண்காணித்து குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
ரவுடிகள் மத்தியில் 'கேங் ஸ்டார் டீம்' என்று அழைக்கப்பட்டு வரும் இந்த ரவுடி ஒழிப்புப் பிரிவை பலப்படுத்தவும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதே போன்று சட்டம்-ஒழுங்குப் பிரிவில் மின்னல் வேகத்தில் செயல்படும் இன்ஸ்பெக்டர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரை இடமாறுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இப்படி ரவுடிகள் ஒழிப்பில் போலீசார் தீவிரம் காட்டி வருவதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்