search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடிகை கவுதமி புகார் எதிரொலி: காரைக்குடி தொழிலதிபர் வீட்டில் விடிய விடிய போலீசார் சோதனை
    X

    நடிகை கவுதமி புகார் எதிரொலி: காரைக்குடி தொழிலதிபர் வீட்டில் விடிய விடிய போலீசார் சோதனை

    • ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட அறைகளுக்கு சென்னை குற்றப்பிரிவு போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.
    • விரைவில் அழகப்பன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    காரைக்குடி:

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கவுதமி தான் சம்பாதித்த பணத்தில் தமிழகத்தின் பல இடங்களில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கியிருந்தார்.

    இதனை விற்பனை செய்வதற்காக குடும்ப நண்பராக இருந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த தொழிலதிபர் அழகப்பன் என்பவருக்கு கவுதமி பவர் பத்திரம் மூலம் அதிகாரம் கொடுத்ததாக தெரிகிறது.

    ஆனால் அழகப்பன் கவுதமியின் சொத்துக்களை விற்று அதற்குரிய பணத்தை முழுமையாக தராமல் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கவுதமி சொத்துக்களின் ஆவணங்களை முறைகேடு செய்து வேறு பெயருக்கு மாற்றி விட்டதாகவும் புகார் எழுந்தது.

    இதன் மூலம் தன்னை ஏமாற்றி பல கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கவுதமி சென்னை மாநகர மத்திய குற்றப்புலனாய்வு போலீசில் புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் காரைக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் அழகப்பன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் சொத்து மோசடி தொடர்பாக விசாரிக்க சென்னை குற்றப் புலனாய்வு பிரிவு உதவி கமிஷன் ஜான் விக்டர் தலைமையிலான போலீசார் நேற்று காரைக்குடி வந்தனர். கோட்டையூருக்கு சென்ற அவர்கள் அழகப்பனுக்கு சொந்தமான வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் இந்த விசாரணை மற்றும் சோதனை நடந்தது. அப்போது அழகப்பனின் குடும்ப உறுப்பினர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    வீட்டில் கவுதமியின் சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என சல்லடை போட்டு போலீசார் சோதனை மேற்கொண்ட னர். இதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர். மதியம் தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவையும் தாண்டி விடிய விடிய நடந்தது. இதில் மோசடி தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    காரைக்குடியில் தொழிலதிபர் அழகப்பன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதை காணலாம்

    இன்று அதிகாலை வீட்டிலிருந்து கைப்பற்றிய சில ஆவணங்களுடன் போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மேலும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட அறைகளுக்கு சென்னை குற்றப்பிரிவு போலீசார் பூட்டி சீல் வைத்தனர். விரைவில் அழகப்பன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    பல வருடங்களாக பாரதிய ஜனதாவில் இருந்த நடிகை கவுதமி இந்த மோசடி புகார் விவகாரத்தில் அதிருப்தி அடைந்து அக்கட்சியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×